TNPSC Thervupettagam

கண்ணடைப்பும்.. கண்துடைப்பும்!

May 26 , 2022 804 days 428 0
  • இரு ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறை அருகே தனியார் ஒருவரின் ஆழ்துளைக் கிணற்றில் அவரது குழந்தை விழுந்த நிகழ்வு எளிதில் மறக்கக் கூடியதல்ல. அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் சம்பவ இடத்திலேயே சில நாள்கள் முகாமிட்டு நேர்முக வர்ணனை போல மீட்புப் பணிகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து வந்தார். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்க, அன்றைய முதல்வர் அரசு சார்பில் ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவிக்க, அதிமுக கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் அறிவிக்கப்பட்டது. இப்படி போட்டி போட்டுக் கொண்டு இழப்பீடு அறிவித்த வேடிக்கை அன்று அரங்கேறியது.
  • தனிநபர் ஒருவருடைய சொந்த இடத்தில் அவரது அசிரத்தையால் ஏற்பட்ட சம்பவத்துக்கு ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டதை இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது. குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் என்கிற மனிதாபிமான உணர்வைத் தவிர, அந்த நிகழ்வுக்கு வேறு எந்த முக்கியத்துவமும் இருந்ததாகத் தெரியவில்லை.
  • அப்போது ஊடகங்கள் காட்டிய பரபரப்பையும், முக்கியத்துவத்தையும், அதைவிட முக்கியமான ஏனைய பல நிகழ்வுகளில் ஏன் கையாள்வதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. பட்டாசுத் தயாரிப்பின்போது வெடிவிபத்து, கல் குவாரியில் பாறை சரிந்து ஏற்படும் விபத்துகளில் சிலர் உயிரிழப்பது போன்றவை ஓரிரு நாள்கள் ஊடகங்களில் இடம்பெற்று மறக்கப்படுகின்றன. காட்சி ஊடகங்களுக்கு வேறு பரபரப்பு அரசியல் செய்திகள் இருந்தால் இவை முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்த கல்குவாரி விபத்து.
  • திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வெடிவைத்து உடைத்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் (செயற்கை மணல்) போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இங்கு, கடந்த மே 14-ஆம் தேதி இரவு உடைக்கப்பட்ட கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாறைகள் சரிந்ததில் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். ஆறு பேரில் நான்கு பேர் உயிரிழந்தனர். இரு இளைஞர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.
  • இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் நிவாரண நிதியை அரசு அறிவித்தது. கல்குவாரியின் உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் கல்குவாரிகள் ஆய்வு செய்யப் படுகின்றன.
  • இந்த குவாரியிலிருந்து கற்களைக் கொண்டு செல்வதற்கான நடைச்சீட்டு உரிமம் கடந்த ஏப்ரல் மாதமே ரத்து செய்யப்பட்டிருப்பதாக இப்போது அறிவிக்கப்படுகிறது. இந்த கல்குவாரியில் 60 அடி ஆழம் மட்டுமே கற்களை எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 400 அடிக்கும் கீழே பள்ளம் தோண்டி கற்களை எடுத்துள்ளனர்.
  • இதுபோன்ற கல் குவாரிகளில் வட்ட வடிவில் பாதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் பாறை விழுந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். இந்த குவாரியில் இந்த விதியும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த குவாரியில் விபத்து நடைபெற்றதால் இந்த விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
  • குவாரி நடத்துவதற்கு, கனிமவளம், வருவாய், வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் வழங்குவதில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பங்கு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உரிமம் பெறாத கல்குவாரிகளினால் அவர்கள் அடையும் ஆதாயம் குறித்தும் விளக்க வேண்டிய அவசியமில்லை.
  • நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் - ஆணையரின் அறிக்கையை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல்  சட்டவிரோதமாக செயல்பட்ட 64 கல்குவாரிகளை மூட உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக நீண்டகாலமாகவே புகார் இருந்து வருகிறது.
  • சிவகாசியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு கட்டடம் தரைமட்டமாவதும், அதில் சிக்கி ஒருசிலர் உயிரிழப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. அப்படி நேரும்போதெல்லாம் அதிகாரிகள் சொல்லும் காரணம், அந்த தொழிற்சாலை முறையான அனுமதி பெறவில்லை என்பதுதான்.
  • உரிமம் பெறாத கல்குவாரிகள், அனுமதி பெறாத பட்டாசு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்காக எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் கோரியதாகத் தெரியவில்லை. எல்லோருக்குமே இதில் பங்குண்டு என்பது அதன் ரகசியமாக இருக்கக் கூடும்.
  • பல துறைகளிலும் ஊழல் புரையோடிப் போயிருப்பதால், விதிகள் மீறப்பட்டு மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. ஒரு சம்பவம் நிகழும்போது, சுறுசுறுப்பாக இருப்பதுபோல நடவடிக்கைகள் எடுப்பதும், அதன்பின்னர் பழைய நிலையே தொடர்வதும் தான் வழக்கமாக இருந்து வருகிறது.
  • சுற்றுச்சூழலையும், மனித உயிர்களையும் காப்பதற்கும், முறைகேடுகளைத் தடுப்பதற்கும் பெயரளவு நடவடிக்கைகள் போதாது. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உடனடியாக ஒரு சிலர் கைது போன்றவை கண்துடைப்பு நடவடிக்கைகள். தொடர்புடைய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • வேலியே பயிரை மேயும்போது, அதை யாரால் தடுத்திட முடியும்?

நன்றி: தினமணி (26 – 05– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்