TNPSC Thervupettagam

கண்ணோட்டம் மாற வேண்டும்!

September 25 , 2024 62 days 130 0

கண்ணோட்டம் மாற வேண்டும்!

  • சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனது உடலைத் தானம் செய்ததன் மூலம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். பெரும்பாலான மக்கள் உறுப்பு தானம் செய்யத் தயங்குவதை இதுபோன்ற முன்னுதாரணங்களின் மூலம்தான் அகற்ற முடியும்.
  • கேரள மாநிலம், கொச்சியில் காலமான மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.எம்.லாரன்ஸின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருக்கும் இடத்தில், அவரது குடும்பத்தினர் சண்டையிட்டுக் கொண்டது விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரது உடலை கொச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்குவதற்கு மகள் ஆஷா எதிர்ப்புத் தெரிவித்தார். கேரள உயர்நீதிமன்றத்தில், தனது சகோதரனும் சகோதரியும் எடுத்த முடிவை எதிர்த்து தடையுத்தரவு வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தார்.
  • களமசேரி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, கேரள உடற்கூறு சட்டத்தின் அடிப்படையில் முடிவெடுக்க உத்தரவு வழங்கியிருக்கிறது. காலமானவரின் அனுமதி எழுத்துபூர்வமாக இருக்கத் தேவையில்லை என்றும், ஒரு சிலருக்கு முன்னால் வாய்மொழி அனுமதி வழங்கியிருந்தால் போதும் என்றும் அவரது சகோதரனும் சகோதரியும் கருத்துத் தெரிவிக்கின்றனர். பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துகொண்ட ஒரு தலைவரின் இறுதி அஞ்சலியில் இப்படி நேர்ந்தது மிகப் பெரிய துரதிருஷ்டம்.
  • இந்தியாவில் உறுப்பு தானம் செய்வது என்பது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதிலும் குறிப்பாக, சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றுக்குக் காணப்படும் கடுமையான பற்றாக்குறை அதிர்ச்சி அளிக்கிறது.
  • சமீபத்தில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் சந்தித்த வழக்கு இது. தன்னுடைய சகோதரனுக்கு தனது சிறுநீரகத்தை ஒரு பெண்மணி தானம் செய்ய முன்வந்தபோது, அந்தப் பெண்மணியின் கணவரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று மருத்துவமனை வற்புறுத்தியது. சட்டத்தில் அதுபோன்ற ஒப்புதல் கோரலுக்கு இடமில்லை என்றாலும் கூட சமூக அழுத்தம் காரணமாக, மருத்துவமனைகளும் மருத்துவர்களும் ஒப்புதல் கேட்பது வழக்கமாகி இருக்கிறது.
  • பெண்மணியின் விருப்பப்படி, தனது சிறுநீரகத்தைத் தானம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதுபோன்ற உத்தரவு புதிதொன்றுமல்ல. ஆண்டுதோறும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உறுப்பு தானத்துக்கு கணவரின் ஒப்புதல் குறித்த வழக்குகள் வருவதும், நீதிபதிகள் அது தனிமனித உரிமை என்று தீர்ப்பளிப்பதும் தொடர்கிறது.
  • ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியாவின் உறுப்பு தானச் செயல்பாடு என்பது பெண்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஐந்தில் நான்கு உறுப்பு தானம் செய்த பெண்கள் இருக்கிறார்கள் என்றால், உறுப்பு தானம் பெற்ற ஐந்தில் நான்கு பேர் ஆண்கள்.
  • இரண்டாவதாக, பெரும்பாலும் உறுப்பு தானம் தாயார்களும், மனைவிகளும் தங்களது மகன்களுக்கும் கணவர்மார்களுக்கும் வழங்குவதாகவே இருக்கிறது. மூன்றாவதாக, திருமணமான பெண் தன்னுடைய சகோதரனுக்கோ, தந்தைக்கோ, தாய்க்கோ, சகோதரிக்கோ உறுப்பு தானம் வழங்க வேண்டும் என்றால், கணவனிடமிருந்தும் அவருடைய குடும்பத்தாரிடமிருந்தும் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது.
  • பெரும்பாலான சிறுநீரக தானம் செய்யும் மனைவியர் கணவனின் குடும்பத்தாராலோ, கணவராலோ வற்புறுத்தப்பட்டுதான் அதற்கு உடன்படுகிறார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு தங்களது உடலின் உரிமை கணவனுக்குச் சென்றுவிடுகிறது என்கிற கருத்தாக்கம் பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதால், அவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
  • தங்களது கணவனுக்கு மனைவி உறுப்பு தானம் வழங்குவதை யாரும் கேள்வி கேட்பதில்லை. தனது பிறந்த வீட்டுச் சொந்தங்களுக்கோ, அந்நியர்களுக்கோ உறுப்பு தானம் செய்ய முன்வரும்போதுதான் பிரச்னை எழுகிறது. மருத்துவமனைகளில் உறுப்பு தானம் செய்வதை அங்கீகரிக்க அனுமதிக் குழுக்கள் இருக்கின்றன. அவை பாரபட்சமாக நடக்கின்றன என்பது குறித்த குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது.
  • 1995 முதல் 2021 வரையிலான உறுப்பு தானம் குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் நடந்த 36,640 உறுப்பு மாற்று சிகிச்சைகளால் பயனடைந்தவர்கள் 29 ஆயிரம் ஆண்களும், 6,945 பெண்களும். ஆண்களில் பெரும்பாலானோர் உயிரிழந்த பிறகு உறுப்பு தானம் செய்தவர்கள் என்றால், பெரும்பாலான பெண்கள் உயிரோடு இருக்கும்போது, தங்களது உறுப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியவர்கள்.
  • உலகிலேயே மிகக் குறைந்த அளவு உறுப்பு தானம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 40 பேர் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்றால், இந்தியாவில் ஒருவர்தான் முன்வருகிறார். அதேபோல உறவினர் அல்லாதவர்கள் உறுப்பு தானம் செய்வது மிக, மிகக் குறைவாக இருக்கிறது.
  • கடந்த சில ஆண்டுகளாக மரணத்துக்குப் பிறகு உடல் உறுப்பு தானம் செய்வது என்பது ஓரளவுக்கு வரவேற்பு பெறத் தொடங்கியிருக்கிறது. கண்தானம் என்பதும் ரத்த தானம் என்பதும் மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு பெற்றிருப்பதைப் போல, உறுப்பு தானமும் வரவேற்பு பெறுமானால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.
  • தோழர் சீதாராம் யெச்சூரி போல, ஏனைய அரசியல் தலைவர்களும் முன்னுதாரணமாகத் திகழ்வார்களாக!

நன்றி: தினமணி (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்