TNPSC Thervupettagam

கதுவா தரும் ஆறுதல்!

June 13 , 2019 1992 days 1005 0
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த எட்டு வயதுச் சிறுமியின் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கின் மீதான தீர்ப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றியதற்கு மிக முக்கியமான காரணம், முறையாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறது பதான்கோட் விசாரணை நீதிமன்றம்.
விசாரணை நீதிமன்றம்
  • பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிலுள்ள விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. காவல் துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சிறப்பு காவல்துறை அதிகாரி சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகிய மூவருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.
  • குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து பாலியல் வன்கொடுமை கொலைக்கு ஆளான சிறுமியின் உடையிலிருந்த ரத்தக் கறையைக் கழுவியது, கழுத்திலிருந்த மாலையையும் தலையிலிருந்த ரிப்பனையும் மறைத்தது என்கிற உதவிகளைச் செய்த காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் ஐந்தாண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை.
கொடூரமானவை
  • 2018-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஜம்முவிலுள்ள கதுவா என்கிற இடத்தில் நடந்த கொடூரமான சம்பவம் இது. பக்கர்வால் என்கிற ஆடு மேய்க்கும் முஸ்லிம் இனத்தவர், ஜம்முவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுமாக மாறி மாறி வாழும் நாடோடிக் கூட்டத்தினர். கதுவா என்கிற ஊரில் இந்தக் கூட்டம் ஆண்டுதோறும் முகாமிடும்போது அவர்களை அச்சுறுத்தி அகற்றுவதற்கான முயற்சிகள் பலமுறை நடந்தன. ஒருநாள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு கதுவாவிலுள்ள கோயில் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டார். போதை மருந்து தரப்பட்டு பலராலும் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டார்.
  • அந்தச் சிறுமி இறக்கும் நிலையில், தனக்குக் கடைசியாக இன்னொரு வாய்ப்புத் தரும்படி அந்தக் கூட்டத்தில் இருந்த காவல் துறையினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார் என்றால், எந்த அளவுக்குக் கொடூரமான செயலாக அந்தப் பாலியல் வன்கொடுமை இருந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • அந்தச் சிறுமி கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், அந்தக் கொலை மறைக்கப்பட்டது. அந்தக் கொலையை மறைப்பதற்கு கதுவா காவல் நிலையத்தைச் சேர்ந்த சிலர் உதவினார்கள். நான்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தச் சிறுமியைக் கடைசியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்கள். பக்கர்வால் நாடோடிக் கூட்டத்தை எச்சரிப்பதற்காக நடத்தப்பட்ட செயல் இது.
வழக்கு
  • கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியை அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. அடக்கம் செய்யும் இடம் நாடோடிக் கும்பலுக்குச் சொந்தமானதல்ல என்றும், சட்டவிரோதமாக இத்தனை ஆண்டுகளாக அந்தக் கும்பல் கதுவாவில் தங்குவதும், இறந்தவர்களை அடக்கம் செய்வதுமாக இருக்கிறது என்றும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.
  • வழக்குப் பதிவு செய்வதற்குக்கூட மிகப் பெரிய எதிர்ப்பு. கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் வாதாட அரசு வழக்குரைஞர் உள்பட கதுவாவிலுள்ள எந்த ஒரு வழக்குரைஞரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக பதான்கோட் விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
  • ஒருபுறம் கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் ஜம்மு-காஷ்மீர் மாநில வழக்குரைஞர்கள், காவல் துறையினர், நீதித் துறையினர் ஆகியோரின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் இருந்தாலும்கூட, சில பாராட்டுக்குரிய அம்சங்களையும் எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. மிக விரைவாக விசாரணையை சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்டு இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது பாராட்டுக்குரியது.
தீர்ப்பு
  • வழக்கு விசாரணை ஓராண்டு நீடித்தது என்றாலும், சம்பவம் நடந்த 17 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. விசாரணை நீதிபதி செஜ்வேந்தர் சிங்கின் அணுகுமுறையில், அவர் சாட்சிகளின் வாக்குமூலத்தை எடுத்துக்கொண்ட விதம் மேல்முறையீட்டின்போது எடை போடப்படும்.
  • கடந்த ஆண்டு 12 வயதுக்குக் கீழே உள்ள சிறுமிகள் தொடர்பான பாலியல் கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் போஸ்கோ சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் கதுவா வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சஞ்சீவ் ராம், பர்வேஷ் குமார், தீபக் கஜூரியா ஆகியோருக்கும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் துறையினருக்கும் ஏன் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்கிற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
சிறுமிகளுக்கு  எதிரான கொடுமை
  • சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் விடுவிக்கப்பட்டிருப்பது, அவர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்பதைத்தான் எடுத்துரைக்கிறது. கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடாமல் இருக்கிறது.
  • அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டால்தான் போஸ்கோ சட்டத்தின் மீதான மரண தண்டனை அச்சம் எந்த அளவுக்குச் செயல்பட்டிருக்கிறது என்பது தெரியும். அலிகர், போபால் என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், கதுவா சம்பவத்தின் மீதான தீர்ப்பு வரவேற்புக்குரியதாகவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது.

நன்றி: தினமணி (13-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்