TNPSC Thervupettagam

கனடா விவகாரம் கவனமான ராஜதந்திரம் அவசியம்

September 22 , 2023 482 days 292 0
  • ஜி20 மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் சூழலில், காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையை முன்வைத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கசப்புணர்வு முளைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
  • ஜூன் 18 அன்று, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியது, இந்தப் பிரச்சினையின் தொடக்கப் புள்ளி.
  • அதன் பிறகு, இரு தரப்பும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றியது, மேற்கத்திய நாடுகளிடம் கனடா முறையிட்டது, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க இந்தியா அறிவுறுத்தியது, மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தப் பட்டிருப்பது எனச் சிக்கல் அதிகரித்திருக்கிறது.
  • சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்களால், கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்தியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்துகொண்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்துவதும் தொடர்கிறது.
  • கூடவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முதல் கடத்தல்காரர்கள் வரை பலரின் சொர்க்கபுரியாகக் கனடா திகழ்வதாக இந்தியா குற்றம்சாட்டியிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், போலி பாஸ்போர்ட்மூலம் கனடாவுக்குச் சென்றவர் என்பது கவனிக்கத்தக்கது. இப்படியான சூழலில் வலுவான ஆதாரம் எதுவுமின்றி இந்தியாவைக் கனடா குற்றம்சாட்டியது தவறு.
  • பொக்ரான் அணு ஆயுதச் சோதனை தொடங்கி, டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் வரையிலான பல்வேறு தருணங்களில் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நாடு கனடா. சமீபத்தில் ஜி20 மாநாட்டுக்காக டெல்லி வந்திருந்த கனடா பிரதமர் ட்ரூடோ, பிரதமர் மோடியை அதிகாரபூர்வமாகச் சந்திக்கவில்லை. இந்தியாவில் இம்மாநாடு நடந்துகொண்டிருந்தபோதே, கனடாவில் காலிஸ்தான் தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பு தனியாரால் நடத்தப் பட்டிருக்கிறது.
  • ட்ரூடோ தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு, ஆதரவளிக்கும் மிக முக்கியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியானது (என்டிபி) பெருமளவில் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கொண்டது. கனடாவின் பொது அமைதிக்குக் காலிஸ்தான் இயக்கம் அச்சுறுத்தலாக இருப்பதாக ட்ரூடோ தலைமையிலான தாராளவாதக் கட்சி 2018இல் வெளியிட்ட அறிக்கைக்கு, புதிய ஜனநாயகக் கட்சியின் கடும் எதிர்ப்பால் அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற நேர்ந்தது. அந்த அளவுக்கு அக்கட்சியை ட்ரூடோ சார்ந்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராகப் பகிரங்க நிலைப்பாட்டை அவர் எடுக்க இது முக்கியக் காரணமாகக் கருதப் படுகிறது.
  • நல்வாய்ப்பாக, கனடாவின் குற்றச்சாட்டை மேற்கத்திய நாடுகள் முழுமையாக ஆதரிக்கவில்லை. பெரும் வணிகச் சந்தையைக் கொண்ட இந்தியாவை வல்லரசுகள் அவ்வளவு எளிதில் பகைத்துக்கொள்ளாது. 2022 நிலவரப்படி இந்தியாவில்தான் அதிக அளவிலான முதலீடுகளைக் கனடா செய்திருக்கிறது. 2
  • 2021 நிலவரப்படி, அந்நாட்டின் பொருளாதாரத்தில் 4.9 பில்லியன் டாலர், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மூலம் கிடைத்திருக்கிறது. இந்தச் சூழலில், கசப்புத்தன்மை மேலும் வளராமல் இந்தியா கவனமாகக் காய்நகர்த்துவது அவசியம்.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு தொடரும் என்பது இன்றைய சூழலில் நம்பிக்கை அளிக்கும் செய்தி. இவ்விஷயத்தில் மத்திய அரசுக்குக் காங்கிரஸ் கட்சி தார்மிக ஆதரவளித்திருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உதாரணம். ராஜதந்திர நடவடிக்கைகள், சாதகமான முன்னெடுப்புகள் மூலம் இந்தப் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்