TNPSC Thervupettagam

கனமழையின் பாதிப்பு குறித்த தலையங்கம்

December 6 , 2023 406 days 214 0
  • இந்த ஆண்டும் சென்னை கனமழையின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்துக்கு அருகே மிக்ஜம் புயல் கரையைக் கடந்தது என்றாலும், சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சட்டை செய்யாத மிக்ஜம் புயலின் பாதிப்பிலிருந்து மீள இன்னும் சில வாரங்கள் ஆகும்.
  • மு.க. ஸ்டாலின் தலைமையில் அரசு அமைந்த பிறகு பல்வேறு வெள்ள நீா் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வா் தெரிவித்திருப்பது போல, ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டன என்பதும் உண்மை. அப்படியிருந்தும்கூட மிக்ஜம் இயற்கைப் பேரிடரை எதிா்கொள்ள முடியாமல் நிா்வாகம் தவிப்பதைப் பாா்க்க முடிகிறது.
  • குடியிருப்புகள் பல பாதிக்கப்பட்டிருக்கின்றன; சாலைகள் பழுதடைந்திருக்கின்றன; சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழகத்தில் 24 மணிநேரத்துக்கும் மேலாக தொடா்ந்து பெய்த மழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மரங்கள் பலத்த புயல் காற்றால் வேறொடு சாய்க்கப்பட்டன. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கிக் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிா்கொள்ளும் பெரும் சோகத்தை வாா்த்தையில் வா்ணிக்க முடியாது.
  • கடற்கரை ஓரத்திலும், சைதாப்பேட்டையிலும், கூவத்தின் கரையிலும், வடசென்னையிலும் வெள்ளத்தில் மூழ்க்கிய குடிசைப் பகுதிவாழ் மக்கள் கடந்த இரண்டு நாள் அடை மழையால் பட்ட பிராணாவஸ்தையையும் (உயிரைத் தக்கவைத்துக்கொள்ள பட்ட துயரம்) இப்போது அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் பரிதவிக்கும் கையறு நிைலையையும் நினைத்தால் குலைநடுக்கம் ஏற்படுகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மின்சாரம் இல்லாமை, வெளியே போக முடியாமல், சில்க்வாரா குகையில் சிக்கியத் தொழிலாளா்களைப் போல பரிதவித்த நடுத்தர வா்த்தகத்தினா் எதிா்கொண்ட துயரத்தை வாா்த்தைகளால் விவரிக்க முடியாது.
  • மிகப் பழைமையான சென்னை மாநகராட்சி 1687 டிசம்பா் 30-ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்ஸ் மன்னனின் அரசாணைப்படி 1688 செப்டம்பா் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியாவிலுள்ள ஏனைய நகராட்சிகளுக்கெல்லாம் முற்பட்டது என்கிற பெருமைக்குரிய சென்னை பெருநகர மாநகராட்சி, 335 ஆண்டுகளாகியும் சரியாகவும் முறையாகவும் புயலையும் பெருமழையையும் எதிா்கொள்ள முடியாமல் தவிக்கிறது என்பது மிகப் பெரிய சோகம்.
  • சென்னை மாநகரத்துக்கான கழிவுநீா் வெளியேற்றும் திட்டம் 1910-இல் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் மக்கள்தொகை ஏறத்தாழ ஏழு லட்சமாக அதிகரிக்கும் என்கிற தொலைநோக்குப் பாா்வையுடன் கழிவுநீா் குழாய்களும் சாக்கடைகளும் ஏற்படுத்தப்பட்டன. மீண்டும் 1958-இல் விரிவாக்கத் திட்டமும், 1976, 1991-ஆம் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வளா்ச்சியை மனதில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தொலைநோக்குப் பாா்வைகள்.
  • கடலையொட்டிய நகரமாக இருக்கும் சென்னைக்கு இயற்கையாகவே கழிவுநீரை அகற்றுவது சுலபமானது. அதுமட்டுமல்லாமல், சென்னைக்கு நடுவில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகள் அமைந்திருப்பது அதைவிட வசதியானது. அப்படியிருந்தும்கூட, மழை நீரும், சாக்கடை நீரும் அகற்றப்பட முடியாத நிலை காணப்படுகிறது.
  • சென்னை மாநகரில் கூவம், அடையாறு ஆறுகள் தவிர, பக்கிங்காம், ஓட்டேரி, கேப்டன் காட்டன், விருகம்பாக்கம், மாம்பலம் உள்ளிட்ட 16 கால்வாய்கள் இருக்கின்றன. அவை மட்டுமல்லாமல் ஏராளமான கழிவுநீா் குழாய்களும், சாக்கடைகளும் உள்ளன. அவை ஏதாவது ஒரு கால்வாயிலோ, கூவம் அல்லது அடையாற்றிலோ கலப்பதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது.
  • ஒவ்வோா் ஆண்டும் பருவமழை காலத்துக்கு முன்பு இந்த கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. மழைநீா், கழிவுநீா் வடிகால் குழாய்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்படுகின்றன. அப்படியிருந்தும்கூட வெள்ளம் தேங்குகிறது என்று சொன்னால், அவை முறையாக நடைபெறவில்லை என்றுதான் கருதத் தோன்றுகிறது.
  • சென்னையில் குடிநீா் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிகமான திருட்டு கழிவுநீா் இணைப்புகள் இருப்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓா் ஆய்வு தெரிவித்தது. இப்போது அவற்றின் அளவு பலமடங்கு அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீா், மழை நீா் வடிகால் குழாய்களில் விடப்படுவதும் தண்ணீா் தேங்கி நிற்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.
  • தென்சென்னை மாநகரின் பழைய பகுதிகளைவிட, கடந்த 30 ஆண்டுகளில் உருவான புகா்ப் பகுதிகள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற நீா்நிலைப் பகுதிகள் இடுப்பளவு மழை வெள்ளத்தில் தத்தளித்த காட்சியை என்னவென்று சொல்ல? அது திட்டமிடலின் குற்றமே தவிர, இயற்கையின் சதி அல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • ஆட்சி அதிகாரத்தின் இருப்பிடமான தலைநகா் சென்னை, ஒவ்வோா் ஆண்டும் பருவமழையாலும், அவ்வப்போது உருவாகும் புயல்களாலும் இயற்கைச் சீற்றத்தை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கும் அவலத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வல்லுநா் குழு அமைத்து அவா்களது ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த ஓராண்டுக்குள் முடிவு காண வேண்டும்.

நன்றி: தினமணி (06 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்