கனவாகிப் போகுமா கனவு இல்லம்?
- தமிழ்நாடு அரசு அறிவித்த மற்றொரு வரவேற்புக்குரிய திட்டம், ‘எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம்’ வழங்குதல். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 97ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, ‘தமிழ் எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம்’ திட்டத்தை அரசு அறிவித்தது. சாகித்திய அகாடமி விருது உள்ளிட்ட நான்கு முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்று தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஆண்டுக்குப் பத்துப் பேர் வீதம், அவர்கள் விரும்பும் மாவட்டத்தில், விரும்பும் ஊரில், ஐந்து சென்ட் நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படும், சென்னை மாநகரத்தில் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கப்படும் குடியிருப்பில் வீடு வழங்கப்படும்’ என்ற வரவேற்கத்தக்க அறிவிப்பைச் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர்.
- அரசின் கனவு இல்லம் திட்டம் எழுத்தாளருக்கு அவர் சொந்தக் குடும்பத்தினர், உறவினர் மத்தியில் நன்மதிப்பையும் பெருமையையும் வாங்கித் தந்திருக்கிறது. அரசு தரும் அங்கீகாரம், எழுத்தாளரின் வீட்டில் அவருக்கான எழுத்து நடவடிக்கையை மேம்படுத்திக்கொள்ளத் துணைநிற்கிறது.
- இந்தத் திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் விருதாளர்களுக்கு வீடுகள் வழங்கி அரசாணை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு, தன்னுடைய அரசாணையைத் திருத்தி இரண்டாவது அரசாணையை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அரசாணையில், ‘விருதாளர்கள் ஏற்கெனவே சொந்தமாக வீடு வைத்திருந்தாலும் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் மற்றொரு வீட்டைப் பெறலாம்.
- எனினும், விருதாளரோ அல்லது அவரின் கணவர் / மனைவி அரசு விருப்புரிமைத் திட்டம் உள்பட ஏனைய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டம் (அல்லது) அரசு/அரசு நிறுவனம் (அல்லது) மாவட்ட ஆட்சியர் மூலமாக அடுக்குமாடிக் குடியிருப்பு (Flat) அல்லது மனை (Plot) அல்லது தனி வீட்டினைச் சலுகை விலையிலோ அல்லது விலை இன்றியோ அல்லது சந்தை விற்பனை விலையிலோ ஏற்கெனவே பெற்றிருப்பின் இத்திட்டத்தின் கீழ் பயனாளியாகத் தேர்வுசெய்ய இயலாது’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.
- ஏற்கெனவே வீடு ஒதுக்கீடு செய்து, ஆணை பிறப்பித்த விருதாளர்களில் சிலருக்கு, இரண்டாவது அரசாணையினை இரண்டாண்டுகள் பின்னோக்கி அமல்படுத்தி, ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது அரசு. பொதுவாக அரசாணைகள், அவை பிறப்பிக்கப்படும் தேதியில் இருந்தோ, முன் தேதியிட்டோ நடைமுறைக்கு வரும். பின்னோக்கிய காலத்திற்கு அமல்படுத்தப்படுவதில்லை. முதல்வர் அரசாணை கொடுக்கப்பட்ட பிறகு, பின் தேதியிட்டு, ஒதுக்கீட்டை ரத்து செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.
- தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணையின் திருத்தமும் விந்தையானதே. விருது பெறுபவர்களின் பெயரில்/ அவர்களது துணைவரின் பெயரில் வீடு இருக்கலாம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மட்டும் வீடு இருக்கக் கூடாதாம். தனியார் விற்பனையாளர்களிடமோ, சொந்தமாகவோ வீடு வாங்கியிருக்கலாம். அவற்றின்
- மதிப்பு பற்றியும் கேள்வி கிடையாது. அரசிடம் வீடு வாங்கியது பெரும் தவறு என்பதுபோல் இருக்கிறது இந்த அரசாணை. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஏதேனும் சிறப்பு ஒதுக்கீட்டிலோ, சலுகை விலையிலோ வீடு வாங்கியிருக்கும் விருதாளர்களுக்குக் கனவு இல்லம் இல்லையென்று சொன்னால், அதன் நியாயத்தைப் புரிந்து
- கொள்ள முடியும். சந்தை விலையில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கியிருக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?
- கனவு இல்லம் என்பது விருதுக்காகத்தானே தவிர, விருதாளருக்கு அல்ல என்று முதல் அரசாணையில் (03.06.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 12 – 2024)