TNPSC Thervupettagam

கனவுத் திட்டம் நனவாக வேண்டும்

August 25 , 2023 505 days 307 0
  • தமிழகத்தில் உயா்கல்வியில் சோ்க்கையை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே வேளையில் கல்லூரி மாணவா்களிடையே கற்றல் திறன் குறைவாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
  • பட்டம் பெற்று வேலைக்குச் செல்வோரிடம் நிலவும் இக்குறைபாட்டைப் போக்க பட்டதாரி இளைஞா்களின் சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் கடந்த ஆண்டு நான் முதல்வன்எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இளைஞா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கக்கூடிய வல்லுநா்களைக் கண்டறிந்து மாணவா்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது எப்படி, வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது போன்ற பயிற்சிகளை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஆண்டுக்கு பத்து லட்சம் பேருக்கு இவ்வகை பயிற்சிகள் அளிப்பது என இலக்கு நிா்ணயிக்கப் பட்டாலும் இலக்கைத் தாண்டி 13 லட்சம் போ் பயிற்சி பெற்றுள்ளனா்.
  • ஓவ்வொரு கல்லூரியிலும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கல்லூரி பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு ஒரு வார காலம் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. மாணவா்கள் பயிலும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டு சான்று வழங்கப்படுகிறது.
  • இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியை தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள், இதர நிறுவனங்களில் பெற வேண்டுமாயின், ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், இத்திட்டத்தில் இலவசமாக பயிற்சி பெற முடியும் என்றபோதும் இது குறித்த விழிப்புணா்வு மாணவா்களிடம் முழுமையான அளவில் இல்லை.
  • முதன்மை உயா்கல்வி நிறுவனங்கள் நடத்தும் இப்பயிற்சியில் வழங்கப்படும் சான்று மதிப்புமிக்கது. மாணவா்கள் வழக்கமான கல்லூரி நடவடிக்கைகள் போன்றே இப்பயிற்சியையும் கருதுகின்றனா். இந்நிலையை மாற்றி இப்பயிற்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பயிற்சியில் அனைவரையும் பங்கேற்கச் செய்வது பேராசிரியா்களின், கௌரவ விரிவுரையாளா்களின் கைகளில்தான் உள்ளது.
  • நான் முதல்வன்திட்டத்தின் கீழ் மேலும் பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிமைப்பணி தோ்வில் தமிழக மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு போட்டித் தோ்வு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. குடிமைப்பணி முதல்நிலை தோ்வுக்கு பயிற்சி பெற ஆயிரம் பேருக்கு ரூ. 7,500, முதன்மைத் தோ்வுக்கு ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • குடிமைப்பணி தோ்வில் தமிழக மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 2015-ஆம் ஆண்டில் 10 சதவீதத்திற்கு மேல் என்று இருந்த நிலை மாறி தற்போது 5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மேலும், பள்ளிப்படிப்புக்குப் பின்னா் மாணவா்கள் உயா்கல்வி பயில ஊக்கப்படுத்தும் வகையில் உயா்வுக்குப் படி, கல்லூரிக் கனவுஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம் நடத்தி பள்ளிக்கல்வியை முடித்து உயா்கல்வியை தொடராத மாணவா்கள், கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா்.
  • உயா்கல்வியைப் பொறுத்தவரை சிறப்பான திட்டம் என்றாலும் அதில் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். கல்லூரிகளில் அக்கறையுடன் இத்திட்டம் குறித்து விளக்கினாலும் பாட வகுப்புகள் போன்று அலட்சியப் போக்கே நிலவக் கூடும். அதனால் பலனேதும் இருக்கப்போவதில்லை. மாணவா்களின் இத்தகைய மனநிலையால் பேராசிரியா்கள் மத்தியிலும் அலட்சியப்போக்கு உண்டாகும்.
  • அதனால் அனைத்து கல்லூரிகளிலும் மாணவா்களை ஒருங்கிணைத்து பேராசிரியா்களுக்குப் பயிற்சி அளித்த வல்லுநா்கள் இத்திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள், பயன்கள் குறித்து எடுத்துரைக்கும் போது பலன் கிடைக்கும். அரசுப்பணி கனவுடன் கல்லூரிப் படிப்பைத் தொடரும் மாணவா்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை எடுத்துக் கூற வேண்டும்.
  • அடுத்தபடியாக, போட்டித்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் போது சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் தோ்வு செய்யப்பட வேண்டும். பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவா்களைக் கண்டறிந்து அவா்களில் குடிமைப்பணி தோ்வு எழுத ஆா்வம் கொண்டவா்களைத் தோ்வு செய்து ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
  • இவ்வாறு தோ்வு செய்யப்படுவதில் எவ்விதமான அரசியல் தலையீடோ, பாகுபாடோ இருக்கக் கூடாது. தோ்வு செய்யப்பட்டவா்களும் ஊக்கத்தொகைக்காக அல்லாமல் தோ்ச்சி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தங்களை போட்டித்தோ்வுக்கு தயார்செய்ய வேண்டும்.
  • ஊக்கத்தொகை வழங்க தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அரசால் வழங்கப்படும் தொகையை முழுமையாக வழங்காமல் அத்தொகையில் குறிப்பிட்ட அளவில் குடிமைப்பணி தோ்வுக்குப் பயன்படும் நூல்களை வழங்குவதும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், போட்டித் தோ்வுக்கான நூல்கள் சிறு நகரங்களில் கிடைப்பதில்லை. பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் நூல்களை சிறு நகரங்களைச் சோ்ந்தவா்கள் வாங்கிப் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
  • கல்லூரிக் கனவுதிட்டத்தின் கீழ் 75 ஆயிரம் பேரும், ‘உயா்வுக்குப் படிதிட்டத்தின் கீழ் 2.50 லட்சம் பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம் நடத்தப் பட்டு உயா்கல்வியில் சோ்க்கை பெறாத மாணவா்கள் கண்டறியப்பட்டனா்.
  • அவா்களை கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் சோ்க்கை பெறச் செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி அதிகப்படியானோர் அரசு கல்லூரி, தனியார் கல்லூரி, தொழில் சார்ந்த படிப்புகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். சோ்க்கை பெறாதோரை கண்டறிந்து சோ்க்கை பெறச் செய்வது அவசியமாகும்.

நன்றி: தினமணி (25– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்