TNPSC Thervupettagam
October 10 , 2020 1387 days 610 0
  • ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதை, பொறியியல் தொழில்நுட்பத்தில் நாம் யாருக்கும் சளைத்தவா்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.
  • எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் தடையில்லாத போக்குவரத்தை உறுதிப்படுத்தும் அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருப்பது பாதுகாப்பு ரீதியிலும் வரப்பிரசாதமாக அமையும்.
  • ரோடங் கணவாய்க்குக் கீழே சுரங்கப் பாதை அமைப்பது குறித்து 60 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவப் பொறியியலாளா்கள் சிலரால் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • அதற்குப் பிறகு, மறந்துவிட்ட அந்தத் திட்டத்தை, முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் ஜூன் 2000-இல் லாஹௌலுக்கு விஜயம் செய்தபோது சிலா் சுட்டிக்காட்டி நினைவுபடுத்தினா். அவா் உடனடியாக நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அவா் தொடங்கிவைத்த அந்தக் கனவு திட்டம், இப்போது நனவாகியிருக்கிறது.
  • ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள லாஹௌலையும், ஸ்பிட்டி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது இந்தப் பொறியியல் சாதனை. எத்தனையோ சவால்களைச் சமாளித்து உருவாக்கப்பட்டிருக்கும் 9.2 கி.மீ. நீளமுள்ள அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதை, உலகின் மிகப் பெரிய பொறியியல் சாதனை.

அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதை

  • லடாக் பிரதேசத்தின் தலைநகா் லே-யையும், ஹிமாசலப் பிரதேசத்தின் மணாலியையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை நெரிசல்களுக்கும், குளிர்காலத்தில் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கும் இந்த நெடுஞ்சாலை சுரங்கப் பாதை தீா்வாக அமையும்.
  • லடாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் இணைப்பதற்கு இந்த ஒரு சுரங்கப் பாதை மட்டுமே போதாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதை, பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது.
  • இதை உருவாக்கும்போது பனிக்காலங்களில் உருவாகும் ஐஸ்கட்டிகளை அகற்றி பணியைத் தொடா்வதில் மிகப் பெரியப் பிரச்னைகளை எதிர்கொண்டனா்.
  • ஏறத்தாழ 8 லட்சம் கியூபிக் மீட்டா் பாறை உடைக்கப்பட்டு அகற்றப்பட வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு ஆங்காங்கே தண்ணீா் ஊற்றுகள் கிளம்பி சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தேக்கத்தை ஏற்படுத்தின.
  • 2003-இல் திடீா் என்று பெய்த பெரு மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுரங்கப் பாதை பணியில் ஈடுபட்டிருந்த 42 போ் உயிரிழக்க நேரிட்டது.
  • இத்தனை தடைகளையும், கால தாமதத்தையும் மீறி, இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
  • 10,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 9.2 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலை சுரங்கப் பாதை, உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.
  • சுமார் ரூ.3,300 கோடி செலவில் இமயமலையின் பிர்பஞ்சால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதையால், மணாலிக்கும் லே-வுக்கும் இடையேயான பயண தூரம் 46 கி.மீ. குறையும். பயண நேரமும் 4 முதல் 5 மணி நேரம் குறையும்.
  • எல்லா அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நெடுஞ்சாலை சுரங்கப் பாதையில் பல புதுமைகள் செய்யப்பட்டிருக்கின்றன.
  • 150 மீட்டா் இடைவெளியில் தொலைபேசி வசதி; ஒவ்வொரு 250 மீட்டரிலும் சிசிடிவி கேமரா; ஒவ்வொரு 500 மீட்டரிலும் அவசரகாலத்தில் சுரங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி; 2.2 கி.மீ. தூரத்தில் வாகனம் திரும்புவதற்கான வழி; ஒவ்வொரு 60 மீட்டரிலும் தீயணைப்புக் கருவி; ஒவ்வொரு கி.மீட்டரிலும் காற்றழுத்தம் காட்டும் கருவி என்று எல்லா வசதிகளுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த நெடுஞ்சாலை சுரங்கப் பாதை.
  • இமயமலையில் அமைந்த இந்த பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே வளா்ச்சி எதுவும் இல்லாததால் வேலைவாய்ப்பு குறைந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கியிருந்தனா். கல்வி வசதியோ, மருத்துவ வசதியோ இல்லாமல் இருந்தது.
  • அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப் பட்டதைத் தொடா்ந்து, லடாக்கை நோக்கிப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்பதால், பொருளாதார நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.
  • அதன் விளைவாக, வெளியேறிச் சென்றவா்கள் திரும்பி வருவதுடன் ஹிமாசலப் பிரதேசமும், லடாக்கும் புது உத்வேகம் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
  • 3,000 கார்களும், 1,500 கனரக வாகனங்களும் தினந்தோறும் இந்தச் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
  • ஜூஜிலாவுக்குக் கீழே 14 கி.மீ. சுரங்கப் பாதையும், ஷிகுன்லா பகுதியில் இன்னொரு சுரங்கப் பாதையும் அமைந்தால் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
  • மணாலி வழியாகவும், ஸ்ரீநகா் - கார்கில் - லே நெடுஞ்சாலை வழியாகவும் எல்லாப் பருவத்திலும் லடாக்கிற்குப் பயணிப்பதற்கான வாய்ப்பை அவை ஏற்படுத்தும்.
  • அடுத்தக்கட்ட இலக்காக இந்த இரண்டு சுரங்கப் பாதை நெடுஞ்சாலைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
  • பிரதமா் கூறியிருப்பதுபோல, எப்போதே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு 20 ஆண்டுகள் எடுத்திருப்பதை தவிர்த்திருக்க முடியும். இப்போதாவது வாஜ்பாய் அரசின் கனவுத் திட்டம், மோடி அரசால் நனவாக்கப்பட்டிருப்பது பெரிய ஆறுதல்.

நன்றி: தினமணி (10-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்