TNPSC Thervupettagam

கனிம வளக் கொள்ளை: கொள்கை முடிவில் மாற்றம் தேவை

January 23 , 2025 54 days 94 0

கனிம வளக் கொள்ளை: கொள்கை முடிவில் மாற்றம் தேவை

  • மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த சமூகச் செயல்பாட்டாளரும் அதிமுக முன்னாள் கவுன்சிலருமான ஜகபர் அலி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கிவந்த கல் குவாரி தொடர்பாக ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களால் ஜனவரி 17 அன்று கொல்லப்பட்டார்.
  • கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் கனிம வளக் கொள்ளையர்களால் மிரட்டப்படுவதும் கொல்லப்படுவதும் இது முதல் முறையல்ல. 2023 ஏப்ரல் மாதம் தூத்துக்குடியில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திய கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்சிஸ் கொல்லப்பட்டார். 2022இல் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொல்லப்பட்டார்.
  • வேலூரைச் சேர்ந்த பிரசாந்த், தன் நிலத்துக்கு அருகில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து 2024இல் காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், அவரும் கொல்லப்பட்டார். 2023இல் தூத்துக்குடியில் நீர்நிலைகளிலும் அரசு நிலத்திலும் வரைமுறையற்றுக் காற்றாலைகள் நிறுவப்படுவது குறித்துப் புகார் அளித்த விவசாயி கொலை மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டார்.
  • சட்ட விரோதக் கனிம வளச் சுரண்டலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக யாரும் புகார் அளிக்கக் கூடாது என்பதற்கான பகிரங்க சவாலாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. தங்கள் பகுதியின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்களும், தங்கள் கடமையை முறையாகச் செய்யும் அரசு அதிகாரிகளும் இப்படிக் கொல்லப்படுவதும் மிரட்டப்படுவதும் ஆபத்தான போக்குகள். கடும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
  • கனிம வளக் கொள்ளை தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே இதுபோன்ற படுகொலைகளுக்கு முக்கியக் காரணம். மணல் குவாரி, கல் குவாரி உள்ளிட்டவற்றுக்கு அரசிடமிருந்து அனுமதியோ ஒப்பந்தமோ பெறும் நிறுவனங்களும் தனிமனிதர்களும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அளவுக்கு அதிகமாக இயற்கை வளங்களைச் சுரண்டுகிறார்கள்.
  • இந்தக் கொள்ளையில் புழங்கும் பணம் ஏராளமான முறைகேடுகளுக்கு வித்திடுகிறது. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற 16,000 கோடி ரூபாய் ஊழல் இந்தக் கொள்ளைகளுக்கும் இதில் நடைபெறும் ஊழலுக்கும் ஒரு சோறு பதம். அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாததால் உரிமம் நிறைவடைந்துவிட்ட பிறகும் பல குவாரிகளில் தொடர் கனிம வளக் கொள்ளை நடைபெறுவதையும் மறுப்பதற்கில்லை.
  • ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுவதாலும் மலைகள் உடைக்கப்படுவதாலும் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் சீர்குலைகிறது. தொடர் வறட்சி, திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவற்றுக்கு இவை வழிவகுக்கின்றன. மனித குல வளர்ச்சிக்கு ஆதரவான எந்தத் திட்டமும் இயற்கைக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் அரசு சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
  • “சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுவது மிகத் தீவிரமான விஷயம்” என்று பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததும், சட்டவிரோதமாகச் செயல்படும் மணல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு உத்தரவிட்டதும் மிக முக்கியமானவை.
  • இந்தச் சூழலில், கனிம வளங்களைக் கையாள்வதற்குத் தனியாருக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு தீவிரமான கொள்கைகளை வகுக்க வேண்டும். இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக, பாழ்படுத்துவதும் முற்றாக அழித்தொழிப்பதும் தடுக்கப்பட வேண்டும்.
  • கனிம வளங்களின் கட்டுப்பாட்டை அரசு தன்வசம் வைத்திருப்பதோடு, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அதை வெளிப்படைத் தன்மையோடு இயக்குவதே இதுபோன்ற கொள்ளைகளுக்கும், ஊழலுக்கும், கொலைகளுக்கும் தீர்வாக அமையும். மாறாக, இதில் தனிநபர்களும் பெருநிறுவனங்களும் நுழைகிறபோது, அது பெரும் சீர்கேட்டுக்குத்தான் வழிவகுக்கும் என்பதை அரசு கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top