TNPSC Thervupettagam

கன்னியாகுமரியில் சாம்பல்தலை ஆலா!

November 9 , 2024 68 days 84 0

கன்னியாகுமரியில் சாம்பல்தலை ஆலா!

  • மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் திரைக்கு வரும் பொழுது ரசிகர்கள் குதூகலிப்பார்கள் அல்லவா, அதுபோலத்தான் சில அரிய வகைப் பறவைகளின் வருகை பறவை ஆர்வலர்களிடையே பெரிய பரபரப்பை உண்டாக்கும். அப்படி ஒரு பரபரப்பைத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாம்பல்தலை ஆலா (ஆங்கிலத்தில் Lesser noddy) கொண்டு வந்துவிட்டது.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாகப் பறவை நோக்குவோர் குறைவு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளைக் குழுவினர் கன்னியாகுமரியில் இருக்கும் சில பறவை ஆர்வலர்களை ஒன்றுகூட்டி, புதியவர்களுக்குப் பறவை நோக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி இயற்கையின்பால் ஆர்வத்தை அதிகரித்ததால், பறவை நோக்கும் சிறியதொரு குழு உருவாகிக் கொண்டிருக்கிறது.
  • பறவைகள் அவை வாழும் இடங்களைப் பொறுத்து நீர்வாழ் பறவைகள், காட்டுப் பறவைகள், கடல் பறவைகள் என அறியப்படுகின்றன. காட்டில் இருக்கும் பறவை இனங்கள் பல வண்ணமாக இருக்கும், கடல் வாழ் பறவைகள் பொதுவாக வெள்ளை, பழுப்பு, கறுப்பு நிறங்களில்தான் இருக்கும். ஆனால், அவற்றின் வாழ்க்கை முறை மிகவும் தனித்துவமாக இருப்பதாலும், அவற்றை நாம் காண்பது அரிது என்பதாலும் பறவை ஆர்வலர்களிடையே கடல் பறவைகளைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
  • கடல் பறவையினங்களைக் கப்பலில் சென்றால் பார்க்கலாம். இதற்கு ஆங்கிலத்தில் பெலாஜிக் பறவை நோக்குதல் (Pelagic birding) என்பர். மற்ற நாடுகளில் இப்படிச் செய்வது சற்று எளிதான காரியம் என்றாலும், நம் நாட்டில் அவ்வளவு சுலபமில்லை. பல அரசுத் துறைகளிடம் அனுமதி பெற்ற பின், சரியான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து இது போன்ற பறவை நோக்குதல் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க முடியும்.
  • சில வேளைகளில் நல்வாய்ப்பாக கடல் பறவைகள் கரைப் பக்கம் வரும்போது அவற்றைக் கண்டுகளிக்க முடியும். புயலடிக்கும்போது பல கடல் பறவைகள் கடற்கரைப் பக்கம் ஒதுங்க ஆரம்பிக்கும். ஆனால் அவ்வேளையில் நாம் வெளியே பறவை நோக்குதலுக்காகச் செல்ல முடியாது. ஆனால், சில வேளைகளில் புயல் ஓய்ந்த பின்னும் கரைப்பகுதியிலேயே சில நாள்கள் அவை தங்குவது உண்டு.

அருகே வந்த ஆலா:

  • புயல் ஓய்ந்து மழை மட்டும் கொட்டிக் கொண்டிருந்த ஓர் அழகான ஞாயிற்றுக்கிழமையில் ஊரே நன்றாகச் சாப்பிட்டு உறங்கலாம் என்கிற உணர்வில் இருந்தபோது இரண்டு பறவை ஆர்வலர்கள் கடற்கரையோரம் பறவைகளை நோக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் சாம்பல்தலை ஆலா பறவையைப் பார்த்தவுடன் எங்கள் குழுவுக்கு இந்தச் செய்தியை உற்சாகமாகக் கூறினார்கள்.
  • நானும் என் கணவரும் 6 ஆண்டுகளுக்கு முன் பழவேற்காட்டில் சாம்பல்தலை ஆலாவைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பறவையை மறுபடியும் எங்கே பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருந்தேன். சிறிய மீன், பீலிக்கணவாய் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்தப் பறவைகளை இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் சில தீவுகளில் காண முடியும். மற்ற நேரம் கடலுக்குள் பறந்துகொண்டே இருக்கும்.
  • அதனால் மறுபடியும் சாம்பல்தலை ஆலாவைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே என்று உடனே நாங்கள் கிளம்பிச் சென்றோம். கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பாறைகள் மேல் குடை பிடித்துக்கொண்டு இருகண்நோக்கி, கேமராவுடன் நின்றுகொண்டிருந்த எங்கள் நண்பர்களுடன் இணைந்துகொண்டோம். சிறிது தூரத்தில் கடலுக்குள் இருந்த பாறையில் சாம்பல்தலை ஆலா பறவைகள் கண்ணில் பட்டன.
  • இவ்வளவு தொலைவில்தான் அவற்றைப் பார்க்க முடியுமா என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது அந்தப் பறவைக் கூட்டம் சற்று கலைய ஆரம்பித்தது. அதில் ஒரு சாம்பல்தலை ஆலா எங்கள் அருகில் வந்து பறந்தது, பறவையை அருகில் கண்டதும் கையில் இருந்த என் ஒரு வயதுப் பெண் குழந்தையும் ஆர்வமாக அந்த பறவையைக் காட்டிக் கையசைக்க ஆரம்பித்தாள்.

பறவைகளுக்கும் பிடித்துவிட்டது!

  • மறுநாள் காலை மறுபடியும் கன்னியாகுமரி கடற்கரைக்கு கணவர், குழந்தையுடன் நானும் சென்றேன். அடித்த காற்றில் வாய், கண் எல்லாம் மண் ஒட்டிக்கொண்டாலும் இருகண்நோக்கியைச் சிரமப்பட்டுப் பிடித்துக்கொண்டு கடலுக்குள் பறந்துகொண்டிருந்த பறவைகளைப்பார்த்தோம்.
  • சாம்பல் தலை ஆலா கூட்டத்துடன் ஷியர்வாட்டர் எனும் கடற்பறவையும் (Flesh-footed shearwater) பறந்துகொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தோம். மறுநாள் குழுவில் உள்ள பறவை ஆர்வலர்கள் கடற்கரையில் உள்ள பாறையில் நாள் முழுவதும் அமர்ந்து பெட்ரல் (Wilson's storm petrel), ஏகர் (Jaeger) போன்ற பல வகையான அரிய கடற்பறவைகளைப் பார்த்தார்கள்.
  • மழை முடிந்து காற்றும் குறைந்தவுடன் பறவைகளெல்லாம் கடலுக்குள் சென்றுவிடும் என்று நினைத்தால், இன்னும் சில பறவை இனங்கள் கரையோரங்களுக்கு வந்துகொண்டே இருந்தன. அடுத்து வந்த நாள்களில் மற்ற ஊர்களில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் கன்னியாகுமரிக்கு வந்து இந்தக் கடற்பறவைகளைப் பார்த்தார்கள். கடலுக்குள் படகில் சென்றிருந்தால் என்ன பறவைகளை எல்லாம் பார்த்திருப்போமோ, அவற்றைக் கரையில் இருந்தே பார்த்துவிட்டதில் பறவை நோக்குபவர்களுக்கு மகிழ்ச்சி.
  • கடலுக்குள் படகில் சென்று பறவைகள் நோக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அலைகளில் ஆடிக்கொண்டே இருக்கின்ற படகில் பெரும்பாலோருக்குத் தலைசுற்றலும் வாந்தியும் வந்துவிடும். அதனால் கடற்கரையோரம் வசதியாக அமர்ந்துகொண்டு கடல் பறவைகளைக் கண்டுகளித்தது பறவை ஆர்வலர்கள் அனைவருக்குமே ஒரு தனி அனுபவமாக இருந்தது.
  • இரண்டு மாதங்கள் கழிந்த பின்னும் 40 சாம்பல் தலை ஆலா பறவைகள் இன்னமும் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டிருக்கின்றன. எங்களுக்குச் சாம்பல்தலை ஆலா பறவையைப் பிடித்ததுபோல அந்தப்
  • பறவைகளுக்கும் கன்னியாகுமரிக் கடற்கரை பிடித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்