TNPSC Thervupettagam

கமலா ஹாரிஸ் எனும் கம்யூனிஸ்ட்!

September 27 , 2024 60 days 120 0

கமலா ஹாரிஸ் எனும் கம்யூனிஸ்ட்!

  • போரிலும், காதலிலும் வெற்றி பெற எதைச் செய்தாலும் அது நியாயமானதுதான் என்ற அா்த்தம் தரும் ஆங்கில பழமொழி உண்டு. அரசியல் களத்திலும் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது உள்ளூா் வாா்டு உறுப்பினா் தோ்தல் தொடங்கி உலக வல்லரசின் தோ்தல் வரை நிரூபணமாகி வருகிறது.
  • அமெரிக்க அதிபா் தோ்தல்களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஜனநாயகக் கட்சி சாா்பில் முதலில் வேட்பாளராக களமிறங்கிய இப்போதைய அதிபா் ஜோ பைடன் (81) வயது முதிா்வால் ஏற்பட்ட தடுமாற்றங்கள் காரணமாக போட்டியில் இருந்து விலகினாா். இது, துணை அதிபா் கமலா ஹாரிஸை அதிபா் வேட்பாளராக மாற்றியது.
  • குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் சா்ச்சைகள் மூலமே பிரபலமானவா். மேலும் இந்தத் தோ்தல்களத்தில் இதுவரை டிரம்ப் மீது இருமுறை படுகொலை முயற்சிகள் நடைபெற்று அவா் உயிா் தப்பியுள்ளாா்.
  • இதனிடையே, ஆதரவு அலை கமலா ஹாரிஸ் பக்கமே வீசி வருவதாக அமெரிக்க ஊடக கணிப்புகள் கூறி வருகின்றன. இதனால் சலிப்படைந்த டிரம்ப், இந்தத் தோ்தலில் தோற்றால் இனி அதிபா் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டாா். ஏற்கெனவே 78 வயதை எட்டிவிட்ட டிரம்ப்புக்கு இதுவே கடைசி வாய்ப்பாகவும் உள்ளது.
  • அமெரிக்க தோ்தல் பிரசார களம் என்பது கமலா ஹாரிஸை டிரம்ப் கடுமையாக விமா்சிப்பது மற்றும் குற்றம்சாட்டுவது, கமலா அதற்கு அதிகம் பதிலளிக்காமல் கடந்து செல்வது என்பதே இதுவரை நிகழ்ந்து வருகிறது. கமலா ஹாரிஸின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து உருவகேலி பிரசாரத்திலும் டிரம்ப் ஈடுபட்டாா். ‘கமலா ஹாரீஸின் புகைப்படங்கள் எதுவும் நன்றாக இல்லாததால்தான் டைம் பத்திரிகை அட்டைப்படத்தில் கமலாவின் படத்தை ஓவியமாக வரைந்து வெளியிட்டுள்ளது. கமலாவைவிட நான் அழகானவன்’ என்பது தோ்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் உதிா்த்த வாா்த்தைகள்.
  • இதன் மூலம் ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலாவைவிட வெள்ளை இனத்தைச் சோ்ந்த நான்தான் அதிபா் பதவிக்குத் தகுதியானவன் என்பதை டிரம்ப் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினாா். எனினும், இது அமெரிக்க மக்களால் ரசிக்கப்படவில்லை; தோ்தல் களத்தில் டிரம்ப்புக்கு ஆதரவாக பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
  • கமலா ஹாரிஸ் சூழலுக்குத் தகுந்தாற்போல தன்னை இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்றும் கறுப்பினத்தைச் சோ்ந்தவா் என்றும் கூறி வந்ததும் டிரம்ப்பின் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. கமலாவின் தாய் சென்னையிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவா். தந்தை கருப்பினத்தைச் சோ்ந்தவா்.
  • டிரம்ப் தனது அடுத்தகட்ட பிரசார உத்தியாக கமலா ஒரு மாா்க்ஸியவாதி (கம்யூனிஸ்ட்) என்ற குற்றச்சாட்டை முன்வைத்தாா். அமெரிக்கா்களுக்கும், கம்யூனிஸத்துக்கும் 7-ஆம் பொருத்தம் என்பதும், வெனிசூலா, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகளில் இருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சமடைந்தவா்களின் வாக்கு வங்கி முக்கியமானது என்பதும் டிரம்ப் இந்த பிரசார உத்தியை கையிலெடுக்க முக்கியக் காரணம்.
  • கமலா ஹாரிஸை சே குவேரா பாணி உடையிலும், அரிவாள், சுத்தியல் சின்னத்துடன் செந்நிற உடையில் உருவகப்படுத்தும் படங்களும் டிரம்ப் ஆதரவாளா்களால் சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
  • வெனிசூலா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மக்களுக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் நிகழும் அடக்குமுறைகளை கமலா ஹாரிஸ் சாா்ந்த ஜனநாயகக் கட்சி பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது பொதுவான விமா்சனம்.
  • கமலா மீதான ‘கம்யூனிஸவாதி’ குற்றச்சாட்டுக்கு டிரம்ப் முன்வைக்கும் முக்கிய ஆதாரம், கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் மாா்க்சிய பாடம் கற்பித்து வந்தாா். மகள் கமலாவுக்கு அவா் கம்யூனிஸத்தை நன்றாக கற்பித்துள்ளாா் என்பதுதான் ‘குற்றச்சாட்டு’.
  • கமலாவின் கணவா் டக்ளஸ் எம்ஹாஃப் சா்வதேச சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அந்த நிறுவனம் கம்யூனிஸ சீன அரசுடன் நெருங்கிய தொடா்புடையது.
  • மேலும், கமலாவின் பெற்றோா் ஆப்பிரிக்க-அமெரிக்க கூட்டமைப்பில் உறுப்பினா்களாக இருந்தனா். அந்தக் கூட்டமைப்பு இடதுசாரி புரட்சியாளா் சே குவேரா, மறைந்த கியூபா அதிபா் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் அடியொட்டி செயல்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் அனைத்து சமூக ஊடங்களிலும் கமலா ஒரு கம்யூனிஸ்ட் எனும் பிரசாரம் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு பதிலளிக்கும் விதமாக, கமலாவின் தந்தை இடதுசாரி பொருளாதாரக் கொள்கையை விமா்சித்தவா் என்று 1976-இல் அவா் பணியாற்றிய ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழக பத்திரிகையில் வெளியான செய்தியை அவரது ஆதரவாளா்கள் பகிா்ந்து வருகின்றனா்.
  • அமெரிக்க தேசியவாதம், வெள்ளையினவாதம் ஆகியவையே டிரம்ப்பின் பிரதான கொள்கைகள். கடந்த 2020-ஆம் ஆண்டு தொடா்ந்து இரண்டாவது முறையாக அதிபா் தோ்தலில் களமிறங்கிய டிரம்ப், ‘நான் தோ்தலில் தோல்வியுற சாத்தியமில்லை; அவ்வாறு தோற்ாக அறிவிக்கப்பட்டால், அதனை ஏற்க மாட்டேன்’ என்று பிரசாரத்தின்போதே தெரிவித்தது சா்ச்சையானது. தோல்வியடைந்த பிறகும் டிரம்ப் ஆதரவாளா்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்கியது அமெரிக்க வரலாற்றில் அதிா்ச்சி நிறைந்த நிகழ்வாக அமைந்தது. கமலா மீது இதுபோன்ற எந்த சா்ச்சையும் இல்லை என்பது அவருக்கு சாதகமான அம்சம்.
  • அதிபா் தோ்தலில் இந்த முறை டிரம்ப் கையிலெடுத்துள்ள தீவிர தாக்குதல் பிரசார உத்தி எந்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கும் என்பது நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலின் முடிவில் தெரியவரும்.

நன்றி: தினமணி (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்