- மத்திய அமைச்சரவை, 24 வாரங்கள் வளர்ந்த கருவைக்கூட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கலாம் என்று முடிவுசெய்து, அதற்கான சட்ட முன்வடிவைக் கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது. குழந்தையின் கரு வளர்ச்சியில் ‘வழக்கத்துக்கு மாறான நிலை' அல்லது குறைபாடுகள் இருக்கின்றனவா என்று 20 அல்லது 21-வது வாரங்களில்தான் ‘ஸ்கேன்' எடுத்துப் பார்க்கப்படுகிறது.
- அதையொட்டியே கருக்கலைப்பு முடிவும் எடுக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் கருக்கலைப்புக்கான கர்ப்ப காலத்தை 24 வாரங்கள் என்று இப்போது உயர்த்தியிருக்கிறார்கள்.
- கருக்கலைப்பு சட்டவிரோதம் என்றும் தார்மீகரீதியில் சரியல்ல என்றும் முடிவுசெய்வது, அரசுக்கும் சமூகத்துக்கும் எளிது. ஆனால், கருவைக் கலைப்பது என்ற முடிவை யார், எந்தச் சூழ்நிலையில் எடுக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பாலியல் வல்லுறவு காரணமாக கருவைச் சுமக்க நேரிட்டவர்கள், அதைக் கலைப்பதையே விரும்புகின்றனர்.
கருக்கலைப்பு
- பிரசவத்தை எதிர்கொள்ளக்கூடிய உடல்நிலையில் இல்லாத பெண்களும், முறையாக வளர்ச்சியடையாத கருவைச் சுமப்பவர்களும் கருக்கலைப்பை விரும்புகின்றனர். இவையெல்லாம் நிர்ப்பந்தம்.
- இது தொடர்பாக மத நம்பிக்கை சார்ந்த, தார்மீகம் சார்ந்த, சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படியான ‘உயிர் வாழும் உரிமை' எல்லோருக்கும் அடிப்படையானது என்று பேசுகிறோம். கருப்பையில் வளரும் கருவுக்கு அந்த உரிமை கிடையாதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவாதங்கள் கடந்த பல ஆண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கின்றன. ஆனால், இதில் முடிவெடுக்க நேர்பவர்களின் நிலையையும், சூழலையும் கவனிப்பது அவசியம்.
- கருக்கலைப்பில், மருத்துவத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தாயின் உயிரைக் காக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதாலேயே முன்னர் அனுமதித்த கால அளவைவிட அதிக மாதங்களுக்கு இப்போது அனுமதி தரப்படுகிறது. கரு நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில், கருக்கலைப்பை எல்லா வசதிகளும் நிறைந்த மருத்துவமனைகளில், நிபுணர்களின் மேற்பார்வையில், முறையான வகையில் செய்வதுதான் தாயின் உயிரைக் காப்பாற்ற உதவும். அரசு இந்த அனுமதியை வழங்காவிட்டால் அங்கீகாரமற்ற மருத்துவமனைகளையோ, முறையான பயிற்சியும் அனுபவமும் தகுதியும் இல்லாதவர்களையோ கருக்கலைப்புக்கு நாடுவதே நடக்கும்.
- அங்கே கருக்கலைப்பு அல்ல; கொலையே நிகழ்ந்துவிடும். அதைத் தடுக்க புதிய சட்ட முன்வடிவு பெரிதும் உதவும்.
சிகிச்சைகள்
- நவீன மருத்துவ முறை, சிசுக்களைத் தாயின் வயிற்றிலிருந்து உரிய கர்ப்ப காலத்துக்கு முன்னதாகக்கூட எடுத்து, மருத்துவமனைகளில் பராமரித்து வளர்க்கலாம் என்று நிரூபித்துவருகிறது. ஏழு மாத கர்ப்பத்துக்குப் பிறகு சிசுக்களை வெளியே வளர்க்கலாம் என்ற நிலை, ஆறு மாதங்களுக்குப் பிறகுகூட வளர்த்துவிடலாம் என்று இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
- எனவே, தாயின் உயிருக்கு ஆபத்தில்லாமல் எத்தனை மாத கர்ப்பிணிகளுக்குக் கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்வது என்பதை அந்தந்த நாடுகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், கருக்கலைப்பை இப்படி அனுமதிப்பதன் நோக்கமே, அதற்கான காரணங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். மருத்துவத் துறையினரும் மக்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06-02-2020)