TNPSC Thervupettagam

கருத்துரிமையும் கட்டுப்பாடும்

January 9 , 2023 580 days 312 0
  • பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் கவனத்துடனும் வரம்பு மீறாமலும் இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில், அந்த வரம்பை யார் தீர்மானிப்பது, எப்படி தீர்மானிப்பது என்கிற கேள்விகள் எழுகின்றன. அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களின் கருத்துகளையும் பேச்சுகளையும் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் உருவாக்குவது கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வரும் பிரச்னை.
  • உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த ஒருவருடைய மனைவியும் மகளும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது. அந்தச் சம்பவம் அரசியல் சதி என்று அப்போது மாநில  அமைச்சராக இருந்த ஆசம் கான் தெரிவித்ததும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துக் கருத்து தெரிவித்ததும் சர்ச்சைக்குள்ளானது.
  • விசாரணையை தில்லிக்கு மாற்றக் கோரியும் அமைச்சரின் பொறுப்பற்ற, சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. நீதிபதி எஸ்.அப்துல் நஸீர் தலைமையில் அமைந்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வெ. இராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு அந்த முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
  • அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சுயக் கட்டுப்பாட்டுடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதி எஸ்.அப்துல் நஸீர் தலைமையிலான அமர்வு, அவர்களது கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு தனியாக சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது.
  • அரசியல் சாசனப் பிரிவு 19(1) அனைத்து குடிமக்களுக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் வழங்குகிறது. சட்டப்பிரிவு 19(2), 8 குறிப்பிட்ட செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. இந்தியாவின் இறையாண்மை, தேசப் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியமும் ஒழுக்கமும், நீதிமன்ற அவமதிப்பு, இழிவுபடுத்துதல், குற்றம் செய்யத் தூண்டுதல் ஆகியவை சட்டப்பிரிவு 19(2) குறிப்பிடும் 8 செயல்பாடுகள்.
  • பேச்சு சுதந்திரம், தனி நபர் சுதந்திரம், வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உண்டு. தனி நபர்கள் மீதோ, அரசு சாராதவர்கள் மீதோ மேலே குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் காணப்படும் உரிமைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனடிப்படையில் ஏற்கெனவே அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப் பட்டிருக்கிறது. அதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
  • பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மீது தனியாக கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், அனைவருக்குமான சம உரிமையை மீறுவதாக அது அமையும் என்கிறது அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பு.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குறிப்பிட்ட காலம் பொறுப்பான அரசியல் பதவிகளை வகிப்பவர்கள் குடிமக்களிலிருந்து மாறுபட்ட அதிக அதிகாரம் படைத்தவர்கள் என்பது போன்ற உணர்வை அவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் குடிமக்களைவிடத் தாங்கள் கூடுதல் அதிகாரம் படைத்த பிரிவினர் என்கிற உணர்வு காணப்படும் நிலையில், அவர்களுக்கென்று தனிச்சட்டமோ, விதிமுறையோ ஏற்படுத்துவது அந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தக்கூடும்.
  • அமைச்சர்களின் கருத்துகள் அரசின் கருத்தாக கருதப்படத் தேவையில்லை என்பது அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கிய 4 நீதிபதிகளின் கருத்து. அந்தக் கருத்திலிருந்து மாறுபட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி பி.வி.நாகரத்னா. தனிப்பட்ட பிரச்னைகள் அல்லாத விஷயங்களில் அமைச்சர்களின் கருத்துகளும், பேச்சுகளும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பின் வரம்புக்குள் வரும் என்பது நீதிபதி நாகரத்னாவின் கருத்து. பெரும்பான்மை நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்துகள் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பின் வரம்பில் கொண்டு வரப்படுவது நடைமுறைக்கு ஒவ்வாதது என்கிற பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தில் நியாயம் இருக்கிறது. பிரதமரோ, முதல்வரோ அரசியல் ரீதியாக பலவீனமாக இருந்தாலோ அல்லது கூட்டணி அமைச்சரவையாக இருந்தாலோ தனிப்பட்ட அமைச்சர்களின் கருத்துகளை அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பாகக் கருதுவது சரியாக இருக்காது.
  • பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் குறிப்பிட்ட நபருக்கு இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தாத வரையில் அரசியல் சாசன உரிமையின் அடிப்படையில் நிவாரணம் கோருவதோ, இழப்பீடு கோருவதோ சட்ட வரம்பில் வராது.
  • சமீப காலமாக பொறுப்பான பதவியில் உள்ளவர்களின் பொறுப்பற்ற பேச்சுகளும், சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் உண்மைக்கு மாறான வெறுப்பு பரப்புரைகளும் தடுக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதைக் கட்டுப்படுத்தும் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. சட்டம் தன் கடமையைச் செய்வதும், அவரவர் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதும்தான் தீர்வே தவிர அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு கூறுவதுபோல புதிய கட்டுப்பாடுகள் அநாவசியம்.

நன்றி: தினமணி (09 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்