TNPSC Thervupettagam

கருத்துரிமையை மறிக்காதீர்கள்!

September 7 , 2020 1594 days 704 0
  • நீதித் துறையின் மீதான மூத்த வழக்கறிஞர் ஒருவரின் நேரிய விமர்சனத்தை நீதிமன்ற அவதூறு என்று குற்றஞ்சாட்டுவதும் தண்டனை அளிப்பதும் கருத்துரிமைக்கு எதிரானது ஆகாதா என்று கடந்த சில வாரங்களில் கடும் விவாதங்கள் நடந்து ஓய்ந்திருக்கின்றன.
  • இதே நாட்களில் சர்வதேச அளவில் ஆங்கில நூல்களை வெளியிட்டுவரும் ஒரு பிரபல பதிப்பகம் இந்தியாவில் எழுந்த எதிர்ப்புகளையடுத்து, தான் வெளியிடுவதாக அறிவித்த நூலைத் திரும்பப்பெற்றுள்ளது.
  • கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று வழக்கமாகக் குரல்கொடுப்பவர்கள் இவ்விஷயத்தில் மௌனம் காத்தனர். இடது, வலது என்று சார்புநிலைகளுக்கேற்பக் கருத்துரிமையின் தேவையும் மாறிவிடக்கூடுமா என்ன?
  • டெல்லியில் பிப்ரவரியில் நடந்த கலவரங்களைப் பற்றி டெல்லி ரியாட்ஸ் 2020: தி அன்டோல்ட் ஸ்டோரிஎன்ற தலைப்பிலான புத்தகத்தை செப்டம்பரில் வெளியிடுவதாக ப்ளூம்ஸ்பெரிபதிப்பகம் அறிவித்திருந்தது.
  • ஆனால், ஆகஸ்ட் 22 அன்று மேற்கண்ட தலைப்பிலான புத்தகத்தை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்தது.
  • அந்த அறிவிப்பில் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், புத்தக வெளியீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட அறிமுக விழாவைக் குறித்து தமக்குத் தெரியாது என்றும், அதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் தங்களால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது ப்ளூம்ஸ்பெரி’.
  • கருத்துரிமையைத் தாம் எப்போதுமே மதிப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்தப் பதிப்பகம், அதே நேரத்தில் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுவும் கருத்துரிமை?

  • அப்படி என்ன நடந்தது புத்தக அறிமுக விழாவில்; யார் அங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள்? பாஜக தலைவர் கபில் மிஸ்ரா அழைக்கப்பட்டிருந்தார்; அதுதான் பிரச்சினைகளின் மையம்.
  • டெல்லியில் பிப்ரவரியில் நடந்த கலவரங்களின் சூத்திரதாரிகளில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் அவர். அதிரவைக்கும் பல பேச்சுகளைப் பகிரங்கமாகப் பேசியவர்.
  • மூன்று நாட்களுக்குள் ஆர்ப்பாட்டங்களை அடக்குங்கள். இல்லையென்றால், அதன் பிறகு உங்கள் பேச்சை நாங்கள் கேட்க மாட்டோம்என்று வடகிழக்கு டெல்லியில் காவல் துறையினரையே எச்சரித்துப் பேசியவர்.
  • டெல்லி கலவரத்தோடு தொடர்புபடுத்திப் பேசப்படும் ஒருவரையே அது தொடர்பான நூல் அறிமுக நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்றால், அந்த நூலில் என்ன உண்மை இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு பரவலானது.
  • இந்த எதிர்ப்புகளின் தொடர்ச்சியாக பதிப்பகம் தன் நூல் வெளியீட்டு முடிவையே திரும்பப் பெற்றபோது, ‘வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக, ஏற்கெனவே வெளியிடுவதாக அறிவித்த ஒரு புத்தகத்தைத் திரும்பப்பெறுவது கருத்துரிமைக்கு எதிரானது ஆகாதா?’ என்று புதிய விவாதங்கள் எழுந்தன.
  • டெல்லியில் பிப்ரவரியில் மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் பின்னணியில் இருந்தவர்கள் வலதுசாரிகளே என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
  • ஆனால், ‘டெல்லி ரியாட்ஸ் 2020: தி அன்டோல்ட் ஸ்டோரிபுத்தகத்தில் அந்தக் கலவரத்துக்கு முஸ்லிம்கள் மற்றும் இடதுசாரிகள் எவ்வாறெல்லாம் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்பது வலுவான ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஷாகீன் பாக், ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களுக்கும் இந்தக் கலவரங்களுக்கும் எவ்வாறெல்லாம் தொடர்பு உண்டு என்று இந்தப் புத்தகம் ஆதாரங்களை முன்வைப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • சில புகைப்படங்கள், ட்வீட்கள் என்று இந்த ஆதாரங்களின் பட்டியல் நீள்வதாகத் தெரிகிறது. மார்ச் மாதத்தில் பெண் அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் இணைந்து வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் இந்த வெளிவராத தகவல்கள் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் சோனாலி சிதோல்கார், ராம் லால் ஆனந்த் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேரா சிரியர் ப்ரேர்ணா மல்ஹோத்ரா, வழக்கறிஞரான மோனிகா அரோரா மூவரும் சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
  • சோனாலியும் மோனிகாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே ஒரு உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள். ஜம்முவின் கத்வா மாவட்டத்தில் ஒரு இஸ்லாமியச் சிறுமி வல்லுறவுக் கொலைக்கு ஆளானது தொடர்பில் விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட குழு அது.
  • ஆனால், இந்து வலதுசாரிகளின் கருத்தை எதிரொலிக்கும் விதமாகவே அவர்கள் இடம்பெற்றிருந்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை அமைந்திருந்தது. ஒரு இந்துவின் மீது தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்று கூறியது அந்தக் குழு.
  • ஆக, இந்த எல்லாத் தகவல்களும் ஒன்று கோத்து உருவாக்கப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரம்தான் ப்ளூம்ஸ்பெரிதன்னுடைய பதிப்பு முடிவை மறுபரிசீலிக்கக் காரணமானது என்று கூறப்படுகிறது.
  • விளைவாக, ‘இணையவழி எதிர்ப்பின் காரணமாக, தான் பிரசுரிக்க ஒப்புக்கொண்டதிலிருந்து பின்வாங்குவது ஒரு பதிப்பகத்துக்குப் பெருமை சேர்க்குமா; இது அப்பட்டமான கருத்துரிமை மீறல் இல்லையா?’ என்ற கேள்விகளை வலதுசாரி அமைப்புகள் எழுப்பலாயின.
  • அறிவுத்தளத்தில் இடதுசாரிகள் வலிமைமிக்கவர்களாக இருக்கிறார்கள், வலதுசாரிகளுக்கு ஆதரவான எந்தக் குரலும் எழுந்துவிடாமல் அவர்கள் கவனத்தோடு காய் நகர்த்துகிறார்கள்என்ற குரல்களும் கூடவே சேர்ந்து ஒலிக்கின்றன.
  • ஒப்புக்கொண்டபடி புத்தகத்தை ஏன் வெளியிடவில்லை என்றும், பதிப்பகத்தைக் கலந்தாலோசிக்காமல் புத்தக அறிமுகக் கூட்டத்தை நடத்துவது எப்படித் தவறாகும் என்றும் விளக்கம் கேட்டு நூலாசிரியர்கள் ப்ளூம்ஸ்பெரிபதிப்பகத்துக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார்கள்.
  • அதே நேரத்தில், ‘டெல்லி ரியாட்ஸ் 2020புத்தகத்தை கருடா பிரகாஷன்என்ற பதிப்பகத்தின் வழியாக ஆங்கிலம், இந்தி மொழிகளில் கொண்டுவருவதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

வாசகர்கள் தீர்மானிக்கட்டும்

  • இது இப்படியிருக்க வெண்டி டோனிகர் எழுதிய தி ஹிண்டுஸ்: அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரிபுத்தகத்தை இந்து வலதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக பென்குயின்பதிப்பகம் திரும்பப்பெற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டும் சிலர், ‘உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?’ என்றும் கேட்கிறார்கள்.
  • அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தடைகேட்டு வாதாடியவர் டெல்லி ரியாட்ஸ் 2020நூலாசிரியர்களில் ஒருவரான மோனிகா அரோரா.
  • இப்போது அவரே, தனது புத்தகத்தைப் பதிப்பகம் திரும்பப்பெற்றுக்கொண்டது தவறான முடிவு என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
  • இந்த இரு விஷயங்களையும் சேர்த்துச் சுட்டிக்காட்டும் அவர்கள் கருத்துரிமைக்கான குரல் முக்கியமானது என்றால், அது எல்லோருக்கும் பொருந்தும் இல்லையா?’ என்கிறார்கள்.
  • எது எப்படியோ, அரசியல் பிரச்சாரத்தில் உண்மை எது, பொய் எது என்பதையெல்லாம் கடைசியில் மக்களே தீர்மானிப்பார்கள்.
  • புத்தகங்களைப் பொறுத்தவரை அது வாசகர்களின் கையில். மக்களிடம் வெற்றிபெற்ற பல பிரச்சாரங்களும்கூட பொய்களின் அடிப்படையிலானது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறையவே உண்டு.
  • உண்மையோ பொய்யோ அவை முதலில் பொதுவெளியில் விவாதிக்கப்படட்டும். ரகசியமாகப் பரப்பப்படும் வதந்திகளையும் நம்பிக்கை களையும்விட பொய்களால் சமூகத்துக்குப் பெரிதாகத் தீங்கிழைத்துவிட முடியாது.
  • பிரச்சாரங்கள் பொய்களையும் உள்ளடக்கியவையே. அவற்றை முறியடிப்பதற்குச் செய்ய வேண்டியது எதிர் பிரச்சாரமே தவிர; கருத்துரிமையைப் பறிப்பது அல்ல.

நன்றி:  தி இந்து (07-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்