TNPSC Thervupettagam

கருப்புப் பணமும் இந்தியாவும்

July 2 , 2019 2019 days 4513 0

இதுவரை

  • நிதிக்கான நிலைக் குழுவானது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கணக்கிடப்படாத வருமானம் மற்றும் செல்வங்களின் நிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது மூன்று முதன்மையான கொள்கை அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டுப் பல்வேறு முறைகளைப் பயன்படுத்திப் பல பகுப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளிநாட்டிலும் உள்ள கருப்புப் பணத்தை அளவிட நம்பகமான வழிமுறைகள் இல்லை என்ற முடிவிற்கு அக்குழு வந்துள்ளது.
கருப்புப் பணம் என்றால் என்ன?
  • பொருளாதாரக் கோட்பாடுகளில் கருப்புப் பணத்திற்கென அதிகாரப்பூர்வமான வரையறைகள் ஏதுமில்லை.
  • இணையான பொருளாதாரம், கருப்புப் பணம், கருப்பு வருமானம் கணக்கிடப்படாதப் பொருளாதாரம், சட்ட விரோதமானப் பொருளாதாரம் மற்றும் ஒழுங்கற்றப் பொருளாதாரம் போன்ற பல்வேறு சொற்கள் ஏறக்குறைய அதற்கு இணையான பதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • கருப்புப் பணம் என்பதன் எளிமையான வரையறையாக வரி வசூலிக்கும் அதிகாரிகளிலிருந்து மறைக்கப்பட்ட பணம் என்பதைக் கொள்ளலாம்.
  • அதாவது, சட்ட விரோதமான செயல்கள் மற்றும் சட்டப்படியான ஆனால் அரசுக்கு அறிவிக்கப்படாத செயல்பாடுகள் மூலம் பெறப்படுபவை என கருப்புப் பணம் பரவலாக இரண்டு வகையில் வரலாம்.
  • இதில் முதல் வகையானது மேற்கண்ட இரண்டு வகைகளில் மிகவும் வெளிப்படையானது.
  • சட்ட விரோதமான செயல்பாடுகள் மூலம் சம்பாதிக்கப்படும் பணம் ஒருபொழுதும் வரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. எனவே அது கருப்புப் பணமாகும்.
  • இரண்டாவது வகையானது வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படாத ஆனால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானத்தை உள்ளடக்கியதாகும்.
  • எடுத்துக்காட்டாக காசோலை அல்லது மின்னணுப் பரிமாற்றத்தின் மூலம் 60% தொகையையும் ரொக்கப் பரிமாற்றத்தின் மூலம் 40% தொகையையும் செலுத்தி ஒரு நிலம் விற்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.
  • ஒருவேளை அந்த 40% ரொக்கத் தொகை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாவிடில் அது கருப்புப் பணமாகும்.

 

  • நாடு முழுவதும் ஏராளமான சிறு சிறு கடைகள் ரசீதுகள் இல்லாமல் ரொக்கத்திற்கு வியாபாரம் செய்கின்றன. இவை அனைத்தும் கருப்புப் பணமாக இருக்கலாம்.
  • உள்நாட்டில் ஈட்டப்பட்ட வருமானமானது வருமான வரி அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் எனப்படும் ஷெல் நிறுவனங்கள் மூலம் அதனைத்  திரும்பவும் கொண்டு வருதல் என்பது கருப்புப் பணத்தின் மற்றொரு மூலமாக உள்ளது.

இதை அளவிடுவது ஏன் கடினமாக உள்ளது?
  • கருப்புப் பணத்திற்கான வரையறையே அதை அளவிடுவதை மிகவும் கடினமாக்குகிறது.
  • பிறகு அரசிடமிருந்து தீவிரமாக மறைக்கப்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளை அரசு எவ்வாறு அளவிடுவது?
  • நிலைக்குழுவின் அறிக்கையின்படி கருப்புப் பணத்தை அதிகமாக கொண்டுள்ள துறைகளாக நிலமனைகள், சுரங்கங்கள், மருந்துப் பொருள் நிறுவனங்கள், பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை தொழில், தங்கம் மற்றும் பண்டங்கள் மீதான யூக வணிச் சந்தைகள், திரைப்படத் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியவை உள்ளன.
  • அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, கருப்புப் பண உருவாக்கம் அல்லது அதன் குவிப்பு பற்றிய நம்பகமான மதிப்பீடுகளும் இல்லை. அத்தகைய மதிப்பீட்டை மேற்கொள்ள துல்லியமான நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளும் இல்லை.

  • ஒவ்வொரு மதிப்பீட்டு முறையும் அந்த அளவீட்டின் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட அடிப்படை யூகங்களைப் பொறுத்தது. இதுவரை கருப்புப் பொருளாதாரத்தை அளவிடுவதில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களின் அனுமானங்களில் எவ்விதமான ஒற்றுமையும் இல்லை.
  • அமைப்பில் உள்ள கருப்புப் பணத்தின் மதிப்பீடுகளாக நிலைக்குழு வழங்கிய தகவல்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% முதல் 120% அளவு வரை வேறுபடுகின்றன. இது மதிப்பீட்டு முறைகளில் உள்ள பரந்த மாறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றது.
தற்பொழுது பயன்படுத்தப்படும் சில முறைகள்
  • பண முறையானது மிகவும் பிரபலமான முறைகளில் ஒன்றாகும்.
  • இந்த முறையில் பொருளாதார அமைப்பில் இருப்பு மற்றும் கணக்கிடப்படாத வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தின் பகுதியானது பங்குகள் மற்றும் பணப் பரிமாற்றத்தில் பிரதிபலிப்பதாகக் கொள்கிறது.
  • வேறு விதமாகக் கூறினால், இம்முறையில் பொருளாதாரத்தில் உள்ள பணத்தைக் கண்காணிப்பதன் மூலம் இன்னும் எவ்வளவு பணம் கணக்கிடப்படவில்லை என்பதைப் பற்றிய தகவலைப் பெறலாம்.
  • உலகளாவிய குறிகாட்டி அல்லது உள்ளீட்டு அடிப்படையிலான முறை என்பது மற்றொரு முறையாகும்.
  • இந்த முறையில், கணக்கிடப்படாத வருமானமானது மிகவும் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒற்றை உலகளாவிய மாறியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. எனவே இந்த மதிப்பீடுகள் உள்ளீட்டு அடிப்படையிலான மதிப்பீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • அடிப்படையில் இந்த குறிகாட்டிகளில் மதிப்பிடப்பட்ட செயல்பாட்டு அளவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அறிவிக்கப்பட்ட அளவுடன் ஒப்பிடப்பட்டுத் தாக்கல் செய்யப்படாத வருமானங்களின் அளவை மதிப்பிடுகின்றது.
  • இம்முறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான உள்ளீடு தரை வழியிலான சரக்குப் போக்குவரத்தின் மூலமான பரிமாற்றத்தின் அளவாகும்.
  • நாட்டில் குறிப்பிட்ட துறையால் பரிமாற்றம் செய்யப்படும் சரக்குகளின் உண்மையான அளவைப் பொருளாதார நடவடிக்கைகளால் பெறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட சரக்குகளின் அளவுடன் ஒப்பிடப்படுவது இன்னமும் எவ்வளவு தாக்கல் செய்யப்படவில்லை என்பதற்கான மதிப்பீட்டை அளிக்கும் என்பது இதன் கருத்தாகும்.
  • கருப்புப் பணத்தை அளவிடுவதற்கான மூன்றாவது முறை நேரடியாக கணக்கெடுப்பதாகும்.
  • ஆனாலும் இம்முறைக்கு வருமானத்தை மறைக்கும் நபர்களிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் தன்னார்வத் தகவல்கள் தேவைப்படுகின்றன. எனவே இதுவும் துல்லியத் தன்மையற்ற தகவல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றன.

அரசாங்கம் எவ்வாறு கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த முடியும்?
  • கருப்புப் பணத்தைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. இதில் முதலாவது சட்டப்பூர்வமான நடவடிக்கையாகும்.
  • பொருளாதாரத்தை முறைப்படுத்தவும் பொருளாதாரப் பரிவர்த்தனைகளைத் தாக்கல் செய்யவும் தேவையான பல சட்டங்களை அரசு ஏற்கனவே இயற்றியுள்ளது.
  • அவற்றில் சில:
    • மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம்
    • மாநில அளவிலான பல்வேறு GST சட்டங்கள்
    • கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதித்தல் சட்டம் - 2015
    • பினாமிப் பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம், 2016
    • தப்பியோடியப் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 மற்றும் பல.
  • 2.5 லட்சத்திற்கும் அதிகமான தொகைகளின் பரிமாற்றத்திற்கு வரிமான வரி அட்டையைக் (நிரந்தர கணக்கு எண்) கட்டாயமாக்கும் நடவடிக்கையானது பரிவர்த்தனைகள் மறைக்கப்படுவதை கடினமாக்கும் வகையில் அரசால் பயன்படுத்தப்படும் மற்றொரு முறையாகும்.

  • மேலும் 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்கப் பரிமாற்றத்திற்கு தடை விதிப்பு மற்றும் ஒருவர் இவ்வாறான விதிமுறையை மீறும் போது அந்த தொகையின் அளவுக்குச் சமமான அபராதம் விதித்தல்.
  • அதிக மதிப்புடைய நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்ற ஆனால் மறு விவரத் தாக்கல் செய்யாத நபர்களை அடையாளம் காண, வருமான வரித் தாக்கல் செய்யாதவர்களை மூன்றாம் தரப்பு தகவல்களைப் பயன்படுத்திக் கண்காணிக்கவும் வருமான வரித் துறையானது  நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்