கருப்பை மீதான ஆதிக்கம்
- சமீபத்தில் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருக்கலைப்பு தொடர்பான மசோதா அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் வலுவான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கருவுற்று 22 வாரங்கள் கழித்து கருவைக் கலைத்தால், அது குற்றமாகக் கருதப்பட்டு, 20 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மசோதா கூறுகிறது.
- இந்த மசோதாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விலக்கும் கொடுக்கப்படவில்லை. மசோதாவை ஆளுங்கட்சியே ஆதரிக்கவில்லை. இந்த மசோதா பைத்தியக்காரத்தனமானது என்று அதிபர் லூலா டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் எப்படியாவது மசோதாவை நிறைவேற்ற முயல்வதுதான் இதில் பெரும் முரண்.
உலக நாடுகளின் நிலவரம்...
- ஏற்கெனவே பல நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதக் குற்றமாகக் கருதப்படுகிறது. மடகாஸ்கர், நிகராகுவா போன்ற நாடுகளில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், கருவுறுவதில் உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய பெண்கள் உள்பட அனைவருக்கும் கருக்கலைப்பு குற்றமாக்கப்பட்டுள்ளது.
- எகிப்தில் கருக்கலைப்பு செய்வதா என்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணோ, குடும்பமோ முடிவெடுக்க முடியாது. உயிருக்கு ஆபத்தான வேளையில் மருத்துவக் குழுதான் முடிவெடுக்க முடியும். ஜமைக்காவில் கருக்கலைப்பு செய்யும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும் அதற்கு ஆலோசனை வழங்குபவருக்கு 3 வருடச் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது.
- கருக்கலைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை இந்தியா முற்போக்கான நாடு என்பது கவனிக்கத்தக்கது. சிசுவின் பாலினத்தை வைத்து - பாகுபாட்டின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்பதைத் தவிர, ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு இல்லையென்றால் ஒரு பெண் தன் விருப்பப்படி கருவைச் சட்டப்படி கலைத்துக்கொள்ளலாம்.
- அதேவேளையில், கருக்கலைப்பை இந்தியக் குடும்ப அமைப்பும், சமூகமும் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. கருக்கலைப்பு, கருத்தடை போன்ற மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை நுகர முடியாத பெண்கள் இந்தியாவில் அதிகம்.
பிள்ளை பெறும் கருவியா பெண்கள்?
- பத்து மாதங்கள் குழந்தையைச் சுமப்பதற்குப் பெண் மனதளவிலும் உடலளவிலும் பக்குவப்பட வேண்டும். இவ்விரண்டும் பக்குவமடைவதற்கு முன் பெண்ணின் கவனத்துக்கு வராமல் கரு உருவாகும்போது அதைக் கலைப்பதா, குழந்தை பெற்றுக்கொள்வதா என்ற முடிவைப் பெண்தான் எடுக்க வேண்டும். மாறாக, அரசு முடிவெடுப்பது பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதியே.
- அதுவும் உயிராபத்து இருந்தாலும் பரவாயில்லை, வல்லுறவினால் குழந்தை உருவானாலும் பரவாயில்லை, குழந்தை பெற்றுத்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பெண் என்பவள் பிள்ளை பெறும் கருவி என்னும் கருத்தைச் சர்வதேச அரசுகள் நிலைநிறுத்த முயல்வது ஆபத்தானது. மனிதாபிமானமற்றது!
சாதி - பொருளாதார ஆதிக்கம்:
- பெண்கள் ஆரோக்கியமாக இருந்தாலும், இல்லையென்றாலும் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஒரு புறமிருக்க, ஒரு பெண் யார் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதைக்கூடச் சமூகமே முடிவுசெய்கிறது.
- சமூகத்தைப் பொறுத்தவரை கருப்பையானது சாதியத்தையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் பாதுகாக்கும் கருவி. தன்னுடைய உயிரணுவிலிருந்து உருவாகும் குழந்தைகளுக்கு மட்டுமே தனது சொத்துக்களும் உடைமைகளும் சொந்தம் என்ற ஆண் மனதின் நிலைப்பாட்டின் தொடக்கமே பெண்ணின் கருப்பை மீதான ஆண்மையச் சமூகத்தின் ஆதிக்கத்துக்கு அடித்தளம்.
- சமூகத்தில் நிகழும் எண்ணற்ற ஆணவப் படுகொலைகளில் கொலைசெய்யப்படும் தம்பதிகளைக் கவனித்திருப்பீர்கள். பெரும்பாலும் ஆண் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகவும், பெண் ஆதிக்கம் செலுத்தும் சாதியைச் சேர்ந்தவராகவும் இருப்பதைப் பார்க்கலாம். தங்கள் சாதிப் பெண்ணுடைய கருப்பையில் ஒடுக்கப்பட்ட சாதி ஆணின் உயிர் வளர அனுமதிப்பதா என்கிற ஆணவமே சாதியப் படுகொலைக்குப் பலர் துணிவதற்குக் காரணம்.
- சாதி கடந்த காதலினால் உருவான சமத்துவ உயிர் அனைத்துப் பெண்களின் கருப்பைகளில் வளர்ந்துவிட்டால், இச்சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்க முடியாது. அதனால்தான் இந்தியாவில் பெண்களுக்குக் கருப்பையைச் சுற்றிப் பல ஒழுங்குக் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்களின் ஆதிக்கம்:
- சமூகத்தில் பெண்களின் உழைப்பு பரவலாகக் காணப்படுகிறது. அமைப்புசாராத் தொழிலாளர்களில் 90% பேர் பெண்கள். பெரும்பாலான இடங்களில் அவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, திருமணமான பெண்களுக்கு!
- 1. சமீபத்தில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில், திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்னும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்தது. ஆனால், அங்கு பணிபுரிந்த முன்னாள் தொழிலாளி, திருமணமான பெண்கள் மெட்டி, தாலி அணிவது உற்பத்தியைப் பாதிக்கும் என்று அந்நிறுவன நிர்வாகம் கருதுவதாகவும் திருமணமான பெண்களுக்கு அதிகக் குடும்பச் சுமை இருப்பதால், அவர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
- பெண்கள் திடீரென்று கருவுற்றாலோ, குழந்தைகளுக்காக அதிக விடுப்பு எடுத்துக்கொண்டாலோ உற்பத்தி பாதித்துவிடும் என்ற நிர்வாகத்தின் அச்சமே திருமணமான பெண்களை வேலைக்கு எடுக்காததற்குக் காரணம். ஒரு பெண் கருவுறுவதும், அவளுக்குக் குழந்தைகள் இருப்பதும் அவளது தனிப்பட்ட உரிமை. அதற்கேற்றாற்போல் பணியிடம் தகவமைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட விவகாரங்களுக்காகப் பணியிடத்திலிருந்து புறந்தள்ளுவது எப்படி முறையாகும்?
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாலையில், மாதம் மூன்று நாள்கள் வலியுடன் வேலை செய்ய முடியாத பெண்கள் விடுப்பு எடுப்பதை விரும்பாத நிர்வாகம், மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைப் பெண் தொழிலாளர்களுக்கு வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
- மாதவிடாய் மாதம் தவறாமல் வரவில்லை என்றால் பெண்களுக்கு உடல் பிரச்சினைகள் ஏற்படும். பெண்ணின் கருப்பை ஆரோக்கியமாக இருப்பதற்கு அடையாளமே மாதவிடாய்தான். உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காகத் தொழிலாளியின் மாதவிடாயை நிர்வாகம் தள்ளிப்போடுவதற்கு உரிமை கொடுத்தது யார்? தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைவிட லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதும் சமூகம் ஆரோக்கியமாக எப்படி இருக்க முடியும்? இதனால் பணியாளர்களின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, உற்பத்தி சார்ந்த அறமும் பாதிப்புக்குள்ளாகிறது.
வாடகைத் தாய்:
- பெண்கள் கருவுறுவதால் அவர்களின் பணியில் முன்னேற்றமடைய முடியாமல் போகிறது. ஒரு பெண் திருமணமாகிக் குழந்தை பிறப்பதற்கு முன்னர் வரை தன்னுடைய வேலையில் சிறப்பாகப் பணியாற்றினாலும், குழந்தை உருவாகும்போது பெண்களுக்கே உரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிறது. ஆனால், அந்த நேரத்தில் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டிய நிறுவனங்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது நியாயமற்றது.
- அதேபோல் பல வருடங்கள் குழந்தை இல்லாததால், பிரபலங்களும் பணக்காரர்களும், ஏன் சில வெளிநாட்டினர்கூட வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள். இச்செயல்முறையினால் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இல்லை. குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை கிடைப்பதால், இதை ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்படியில்லை. இங்கு வாடகைத் தாயாக இருப்பவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களே.
- வருமானம் ஈட்டவே வேறு வழியில்லாமல் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். சட்டம் வாடகைத் தாய்முறைக்குப் பல நெறிமுறைகள் வைத்திருந்தாலும் சமூகம் சட்டத்தைப் புறந்தள்ளுகிறது. குழந்தையைச் சுமப்பதும் பெண்தான், வாடகைத் தாய் மூலம் பெறும் குழந்தைக்கு உரிமை கொண்டாடுவதும் பெண்தான். இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்ல முடியுமா?
- இதில், பொருளாதார ஏற்றத்தாழ்வு வெளிப்படையாகத் தெரிகிறது. பொருளாதாரத்தில் வலிமையாக இருப்பதால், பெண்ணாகவே இருந்தாலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்ற பெண்களின் கருப்பைக்கு உரிமை கொண்டாடுவது நியாயம்தானா என்னும் கேள்வியும் எழுகிறது.
- வாடகைத் தாய் முறை வணிகமயமாகும் சூழலில் அப்பெண்களின் உடலும் கருப்பையும் ஆரோக்கியம் இழந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் சிலர் லாபம் பார்க்கும் தொழில் முதலீடாகவே கருப்பை மாறியுள்ளது. இவையெல்லாம் தனிமனித இனப்பெருக்க உரிமை மீறல்.
- எந்தச் சாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், ஏழைப் பெண்ணாக இருந்தாலும், பணக்காரப் பெண்ணாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய கருப்பை மீதான உரிமை, கருப்பையைச் சுமக்கும் அப்பெண்ணுக்கே சொந்தம். அவ்வுரிமையை உறுதிசெய்வதே குடும்பம், சமூகம், அரசின் அடிப்படைக் கடமை.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 08 – 2024)