TNPSC Thervupettagam

கரோனாவால் குறைந்த காற்று மாசு

September 8 , 2020 1593 days 762 0
  • நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நுரையீரல்கள் சிறப்பாக தமது கடமையை ஆற்றும். ஆனால், சுத்தமான காற்று கிடைப்பது அரிதாகி விட்டது.
  • தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும், சிறிய தொழில் நகரங்களிலும் காற்றில் மாசு அதிகமாகக் கலக்கிறது. இதனால் பணக்காரா்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் பார்லா்களை நாடுகிற நிலை நமது நாட்டிலும் வந்துகொண்டிருக்கிறது.
  • இந்த கரோனா தீநுண்மித் தாக்கத்தால், இப்போது நமது நாட்டில் காற்று மாசு குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் அறிஞா்கள் சொல்கிறார்கள்.
  • நமது நாட்டில் மார்ச் மாதம் இறுதியில் அமலுக்கு வந்த பொது முடக்கம் செப்டம்பா் முதல் நாளிலிருந்து பல தளா்வுகளோடு தொடா்கிறது. தளா்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னா், வாகன போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு, தொழிற்சாலைகளும் இயங்காமல் போயின.
  • உணவு விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் காற்றில் மாசு கலப்பது குறைந்து போனது.

காற்றின் தரம் உயர்வு

  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகப் பேராசிரியா் எஸ்.கே. சதீஷ் ஊரடங்கால் இந்தியாவில், குறிப்பாக, நகா்ப்புறங்களில் காற்றின் தரம் நல்ல மாற்றம் கண்டிருக்கிறது.
  • மோசம் என்ற நிலையில் இருந்து இப்போது நல்லது என்ற நிலைக்கு முன்னேறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மனித செயல்பாடுகள் குறைந்து போனதுதான்என்கிறார்.
  • சராசரியாக இந்தியாவின் தென்பகுதியில் துகள்களின் செறிவு 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்து இருக்கிறோம்.
  • மேலும், தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இது 75 சதவீதமாக உள்ளது.
  • போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு, பிற கழிவுகள் எரிப்பு போன்றவைதான் இந்த காற்று மாசுக்கு முக்கிய காரணம்.
  • நகரங்களில் வாகனங்கள் வெளியிடுகிற புகைதான் பெரும்பாலும் காற்று மாசுக்கு காரணம்.
  • பொது முடக்கத்தின்போது வாகனப் போக்குவரத்து குறைந்து போய்விட்டதால் காற்று மாசு உருவாகவில்லை என்கிறார்.
  • கடந்த மே மாதம் வெளியான இரண்டு ஆய்வு முடிவுகள், கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு, காற்று மாசை வெகுவாக குறைந்து விட்டதை சுட்டிக் காட்டுகின்றன.
  • செயற்கைக்கோள் தரவுகளும் காற்றில் துகள்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவு சரிவு கண்டுள்ளதை காட்டுகின்றன.
  • மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளும் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருப்பதை படம் பிடித்துக் காட்டுகின்றன.
  • ஐஐடி பேராசிரியா் மணிகுமார்சிங் இதுபற்றி குறிப்பிடுகையில் காற்று மாசைக் குறைப்பதற்கு எதிர்காலத்தில் இதுபோன்ற பொது முடக்கம் பயன்படும்என்கிறார்.
  • இந்த பொது முடக்கத்தால் நமது இயற்கை அன்னை இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறாள். தில்லியில் காற்று மாசு குறைய எதிர்காலத்தில் பொது முடக்கத்தை பயன்படுத்தலாம் என்றும் அவா் கூறுகிறார்.
  • பொது முடக்கம் அமலுக்கு வந்த நேரத்தில், மக்கள் சுற்றுச்சூழலைப் பற்றி சிந்திக்கவில்லை.
  • பொது முடக்கத்தால் ஏற்பட்ட சிரமத்தைத்தான் மக்கள் கண்டனா். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, வீட்டுக்குள் வாழ்க்கையைக் கழித்தபோது, சுற்றுச்சூழல் தெளிவாக மாறுவதை நாம் கவனிக்க தொடங்கினோம்என்கிறார் சுற்றுச்சூழல் பொறியாளரான போஸ் கே வா்கீஸ் .
  • கரோனா வைரஸ் தொற்றால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளை இன்னும் யாரும் முழுமையாக அறியவில்லை என்றாலும் அதை ஒரு பகுப்பாய்வின் மூலம் விளக்க முடியும் என்று அவா் குறிப்பிடுகிறார்.
  • பொது முடக்க நடவடிக்கை காற்று மாசு அளவை குறைத்திருப்பதுடன், எதிர்வரும் பருவமழைக் காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே ஓசோன் படலத்தின் துளைகளும் இயல்பாகவே சரியாவது போன்ற அற்புதங்களும் இந்தப் பொது முடக்கத்தால் நிகழும் என்கிறார் வா்கீஸ்.
  • விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் துகள்கள் அதிக அளவில் குறைந்தன. காற்று மண்டலத்தின் மேல் பசுமைக் குடில் வாயு உமிழ்வுகள் குறைந்து இருக்கின்றன.
  • இப்படி எல்லா விதத்திலும் சுற்றுச்சூழல் மாசு குறைந்து இயல்பான நிலைக்கு திரும்ப உதவியதற்காக பொது முடக்கத்திற்கு நன்றி சொல்லவதா அல்லது அதற்குக் காரணமான கரோனாவுக்கு நன்றி சொல்வதா என்று தெரியவில்லை.
  • கடந்த மாதம்வரை தொழிற்சாலைகள் அனைத்துமே பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்தன. இதனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை நிறுத்தப்பட்டிருந்தது.
  • இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்றின் மாசு குறைந்திருந்தது. காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் மாசு அளவை கண்டறிய நான்கு இடங்களில் மையங்களை அமைத்துள்ளது.

காற்று மாசு அதிகரிக்ககூடிய அபாயம்

  • நான்கு மையங்களிலும் நடத்திய ஆய்வில், முதன்முதலில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாத இறுதி வாரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் காற்று தரக்குறியீடு சராசரியாக 61.5 ஆகவும், முதல் கட்ட பொது முடக்கக் காலமான மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான காலத்தில் காற்று தரக்குறியீடு 42.3 ஆகவும், இரண்டாம் கட்ட பொது முடக்கக் காலமான ஏப்ல் 15 முதல் மே 3 வரையிலான காலத்தில் காற்று தரக்குறியீடு 29.3 ஆகவும் இருந்துள்ளது. அதாவது சிறிது சிறிதாகக் குறைந்திருந்தது.
  • மூன்றாம் கட்ட பொது முடக்கம் சில தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டதால் அந்த நாள்களில் மட்டும் காற்றின் தரம் 34.3 ஆக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
  • பொது முடக்கத்திற்கு முந்தைய காலத்தில் 37.4 சதவீத நாள்கள் மட்டுமே காற்றின் தரக் குறியீடானது நல்ல நிலையில் இருந்ததாகவும் முதலாம் கட்ட பொது முடக்கக் காலத்தில் 78.6 சதவீதம் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் இருந்ததாகவும் இரண்டாம் கட்ட பொது முடக்கக் காலத்தில் 94.7 சதவீதம் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்ததாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
  • தற்போது வழிபாட்டுத் தலங்கள் திறப்பு, பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளா்வுகளுடன் பொது முடக்கம் தொடா்வதால் பழையபடி காற்று மாசு அதிகரிக்ககூடிய அபாயம் இருப்பதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கிறார்கள்.

நன்றி:  தினமணி (08-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்