TNPSC Thervupettagam

கரோனாவிடம் இதுவரை பெற்றதும் கற்றதும்!

December 17 , 2021 961 days 526 0
  • உலகப் பெருந்தொற்றாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. கிட்டத்தட்ட 27 கோடிப் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
  • 2019 டிசம்பரில் சீனாவின் வூகானில் பிறந்த ‘நாவல் கரோனா வைரஸ்’ இதுவரை 222 நாடுகளில் பரவி, மூன்று அலைகளை உருவாக்கி, பலகட்டப் பொதுமுடக்கங்களைக் கொண்டுவந்து, உலக மக்களை முடக்கியது. சர்வதேசப் பொருளாதாரம் முடங்கியது.
  • சாமானியரின் வாழ்வாதாரம் சரிந்தது. கல்வி நிலைகுலைந்தது. நோய் குறித்த அச்சமே புதிய நோயானது.
  • கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியிடம் உலகமே சரணடைந்தது. ஆனாலும், தடுப்பூசியாலும் தற்காப்பினாலும் இதன் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தபோது, ‘ஒமைக்ரான்’ தொற்றுப் பரவல் பழையபடி அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.
  • இதனால், ‘கரோனாவுக்கு எப்போதுதான் முடிவு?’ என்பதே உலகளாவிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு விடை தெரிய இரண்டு வயது கரோனாவிடம் நாம் பெற்றதையும் கற்றதையும் பரிசீலிப்பது அவசியமாகிறது.

பெற்றது என்ன?

  • ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் வலுவில்லாமலிருந்த எல்லா நாடுகளிலும் கரோனாவின் முதல் அலை தீவிரமாகப் பரவியது.
  • முதல் அலையில் பெரும்பாலும் முதியோருக்கும், அடுத்த அலையில் இளையோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும் தொற்றுப் பரவல் அதிகரித்தது.
  • இந்தப் பெருந்தொற்றில் நம்மை அதிகம் கலங்கடித்தவை அதன் உருமாற்றங்களே! ஆர்.என்.ஏ. வைரஸ்களுக்கு ஒரேநேரத்தில் அதிகம் பேருக்குப் பரவ இடம்கொடுத்தால் அவை உருமாறும்.
  • அதன்படி, கரோனா வைரஸ் இதுவரை 13 முறை உருமாறியுள்ளது. அவற்றில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகியவை கவலைக்குரியதாக அடையாளம் காணப்பட்டன. அந்த வரிசையில் இப்போது ஒமைக்ரான் இணைந்துள்ளது.
  • வைரஸ் உருமாறுவதற்கும் பொதுச்சமூகம்தான் காரணம். 2020 டிசம்பரில், பிரிட்டனில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டதும், மக்கள் முகக்கவசம் அணிவது, கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தற்காப்புகளை அலட்சியப்படுத்தியதால்தான்,
  • அது ‘ஆல்பா வைரஸ்’ என உருமாறி என்றுமில்லாத வேகத்தில் பரவியது. அதேபோல், இந்தியாவில் முதல் அலை முடிவதற்கு முன்னரே மக்கள் அவசரப்பட்டு கரோனாவுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் கைவிட்ட காரணத்தால்தான் 2021 ஏப்ரலில் ‘டெல்டா’வாகப் புது வேகமெடுத்து இரண்டாம் அலை பாதிப்புகளைத் தீவிரப்படுத்தியது; ஐரோப்பிய நாடுகளில் மூன்றாம் அலைக்கும் காரணமானது.
  • இதுவரை எந்த வைரஸுக்கும் தடுப்பூசி தயாராவதற்குக் குறைந்தது 10 ஆண்டுகள் பிடித்தன. ஆனால், கரோனாவுக்கு ஓராண்டிலேயே 4 வகைப்பட்ட தடுப்பூசிகள் தயாராகிவிட்டன.
  • அதற்குத் தற்போதைய தொழில்நுட்ப உத்திகள் கைகொடுத்தன. அவற்றில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. உதாரணத்துக்கு, இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி பழைய வகை.
  • பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி புதிய வகை. இந்தியாவிலிருந்து ‘கோர்பிவேக்ஸ்’, க்யூபாவிலிருந்து ‘அப்தலா’ ஆகிய புரத அடிப்படைத் தடுப்பூசிகளும் வர இருக்கின்றன.
  • இவை மற்ற தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பைவிடப் பல மடங்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பவை. மேலும், இந்தப் பெருந்தொற்று தொடங்கியபோது கரோனாவுக்கெனத் தனி சிகிச்சைகள் இல்லை.
  • இப்போதோ ரெம்டெசிவிர், ஒற்றைப் படியாக்க எதிரணு மருந்துகள் (Monoclonal antibodies), ஸ்டீராய்டு போன்ற ஊசி மருந்துகளும், மோல்னுபிரவிர், பேக்ஸ்லோவிட் ஆகிய மாத்திரைகளும் கிடைப்பதால், டெல்டாவை மட்டுமல்ல ஒமைக்ரானையும் அடக்குமளவுக்கு மருத்துவம் வலுவடைந்துவிட்டது; தொற்றாளருக்கு உயிராபத்து குறைந்து விட்டது.

கற்றது என்ன?

  • முதல் அலையின்போது இந்தியா உட்பட பல நாடுகளில் கடுமையான பணிச்சுமை, போதிய பாதுகாப்புக் கருவிகள் இல்லாமை போன்ற பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றினர்; உயிரையும் கொடுத்தனர்.
  • இரண்டாம் அலையின்போது படுக்கை வசதிகள், ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவக் கட்டமைப்பு எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
  • அடுத்த முறை இப்படியொரு மோசமான சூழலைத் தவிர்க்க முக்கிய மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் புரிந்தது.
  • சீனா இதற்கு முன்னுதாரணமானது. முதல் அலையில் அது பொதுமுடக்கத்தில் கடுமை காட்டியது. கரோனாவுக்கென பத்தே நாட்களில் 2,300 படுக்கைகளுடன் 2 புதிய மருத்துவமனைகளைக் கட்டியது.
  • செவிலியர் செய்யும் துணை மருத்துவங்களில் ரோபோட்டுகளைப் பயன்படுத்தியது. இப்படிப் பல அசாத்திய வழிகளில் சீனா விரைவிலேயே கரோனாவிடமிருந்து மீண்டு விட்டது.
  • கரோனாவிடம் கற்றதில் முக்கியமான விஷயம், இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பூசியால்தான் ஒழித்துக்கட்ட முடியும் என்பது. அதேநேரம், ‘தடுப்பூசியால் எந்த நாடும் கரோனாவைத் தனித்து வென்றுவிட முடியாது.
  • உலகின் கடைசி மனிதருக்கும் தடுப்பூசி கிடைத்தால்தான் எல்லோரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்ததை வளர்ந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை; தடுப்பூசி விநியோகத்தில் ‘சமநெறி’யைக் கையாளவில்லை. அமெரிக்காவில் 60% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவில் 4% பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. ‘கோவேக்ஸ்’ ஒப்பந்தப்படி ஜி7 நாடுகள் 87 கோடித் தவணை தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக ஒப்புக் கொண்டதில், இதுவரை 10 கோடி மட்டுமே வழங்கியுள்ளன.
  • ‘இந்தச் சீரற்ற நெறிமுறை ஏழை நாடுகளை மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளையும்தான் பாதிக்கப் போகிறது.
  • ஏழை நாடுகளில் கரோனா தொற்று நீடிக்கும்போது, புதிய உருவமெடுத்து மற்ற நாடுகளுக்கும் அது பரவும்’ எனும் உலக சுகாதார நிறுவனத்தின் அப்போதைய எச்சரிக்கையை ஒமைக்ரான் தற்போது உண்மையாக்கியுள்ளது.
  • இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் அச்சத்தால் மூன்றாம் தவணைத் தடுப்பூசியை (Booster dose) செலுத்துவதற்கு வளர்ந்த நாடுகள் முனைப்பு காட்டுகிற அதே வேகத்தில் தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்கி, சமச்சீராக விநியோகித்து, தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உலகெங்கிலும் இல்லை எனும் நிலைமையையும் உருவாக்க வேண்டும்.
  • போதிய தடுப்பூசி இருந்தும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணைக்குத் தயங்குபவர்களும் இனியும் தயக்கம் காட்டுவது தங்களுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் ஆபத்து என்பதை உணர வேண்டும்.
  • இந்த உணர்தலுக்குப் பிரபலங்களும் சமூகத் தலைவர்களும் தன்னார்வலர்களும் உதவ வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் எல்லா நாடுகளிலும் தகுதியானவர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும்.
  • குறைந்தது ஓராண்டுக்காவது கரோனா தற்காப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். இப்படி, அரசுகளோடு சமூக ஒத்துழைப்பும் இணையும்போது கரோனா வீரியமிழந்துவிடும்; தொற்றுவது நின்றுவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்