TNPSC Thervupettagam

கரோனாவும் காடுகளும்

April 17 , 2020 1744 days 811 0
  • உலகெங்கும் அச்சுறுத்தும் வேகத்தில் கரோனா பரவிவருகிறது. காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் தற்போது நடைபெற்றுவருகின்றன. ‘எபோலா’, ‘எச்ஐவி’, ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் ஆகியவையும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியவையே.

விலங்குகள் தான் காரணமோ?

  • பெருந்தொற்று குறித்த அச்சத்தையும் எச்சரிக்கையையும் இவையெல்லாம் ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தன. தற்போது கரோனா கொள்ளைநோயானது அறிவியலாளர்களின் கடுமையான அச்சத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரத்தில் உயிருள்ள விலங்குகளை வைத்திருக்கும் சந்தையில் தொடங்கியதாகக் கருதப்படும் இந்தத் தொற்றுநோய், பல விஷயங்கள் குறித்து நம் கவனத்தைத் திருப்புகிறது. காடுகளை அழிப்பதும், காட்டு விலங்குகளைப் பிடிப்பதும், அவற்றைப் பண்ணைகளில் வளர்ப்பதும் மனிதர்களுக்கு அருகே அவற்றைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. அந்த விலங்குகளிடம் உள்ள வைரஸ்கள் உடனடியாக வளர்ப்பு விலங்குகளுக்குத் தொற்றி அவற்றிடமிருந்து மனிதர்களுக்குத் தாவியிருப்பதும் நம்முடைய விவாதத்தைக் கோரும் விஷயங்களில் ஒன்று.

விலங்குள் வியாபாரம்

  • காடுகளை ஊடறுத்து சாலைகள் போடுவது, கனிமச் சுரங்கங்கள் தோண்டுவது போன்ற பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும் அளவிலான மக்களைக் காட்டு விலங்குகளுடன் தொடர்பு ஏற்பட வைக்கிறது. இன்னொரு பக்கம், காட்டு விலங்கு வகைகளை விற்பதும் உலக அளவில் நடக்கிறது. வூஹானில் ஓநாய்க் குட்டிகள், எலிகள், ஜவ்வாதுப் பூனைகள், குள்ளநரிகள் போன்ற விலங்குகளை விற்றிருக்கிறார்கள். ‘நிபா’, ‘ஹேண்ட்ரா’ ஆகிய வைரஸ்கள் எப்படிப் பரவின என்பதற்கான வரலாறு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. நிபா வைரஸானது வௌவால்களிடமிருந்து பன்றிகளுக்குப் பரவியிருக்கிறது. ஹேண்ட்ரா வைரஸானது வௌவால்களிடமிருந்து குதிரைகளுக்குப் பரவியிருக்கிறது. காடுகளின் உயிர்ப் பன்மையானது பல்வேறு விலங்குகளிடையே காணப்படும் ஆபத்தான வைரஸ்களையும் பிற நோய்க்கிருமிகளையும் மக்களிடமிருந்து விலக்கியே வைக்கக்கூடியது. காடுகளை நாம் குலைக்கும்போதும், காட்டு விலங்குகளை நாட்டு வாழ்க்கை நோக்கி நகர்த்தும்போதும் நாட்டுச் சூழலும் மாறும். கரோனா காலகட்டம் உணர்த்தும் மிக முக்கியமான உண்மை இது.

மனிதகுலம் சிந்திக்க வேண்டும்

  • நம்மை முடக்கிவிடக்கூடிய கொள்ளைநோய்கள் வரக் காத்திருக்கின்றன என்ற எச்சரிக்கையை அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலியலாளர்களும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தாலும், உலக நாடுகளின் அரசுகள் பலவும் அலட்சியமாகவே இருந்துவிட்டன. இப்போது, உலகமயத்தின் சூழலில் ஒரு புதிய வைரஸ் தங்குதடையற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பேரளவில் பரவிக்கொண்டிருக்கிறது; கொத்துக்கொத்தாகக் கொன்றுகொண்டிருக்கிறது; ஊரடங்குகளைக் கட்டாயமாக்குகிறது; பொருளாதாரத்தை நாசப்படுத்துகிறது. மனித குலத்தின் பல்லாண்டு கால உழைப்பை, கனவை அர்த்தமற்றதாக்குகிறது. காடுகளைச் சுரண்டுவதை மனித குலம் இனியேனும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ளுமா?

நன்றி: தி இந்து (17-04-2020)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top