TNPSC Thervupettagam

கரோனாவை எதிர்கொள்ள கிராமங்கள் தயாரா?

July 3 , 2020 1658 days 774 0
  • கொள்ளைநோயால் பாதிக்கப்படாத வகையில் இந்தியா ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

  • நகர்ப்புற இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டது.

  • மருத்துவப் பணியாளர்கள், திட்டம் வகுப்பவர்கள், கொள்கை வகுப்பவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் வகையில் நகரங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

  • ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் தகவல்கள்படி பார்த்தால், இந்த நகர்ப்புறப் பகுதிகளில் – குறிப்பாக, இந்தக் கொள்ளைநோயின் கேந்திரமாக இருக்கும் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் – மருத்துவக் கட்டமைப்பு திணறிக்கொண்டிருக்கிறது.

மாறுகிறது சூழல்

  • தற்போது நாம், இந்திய நகர்ப்புறங்களில் ஏற்பட்ட கொள்ளைநோய் அலையின் தீவிரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  • நினைவில் கொள்க, நாட்டின் 65% மக்கள்தொகை கிராமப்புறங்களில் வசிக்கிறது. குறைந்த அளவிலான தொற்றாளர்கள், மரணங்கள் தவிர்த்து கிராமப்புறங்களில் கரோனாவின் தாக்கம் குறைவே. அதற்குக் காரணம், தொற்று இன்னும் அதிகம் பரவவில்லை.

  • ஆக, கிராமப்புறங்களில் உள்ளவர்களும், எளிதில் கொள்ளைநோய்க்கு ஆட்படக்கூடியவர்களுமான பெருவாரியான மக்கள் இன்னும் இந்தக் கொள்ளைநோயின் தீவிரத்தை உணரவில்லை.

  • ஆனால், சூழல் மாறுகிறது. சமீபத்தில் பொதுப் போக்குவரத்து கணிசமான அளவுக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது; மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

  • இவையெல்லாம் மேலும் ஆபத்தான அலைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

  • பிற நாடுகளிலிருந்து வான்வழியாக இந்தியாவுக்கு வந்தவர்களால் நகர்ப்புறங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்றால், நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்பவர்களால் அங்கு இந்தக் கொள்ளைநோயின் அலை தோன்றுவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது.

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு

  • மனித மேம்பாட்டுக்கு அத்தியாவசியமான மருத்துவப் பராமரிப்பு, கல்வி இரண்டையும் பொறுத்தவரை இந்தியாவில் நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையே எப்போதும் பிளவு இருந்துகொண்டே இருக்கிறது.

  • இந்தக் குறைபாடானது, கிராமப்புறத்தினர் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை; ஒட்டுமொத்த தேசத்தின் செல்வ உருவாக்கத்துக்கும்தான்.

  • ஓரளவு வசதிகளைக் கொண்டிருக்கும் நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்பாலேயே கரோனா சுனாமியைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை எனும்போது, கொள்ளைநோய் கிராமங்களுக்கும் பெருமளவு பரவினால், ஏற்கெனவே மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் அங்கெல்லாம் என்னவாகும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.

  • ஒட்டுமொத்த நாட்டுக்கும் கொண்டுவந்த பொதுமுடக்கத்தின் காரணமாக ஒரே நேரத்தில் நகர்ப்புற, கிராமப்புற வாழ்க்கை முடங்கிப்போயிருக்கிறது என்றாலும், இந்தக் கொள்ளைநோயின் பரவல் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரே நேரத்தில் நிகழாது.

  • நகர்ப்புற அலை உச்சத்தைத் தொடும் நேரத்தில், கிராமப்புற அலை தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட தொற்றுப் பரவலே இல்லாத நேரத்தில், பொது முடக்கம் இருந்தது.

  • தற்போது கரோனா தொற்றின் கிராமப்புற அலை தொடங்கியிருக்கும் நேரத்திலோ மக்கள் முகக்கவசம் இல்லாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் வெளியே செல்கிறார்கள், கடைத்தெருக்களில் கூடுகிறார்கள். ஆபத்து நெருங்கிவிட்டதை இது உணர்த்துகிறது.

  • எனினும், இதை யாரும் கவனிக்கவில்லை என்பதால் ஆபத்தைத் தவிர்ப்பதற்கான ஆயத்தம் ஏதுமின்றி இருக்கிறோம்.

எப்படி எதிர்கொள்வது?

  • சமூகத் தடுப்பு மருந்துக்கு இதுவே தக்க தருணம். இது கொள்ளைநோய் கிராமங்களுக்கு முழுவதுமாகப் பரவுவதற்கு முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கையாகும்.

  • ஒவ்வொரு கிராமம், தாலுக்கா, மாவட்ட அளவில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்போடும் மேற்கொள்ளப்படும், அதிகாரங்கள் பகிரப்பட்ட அணுகுமுறைதான் தற்போது மிகவும் தேவை.

  • அச்சு ஊடகம், வானொலி, மின்னணு ஊடகம், செல்பேசி வழியாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்தி, கிராமத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

  • அவர்களின் சுயபாதுகாப்பும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பும் அவர்கள் கையில்தான் இருக்கின்றன என்பதை உணர்த்தும் வகையில், அவர்களுக்குத் தெளிவான மொழியில் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

  • நமது இயல்புகளில் இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம் – ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பருத்தியாலான முகக்கவசத்தைக் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்; கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • எல்லா முதியவர்களும், ஏற்கெனவே வேறு நோய்களைக் கொண்டிருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பிறரிடம் பேசும்போது, வீட்டில் இருக்கும்போதுகூட, இவர்கள் எல்லோரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் இந்த மோசமான நோயால் மரணமடைந்துவிடாமல் நாம் தடுக்க வேண்டும்.

  • அடுத்து, நம்முடைய மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக, ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மற்ற மருத்துவ அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவையும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • மெலிதானது முதல் மிதமானது வரை கரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

  • அடிப்படைப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வீட்டுக்கே கொண்டுவந்து தருதல் வேண்டும், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களைக் கொண்டு தினமும் ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட வேண்டும்.

  • இதுபோன்ற ஒவ்வொரு நோயாளியும் ஒரு மருத்துவ நிபுணரின் பொறுப்பாக்கப்பட வேண்டும், அவர் தினமும் தொலைபேசியில் பேசுவதன் மூலம் யாருக்கெல்லாம் நிமோனியா ஆபத்து இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களை மருத்துவமனைக்கு வரச்செய்வார்.

  • தொற்றாநோய்களுக்கும் பொதுவான பிற நோய்களுக்கும் தொலைமருத்துவ முறையில் மூத்த மருத்துவ நிபுணர்களால் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும்.

  • தொடர்ந்து தொலைபேசியின் மூலம் அந்த நோயாளிகளைப் பின்தொடர வேண்டும். இந்த அணுகுமுறையானது, எந்தக் கட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் உதவி நமக்கு அதிகமாகத் தேவையோ அந்தக் கட்டத்தில் தேவையான மருத்துவப் பணியாளர்களை கரோனா காரணமாக நாம் இழந்துவிடாமல் தடுக்கும்.

  • முக்கியமான இந்தக் கட்டத்தில் நாம் தூங்கிவிட்டோம் என்றால், நம்மை நாமே மன்னிக்கவே முடியாத பெரும் தவறைச் செய்தவர்களாகிவிடுவோம்.

  • கிராமப்புறங்களில் பரவக்கூடிய பெருந்தொற்றைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அறிவையும் திறனையும் தமிழ்நாட்டின் மருத்துவ அதிகாரிகளும் மருத்துவத் துறையினரும் பெற்றிருக்கிறார்கள்.

நன்றி: தி இந்து (03-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்