TNPSC Thervupettagam

கரோனாவை முறியடிக்க ஒரு செயல்திட்டம்

May 14 , 2021 1352 days 573 0
  • ஒருவருக்கொருவர் மாறி மாறிக் குற்றஞ் சாட்டிக்கொண்டிருக்கும் விளையாட்டை விடுத்து (ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட வெவ்வேறு நிலைகளில் பொறுப்புடைய அனைவருமே) கரோனா பெருந் தொற்றின் இரண்டாவது அலையைக் கூடியவரை முன்கூட்டியே சமாளிப்பதற்கு உடனடியாகச் சில அடிகளை எடுத்து வைக்க வேண்டியது அவசியம்.
  • அதற்கு நாம் தயாராகாத பட்சத்தில், ஒரு சுனாமியைப் போல நம்மை அது அள்ளிக் கொண்டு போய்விடும்.
  • முதலாவதாக, தடுப்பூசியின் மூலமாகப் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க வேண்டும்.
  • இது மட்டும்தான் இந்த அலையை நீண்ட கால நோக்கில் எதிர்கொள்வதற்கான சிறந்த தீர்வு.
  • தடுப்பூசி விநியோகம் போதுமான அளவில் இல்லையென்றால், 18-44 வயதினரை 35-44, 25-34, 18-24 என்று சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் அடுத்தடுத்துத் தடுப்பூசி போட வேண்டும்.
  • இதுவே குழப்பங்கள், தொந்தரவுகள், அபாயங்களுக்கு வாய்ப்புள்ள நிலைகளைக் குறைக்கும் என்பதோடு கூட்டம் அதிகமுள்ள தடுப்பூசி மையங்களிலிருந்து மேலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும்.
  • மேலும், ‘கோ-வின்’ இணையதளத்தின் வழியாகத்தான் முன்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவும் கூடாது. லட்சக்கணக்கான மக்கள் இன்னும் கணினியையோ செல்பேசிகளையோ பயன்படுத்துவதற்கும் இணைய வசதிகளைப் பெறுவதற்கும் வாய்ப்பில்லாத நிலையில்தான் இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் பொறுப்பு

  • இரண்டாவதாக, அனைத்துத் தடுப்பூசிகளையும் உற்பத்தியாளர்களிடமிருந்து தயாரிப்புச் செலவுடன் சேர்த்துக் குறைந்தபட்ச லாபத்தையும் உள்ளடக்கிய விலையில் ஒன்றிய அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
  • ஏதாவது ஒரு மாநிலம் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையிலோ அல்லது அதற்கடுத்த நிலைகளிலோ நிதியுதவி செய்திருந்தால் அதையும் விலை நிர்ணயத்தின்போது கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, மாநில அரசுகளுக்குத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு அவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்துக்கும் அளிக்கப்பட வேண்டும்.
  • மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகத் தடுப்பூசிகளை வாங்குவதன் மூலமாக அளிப்புச் சங்கிலியை அவர்களே உருவாக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காமல் ஒன்றிய அரசிடமிருந்து படிப்படியாக அது சென்று சேரும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
  • பொதுச் சந்தையில் தடுப்பூசி விற்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு அனுமதித்தால் அது கள்ளச் சந்தையை நோக்கியே இட்டுச்செல்லும்.
  • தடுப்பூசிகள், ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடுகள் நிலவும் தேசிய அளவிலான இத்தகைய மருத்துவ நெருக்கடிச் சூழலில், பொதுச் சந்தை என்பது தீர்வாக இருக்க முடியாது.
  • இந்நிலையில், தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் மாநில அரசுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே போட்டியை உருவாக்குவது மருந்து உற்பத்தியாளர்கள் தடுப்பூசி விலையைத் தமது விருப்பத்திற்கேற்றவாறு உயர்த்திக்கொள்ள வாய்ப்பளிக்கும், நிச்சயம் அது ஒரு நியாயமற்ற செயல்.

ஒரே விலையில் தடுப்பூசி

  • மூன்றாவதாக, அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே விலையில் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, 45-59 வயதினரில் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் விலையின்றித் தடுப்பூசி போடப்பட்டால், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தவணைக்கு ரூ.250 என்பது போன்று ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். தடுப்பூசி குறைவான விலையில் கிடைப்பதற்கு ஒன்றிய அரசு மானியம் வழங்க வேண்டும்.
  • ஏனெனில், மாநில அரசுகளைக் காட்டிலும் ஒன்றிய அரசுக்கே அதிக நிதியாதாரங்கள் உள்ளன. இது தேசிய அளவிலான நெருக்கடிநிலை; மாநில அளவிலானது அல்ல.
  • பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், நேர்மறையான புறச்சக்திகளை ஊக்குவிப்பதற்காக ஒரு சேவைக்கு மானியம் அளிப்பது சரியானதுதான். காரணம், ஒருவருக்குத் தடுப்பூசி போடுவதால் அவர் மூலமாகத் தொற்று பரவும் வாய்ப்பு துண்டிக்கப்பட்டுப் பல பேர் பயனடைகிறார்கள்.
  • நான்காவதாக, இந்தத் தேசிய மருத்துவ நெருக்கடியின் பெருந்தாக்குதலைச் சமாளிக்க முன்கூட்டியே தடுப்பூசி விநியோகத்தைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.
  • ஒன்றிய அரசு உடனடியாகக் கட்டாய உரிம விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விதிவிலக்கைப் பயன்படுத்தும் வாய்ப்பு உலக வர்த்தக நிறுவனத்தாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • எனவே, காப்புரிமை பெற்றுள்ள தடுப்பூசிகளை மற்ற மருந்து உற்பத்தியாளர்களும் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.
  • புதிய மருந்துகளைக் கண்டுபிடித்த மருந்து நிறுவனங்களுக்கு நியாயம் செய்யும் விதமாக, மருந்துகளுக்குக் காப்புரிமையைப் பெற்றுள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளை அரசு திருப்பியளித்து அந்நிறுவனங்களின் இழப்பைச் சரி செய்யலாம்.
  • ஐந்தாவதாக, ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளும் போதுமானதாக இல்லை. மிகவும் மோசமான சிக்கல் என்பது மருத்துவர்களின் பற்றாக்குறைதான்.
  • செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் அளவையும் மற்ற முக்கியமான அளவீடுகளையும் தொடர்ந்து கண்காணிக்காவிட்டால், கரோனா நோயாளிகளுக்குப் பயனுள்ள சிகிச்சையை அளிக்க முடியாது.
  • எனவே, படிப்பை முடித்துவிட்டு இறுதித் தேர்வுக்காகக் காத்திருக்கும் மருத்துவ மாணவர்களையும் இறுதியாண்டு படிக்கும் செவிலியர்களையும் மருத்துவமனைகளில் ஓராண்டு காலத்துக்கு கரோனா சிகிச்சையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அவர்களின் இந்த அசாதாரணமான சேவையானது முழுமையான மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் அவர்களைத் தகுதியடையச் செய்கிறது, அவர்களது ஓராண்டு பணிக்காலம் முடிவடையும்போது போதுமான கூடுதல் பயிற்சியைப் பெற்றவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
  • இது யுத்த காலத்தைப் போன்ற சூழல், யுத்த காலத்தின் அவசர நடவடிக்கைகள் அனைத்துமே தேவைப்படுகிறது.

கரோனா பணியாளர்கள்

  • ஆறாவதாக, மருத்துவர்கள் ரெம்டெசிவிர் அல்லது அதுபோன்ற அவசர கால மருந்துகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள், அந்த மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
  • மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படிப் பார்த்தால், ரெம்டெசிவிர் மட்டுமே குணப்படுத்திவிட முடியாது. ஆக்ஸிஜனாலும் ஸ்டீராய்டுகளாலும் மட்டுமே அது இயலும்.
  • ரெம்டெசிவிர் சில பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு அம்மருந்தை மிகவும் குறிப்பிட்ட சில சூழல்களில் கடுமையான மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • ஒருவேளை ரெம்டெசிவிரை பரிந்துரைக்க வேண்டியிருந்தால், மருத்துவர்களோ மருத்துவமனைகளோ அந்த மருந்துகளை அளிக்க வேண்டும்.
  • ஏழாவதாக, எரியூட்டும் இடங்களிலும் புதைக்கும் இடங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாகத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
  • மனிதாபிமானமற்ற வகையில் கடுமையான பணிச்சுமைக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்பதைத் தாண்டி, வைரஸ் தாக்குதலுக்கு இவர்கள் எளிதாக இலக்காகும் அபாயமும் இருக்கிறது. மேலும், இந்த நோய் மேலும் பரவுவதற்கும் இவர்கள் காரணமாகிவிடுவார்கள்.
  • எட்டாவதாக, மருத்துவமனைப் படுக்கைகள் கிடைக்கும் வாய்ப்பு, ஆக்ஸிஜன் உருளைகள், செறிவூட்டிகள், இதர அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பிலான சரியான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • தற்போது அளிக்கப்பட்டுவரும் தகவல்கள் போதுமானதாக இல்லை. ஒன்றுக்கொன்று முரணாகக் கிடைக்கும் தகவல்கள் நோயாளிகளையும் ஏற்கெனவே மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் அவர்களது உறவினர்களையும் பீதிக்கு ஆளாக்குகின்றன.
  • தேவையான அனைத்துத் தகவல்களையும் உண்மையான முறையில், அதிகாரபூர்வமான ஒரே இணையதளத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விருப்பத் தேர்வுகளுக்கு இடமில்லை

  • அடுத்ததாக, உள்ளூர் மன்றங்கள்/குடியிருப்போர் சங்கங்கள் உள்ளிட்ட தன்னார்வலர் அமைப்புகளிடம் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் ஆக்ஸிமீட்டர்களும் ஆக்ஸிஜன் உருளைகளும் குறைந்தபட்ச அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும்.
  • இவை அருகிலுள்ள காவல் நிலையங்களின் கண்காணிப்பிலும் ஒருங்கிணைப்பிலும் இருப்பது சிறந்தது. அவசர மருத்துவத் தேவைகளுக்காக எந்நேரத்திலும் அழைக்கும் வகையில் அவர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
  • இது குறிப்பிட்ட அந்தப் பகுதியின் கூட்டுத் தேவையைப் பூர்த்திசெய்யும். மேலும், எந்தவொரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாலும் உள்ளூர்த் தேவைகளை முழுமையாக உடனுக்குடனும் நிறைவேற்ற இயலாது.
  • இறுதியாக, அரசியல்ரீதியில் யார் பெரியவர் என்று பேசுவதற்கான நேரமில்லை இது. உள்நாடோ வெளிநாடோ எங்கிருந்து வந்தாலும் அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து இந்நாட்டைப் பெருந்துயரிலிருந்து விடுவிக்க வேண்டும்.
  • இவ்விஷயத்தில், பிரதமருக்கோ மாநில முதல்வர்களுக்கோ தங்களது விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவோ அரசியல்ரீதியில் நன்மதிப்புகளைப் பெற முயலவோ எந்தவிதத் தனியதிகாரமும் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்