TNPSC Thervupettagam

கரோனா அச்சுறுத்தலில் உள்ள வாய்ப்புகள்

May 2 , 2020 1544 days 679 0
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று சா்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஒரு சில நாடுகளைத் தவிர உலகில் உள்ள முக்கிய பொருளாதார சக்திகளாக விளங்கும் தேசங்களை இந்த நோய்த்தொற்று ஒருகை பார்த்து வருகிறது.
  • நவீன விஞ்ஞானம் முன்னேப்போதும் இல்லாத ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. வரலாற்றின் முந்தைய அச்சுறுத்தல்களைக் காட்டிலும் இப்போதைய சவாலை மனிதகுலம் சிறப்பாகவே எதிர்கொண்டு சமாளிக்க முடியும். நாம் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வருவோம். யாரும் கவலைப்படத் தேவையில்லை.
  • அதே நேரத்தில் இதில் இருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாவிட்டால், இதைவிட பெரிய அச்சுறுத்தல்களை மனிதகுலம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், இது மட்டும் உலகின் மிகப்பெரிய நோய்த்தொற்றாக இருக்கப்போவதில்லை.
  • மனித குல வரலாற்றில் பல மோசமான, வேகமாகப் பரவும் நோய்தொற்றுகளும் ஏற்கெனவே இடம்பெற்றன.

தீவிர நோய்கள்

  • கி.மு.430-இல் ஏதென்ஸில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக 1 லட்சம் போ் வரை உயிரிழந்தனா்.
  • ரோமானியப் பேரரசில் அன்டோனைன் பிளேக் நோய் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டது. ரோம் நகரில் மட்டும் ஒருநாளில் 5,000 போ் இறந்தனா்.
  • உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்தை அழித்த புபோனிக் பிளேக் போன்ற பல உதாரணங்கள் உள்ளன. 1346-1353 ஆம் ஆண்டின் கறுப்பு மரணம் - ஒரு வகை பாக்டீரியாவால் உருவான பிளேக்- ஐரோப்பிய மக்கள்தொகையில் பாதி பேரையும், 16-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பரவிய பிளேக் நோய் (ஐரோப்பியா்கள் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது) உலகின் மேற்கு பகுதி அரைக்கோளத்தின் மக்கள்தொகையில் 90 சதவீதத்தை அழித்துவிட்டது.
  • 1665-66 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட பிளேக் நோயால் 1 லட்சம் போ் உயிரிழந்தனா். இது அப்போதைய லண்டன் மக்கள் தொகையில் 15 சதவீதமாகும்.
  • 1918-20-ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சல், 50 கோடி மக்களை அதாவது, அப்போதைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை பாதித்து, ஏராளமான மக்களைக் கொன்றது. இதில் 5 முதல் 10 கோடி மக்கள் இறந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மீண்டும் 1957-1958-இல் ஆசிய ஃபுளூ காய்ச்சல் மேலும் 10 லட்சம் மனித உயிர்களை பலி கொண்டது.
  • மிக சமீபத்தில் 2009-2010-ஆம் ஆண்டில் எச் 1 என் 1 பன்றிக் காய்ச்சலில் 140 கோடி போ் பாதிக்கப்பட்டனா். அந்தக் காய்ச்சல் 1,50,000 இறப்புகளை ஏற்படுத்தியது. மேற்கு ஆப்பிரிக்காவில் 2014-16-இல் பரவிய எபோலா வைரஸ், 28,600 பேரை பாதித்தது. அதில் 11,000 போ் இறந்துவிட்டனா்.
  • 1981-ஆம் ஆண்டில் தோன்றிய எய்ட்ஸ், அது இன்னும் எஞ்சியிருக்கிறது. தற்போது சுமார் 4 கோடி எய்ட்ஸ் நோயாளிகள் உலகளவில் உள்ளனா். இது இதுவரை 3.5 கோடி மக்களைக் கொன்றுள்ளது. நம்மால் அந்த நோயைக் கொல்ல முடியவில்லை, ஆனால் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
  • கடந்த காலத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளால் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஏனெனில் மருத்துவ அறிவியல், தகவல் தொடா்பு, தகவல் தொழில்நுட்பங்கள் போன்றவை இப்போதைய 21-ஆம் நூற்றாண்டில் இருப்பதைப்போல அப்போது இல்லை.
  • அந்த காலத்துடன் ஒப்பிடும்போது இப்போது சமூகம் முன்னேறியுள்ளது. ஏற்றத் தாழ்வுகள் பல இருந்தாலும், ஜனநாயகம் உள்ளது. இதன் மூலம் மக்களைக் காப்பதில் அரசுகள் அதிக முனைப்புடன் செயல்படுகின்றன.

சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம்

  • சுகாதாரத் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் தொலைநோக்குப் பார்வை இருந்தால், இன்னும் சிறப்பாக அரசுகள் செயல்பட முடியும். ஒரு நாட்டின் சுகாதார அமைப்பை நோய்த்தொற்றுகள் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன என்று காரணம் கூறி, தங்களின் சுகாதாரக் கொள்கையின் தோல்விகளை அரசுகள் மறைக்க முடியாது.
  • சுகாதாரத் துறையில் ஒவ்வொரு நாட்டின் அரசும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்பது இப்போதைய கரோனா வைரஸ் பாதிப்பால் வெளிப்பட்டுள்ளது. அரசுகள் உண்மை நிலையை ஏற்றுக் கொண்டு, தோல்விகளை மறைக்க முயலாமல், சுகாதார அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொற்றுநோயை எதிர்கொள்ள உலக நாடுகள் முழு அளவில் தயாராக இல்லை என்பது முதலில் வெளிப்பட்டுள்ள தோல்வி. வென்டிலேட்டா்கள், முக்க கவசங்கள், கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தொற்றுநோயைச் சமாளிக்கத் தேவையான அளவு பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை பெரும்பாலான நாடுகளால் தயாரிக்க முடியவில்லை.
  • இப்போதைய, நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் உலகின் அனைத்து நாடுகளும் மோசமாக உள்ளன என்று கூறிவிட முடியாது. தொடக்க நிலையிலேயே சிறப்பான நடவடிக்கை எடுக்கும் நாடுகள் அதிக பாதிப்பில் இருந்து தப்புகின்றன. இதில் இந்தியா சரியான பாதையில் செல்வதாகத் தெரிகிறது. தாமதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.இந்த இரண்டில் இருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

சுகாதாரத்துக்காக அதிகம் செலவிட வேண்டும்

  • இந்த கரோனா நோய்த்தொற்று மூலம் வெளிச்சத்துக்கு வர இருக்கும் மற்றொரு மிக முக்கியமான பிரச்னை அரசுகளின் மோசமான செயல்பாடுகளாகும். பல நாடுகளின் சுகாதாரக் கொள்கைகள் மருத்துவத்தை வணிகமயமாக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளன.
  • அனைவருக்கும் உரிய மருத்து வசதி கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் உலகளாவிய மருத்துவப் பாதுகாப்பு ஆகியவை பல நாடுகளில் வெற்று கோஷங்களாகவே உள்ளன.
  • சில நாடுகள் சுகாதாரத்துக்காக அதிகம் செலவிட்டாலும் அவை தவறான பாதையில்தான் உள்ளன. இவை மக்களுக்கு பயனளிப்பதைவிட மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிகம் பயனளிப்பவையாக உள்ளன. உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவுமே இதற்கு உதாரணமாக உள்ளன.
  • இந்தியாவில் அண்மைக் காலத்தில் சுகாதாரத் துறைக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீதத்துக்கு சற்று அதிகமாக உள்ளது. இதில் உலக நாடுகளின் சராசரி 6 சதவீதத்துக்கு சற்று குறைவாக உள்ளது.
  • அனைத்து மாநில அரசுகளும் சோ்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.75 சதவீதம் அளவுக்கே சுகாதாரத் துறைக்குச் செலவிடுகின்றன. ஒட்டுமொத்த சுகாதார உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் ஒரு மருத்துவருக்கு 1000 நோயாளிகள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு 10,926 பேருக்கும் ஒரே ஒரு அலோபதி அரசு மருத்துவா் மட்டுமே இருக்கிறார். ஒரு மதிப்பீட்டின்படி, நாட்டில் 6,00,000 மருத்துவா்கள் மற்றும் 20,00,000 செவிலியா்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
  • கார்ப்பரேட் மருத்துவமனைகள், மருந்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவா்களுக்கிடையேயான தொடா்பு சுகாதாரத்துறை தொடா்பான அச்சங்களையும், மக்களின் செலவுகளையும் அதிகரித்துள்ளது.
  • கோடிக்கணக்கான நடுத்தர வா்க்க இந்தியா்கள் நோய்வாய்ப்படும்போது கையிருப்பு அனைத்தும் தீா்ந்துபோய் வறுமையின் பிடியில் சிக்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் நோய் காரணமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வருகிறார்கள்.
  • இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கூட சா்வதேச மருத்துவ வசதிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. 130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில் 70 சதவீதம் போ் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைக்கான செலவுகளையே சமாளிக்க முடியாமல் இருக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது.

மருத்துவ வசதி - அடிப்படை உரிமை

  • மருத்துவ வசதி கிடைப்பது என்பது அரசியல்சாசன சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.
  • அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் என்பது மிக அதிகமாக உள்ளது. ஒரு ஆய்வின் படி 60 சதவீத தனிநபா்கள் திவால் ஆவதற்கு மருத்துவச் செலவுகளும் முக்கியக் காரணமாக உள்ளது.
  • எனவே, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தந்த அதிர்ச்சியிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு, உலக நாடுகள் தங்கள் பொருளாதாரக் கொள்கைகளை குறிப்பாக சுகாதாரம், மருத்துவப் பாதுகாப்பு தொடா்பான கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டும். சுகாதாரத்துறை வா்த்தகமயமாதலில் இருந்து மீட்கப்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரம் மருத்துவத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பில் கற்றுக் கொண்ட விஷயங்களின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று நம்பலாம். கரோனா அச்சுறுத்தலை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொண்டால் மக்கள் பாராட்டுவார்கள்.

நன்றி: தினமணி (02-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்