TNPSC Thervupettagam

கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை அனைவருக்கும் கிடைக்கட்டும்

April 15 , 2022 844 days 395 0
  • உலகின் சில பகுதிகளில் கரோனாவின் வெவ்வேறுபட்ட உருமாறிய வடிவங்கள் கண்டறியப்படுவதால், மேலும் புதிய உருமாறிய வடிவங்கள் பரவக்கூடுமோ என்ற அச்சம் இன்னும் நீடித்துவரும் நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 10-ல் தொடங்கப்பட்டிருக்கும் மூன்றாவது தவணைத் தடுப்பூசிக்கான திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
  • மூன்றாவது தவணையால் சார்ஸ் வகை தொற்றுப் பரவலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான பாதுகாப்பை அளிக்க முடியுமா என்று கேள்விகள் தொடர்ந்தபோதிலும், மூன்றாவது தவணை போடப்பட்ட நாடுகளில், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து தீவிரமான தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.
  • எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘பூஸ்டர்’ எனப்படும் தடுப்பூசியின் மூன்றாவது தவணையை முன்னெச்சரிக்கையாகப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒரு முடிவு.
  • மத்திய அரசின் இந்த முடிவையடுத்து, சீரம் நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் தங்களது தடுப்பூசித் தவணைகளுக்கான விலையை ரூ.225 ஆகக் குறைத்துள்ளன.
  • முன்பு இந்தத் தடுப்பூசித் தவணைகளின் விலை முறையே ரூ.600 ஆகவும் ரூ.1,200 ஆகவும் இருந்தன. தடுப்பூசித் தவணைகளின் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் தனியார் மருத்துவ நிலையங்கள் தங்களது சேவைக்கான கட்டணமாக ரூ.150 வசூலிக்கும்.
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப் பட்டாலும், கடந்த சில நாட்களில் அதைப் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
  • இரண்டாவது தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 9 மாதங்களுக்குப் பிறகுதான் மூன்றாவது தவணையைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
  •  இந்தக் கால அவகாசத்தைக் குறைத்தால், மூன்றாவது தவணைக்காகக் காத்திருப்போர் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.
  • மத்திய அரசு வகுத்துள்ள முன்னெச்சரிக்கை தடுப்பூசிக் கொள்கையின் முக்கியக் குறையாகச் சுட்டிக்காட்டப்படுவது, 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தனியார் மருத்துவ நிலையங்களில் மட்டும்தான் போட்டுக்கொள்ள முடியும் என்பது.
  • நிரந்தரப் பணியில்லாத உழைக்கும் மக்களுக்கு இந்தத் தடுப்பூசியின் விலை ஒரு சுமையாக மாறிவிடக்கூடும் என்றும் அதன் காரணமாக அவர்கள் தடுப்பூசியைத் தவிர்க்கக் கூடும் என்றும் சில பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு பார்வையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஜனவரியில் முன்களப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தவணைத் தடுப்பூசியைப் பரிந்துரைத்தபோது, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவ நிலையங்கள் இரண்டிலுமே அதைப் போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
  • தற்போதும் அப்படியொரு நெகிழ்வான கொள்கையைப் பின்பற்றுவதே சரியாக இருக்கும். வாய்ப்புள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
  • பொருளாதார நிலையில் நலிவுற்றவர்கள் அதற்கான சான்றுகளுடன் அரசு மருத்துவ மனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
  • வசதியற்ற ஏழை மக்கள் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இயலாத பட்சத்தில், அது பொருளாதார வசதி பெற்றவர்களுக்கு மட்டுமேயானதாக மாறி விடக் கூடும்.
  • பெருந்தொற்றுக்கு எதிரான, முழுமையான தடுப்பூசிப் பாதுகாப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கட்டும்.

நன்றி: தி இந்து (15 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்