TNPSC Thervupettagam

கரோனா நிதி ஒதுக்கீடும் மருத்துவ உட்கட்டமைப்பின் உடனடித் தேவைகளும்

March 27 , 2020 1752 days 748 0
  • · கரோனா தொற்றுத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி நிதியை ஒதுக்கிடுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருப்பதை ஒரு தொடக்கமாக நாம் கருதலாம். மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, பரிசோதனை உபகரணங்களை அதிகப்படுத்துவது, கரோனா வைரஸின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவத் துறையினருக்குப் போதிய பயிற்சியளிப்பது ஆகியவற்றுக்காக இந்த நிதியை ஒதுக்கியிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். பிரச்சினையின் தீவிரத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஒதுக்கீடானது யானைப் பசிக்குச் சோளப்பொறி என்றாலும், இந்த ஒதுக்கீட்டை ஒரு தொடக்கமாகக் கருதி, பணிகளை முடுக்கிவிடலாம் என்கிற அளவில் இது வரவேற்கத்தக்க முடிவாகும்.

தட்டுப்பாடு நிலை

  • · சிக்கல் என்னவென்றால், பொது சுகாதாரத் துறைக் கட்டமைப்பை இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு வலுவாக வைத்திருக்கும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளே கரோனாவின் பாய்ச்சலுக்கு முன்பு நடுங்குகின்றன. பல ஆண்டுகளாகவே சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைப் போதிய அளவுக்கு ஒதுக்கும் கலாச்சாரம் இந்தியாவின் மத்திய ஆட்சியாளர்களிடம் இல்லை. மாநிலங்களைப் பொறுத்த அளவில், அக்கறையில் பாரதூரமான வேறுபாடுகள் நிலவுகின்றன. குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கைக்கூட 2018 நிலவரப்படி இந்தியாவில் ஆறு மாநிலங்கள் மட்டுமே எட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார் என்றால், ஜார்க்கண்டில் 8,180 பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். மருத்துவர்களின் எண்ணிக்கையிலேயே இப்படி என்றால், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதியைப் பற்றி விவரிக்கவே வேண்டியதில்லை. ஆக, இந்தியா தன்னுடைய நெடுநாள் தவறுக்கான விலையை இன்று எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது.

புதிய கொள்கைகள்

  • · மிக அடிப்படையான விஷயமான மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பாதுகாப்பு உடைகள்கூட இங்கே போதுமான அளவில் இல்லை என்பது நம்முடைய ஓட்டைகளைத் துலக்கமாகக் காட்டும். செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. தொற்றுகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக ஸ்டெதஸ்கோப், தெர்மா மீட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். ஆக்ஸிஜன் உருளைகள், வென்டிலேட்டர்கள் போன்ற உயிர் காக்கும் உபகரணங்கள் தங்குதடையின்றி உடனடியாகக் கிடைக்கும் வகையில் அவற்றின் கொள்முதலுக்குப் பெரிய அளவில் தயாராக வேண்டியிருக்கலாம். அவற்றைத் திறம்பட இயக்குவதற்கு நிறைய பேருக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கலாம். இந்த ஒரு விஷயம் மட்டும் பெருந்தொகையிலான மரணங்களைத் தவிர்ப்பதில் அவ்வளவு பெரிய பங்கை வகிக்கக்கூடியது. ஏனென்றால், கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சுவாசப் பிரச்சினையை எதிர்கொள்ளும் கட்டமைப்பில் இருந்தாலே பாதி சிக்கலைக் கடந்துவிடுகிறார்கள். இப்படி சிகிச்சை தொடர்பில் சிந்திக்கும்போதே கழிவுகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆமாம், மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் நாம் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டியிருக்கிறது.

அவசர காலச் சிறப்பு மருத்துவமனைகள்

  • · அரசாங்கம் இப்போது உடனடியாக முடுக்கிவிட வேண்டிய இன்னொரு பணி அவசரக் கால மருத்துவமனைகளுக்கான திட்டம். 2,200 படுக்கைகள் கொண்ட கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது வங்க அரசு. சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி, சுயதனிமைக்காக வருவோரும் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நல்ல விஷயம். ஆனால், இப்படியான ஏற்பாடுகள் மட்டுமே போதாது. கரோனா சிகிச்சைக்கு என்றே அவசர காலச் சிறப்பு மருத்துவமனைகளை ஒவ்வொரு மாநிலமும் திட்டமிடுவது அவசியம். இந்தியாவில் பெரும்பாலும் மருத்துவமனைகள் நகரங்களையே மையமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. நகரங்களுக்கு வெளியே ஆள் நெருக்கம் அற்ற பகுதிகளில் அவசர கால மருத்துவமனைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கரோனா சுட்டுகிறது. சிறு நகரங்கள், கிராமங்களைக் கவனத்தில் கொண்டதாக இந்த மருத்துவமனைகளின் உருவாக்கம் அமைய வேண்டும். கரோனா சிகிச்சையில் அரசோடு தனியாரையும் சேர்த்துக்கொள்வது சரியான முடிவு. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அதற்குரிய கட்டமைப்புகளும் வசதிகளும் இருக்கின்றனவா என்பது முக்கியமான கேள்வி. தனியார் மருத்துவமனைகளை உடனடியாகத் தயார் நிலைக்குக் கொண்டுவர வேண்டிய பணியிலும் அரசு இறங்க வேண்டும்.

கூட்டு முயற்சி

  • · இவற்றுக்கு இணையாக அடித்தட்டு மக்களுக்கான உணவுக்கும், வீட்டுக்குள்ளேயே அவர்கள் முடங்கியிருக்கும் நாட்களில் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுத் தொகைக்கும்கூட அரசு திட்டமிட வேண்டும். ஏனென்றால், இங்கே உணவுச் செலவும் மருந்துக்கான செலவுதான். அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் இரண்டும் தடையின்றி நடக்கவும், அதேசமயம் இவற்றில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பாகச் செயல்படவுமான ஏற்பாடுகளும்கூட திட்டமிடப்பட வேண்டும்.
  • · இன்றைக்கு நாடு இருக்கும் சூழலில் நாட்டுக்கு நிறைய ஆக்கபூர்வமான யோசனைகள் வேண்டும். அரசு மனமாச்சரியங்கள் இன்றி எதிர்க்கட்சிகளுடனும் பலதுறை நிபுணர்களுடனும் கலந்து பேச வேண்டும். கேரளம் போன்று கிருமித் தொற்றுச் சிகிச்சையில் முன்அனுபவம் கொண்ட மாநிலங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய மாநிலங்களும் பின்பற்ற ஆலோசனை வழங்க வேண்டும். மிக முக்கியமாக, செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும் ஒருங்கிணைவும் வேண்டும். இந்திய அரசு நல்ல யோசனைகளுக்கு உடனடியாகக் காதுகொடுப்பதோடு, துரிதமாகச் செயல்பாட்டில் இறங்கவும் வேண்டும். நமக்கு அதிக நேரம் இல்லை; ஏனென்றால், மிகத் துரிதமான ஓர் எதிரியுடன் நாம் போட்டியிடுகிறோம்.

நன்றி: தி இந்து (27-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்