TNPSC Thervupettagam

கரோனா வைரஸை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

February 7 , 2020 1802 days 802 0
  • முதலில், கரோனா வைரஸ் ஒன்றும் இந்த உலகத்துக்குப் புதிதல்ல. ஏற்கெனவே இருக்கும் ஒரு வகை வைரஸ்தான். ஆனால், சமீபத்தில் அந்த வைரஸில் நடந்த மரபணு மாற்றத்தால், அது வீரியமடைந்து உலகத்தையே பாதிக்கும் பெருந்தொற்றுக் கிருமியாக உருவெடுத்திருக்கிறது.
  • வரலாறு பல பெரும் தொற்றுநோய்களைப் பார்த்துள்ளது. ஆனால், இந்த கரோனா நோய் இதுவரை நாம் கண்ட தொற்றுகளிலேயே மிகப் பெரியதாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதது. இரண்டாவது, மக்கள்தொகை அதிகமுள்ள சீனாவைப் பாதித்திருப்பது.

கரோனா பெருந்தொற்று

  • தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பெருந்தொற்றால் ஏற்கெனவே நலிவடைந்துள்ள உலகப் பொருளாதாரம் மேலும் பாதிப்படையக்கூடும். உலக சுகாதார நிறுவனம் இதை ‘உலக சுகாதார நெருக்கடிநிலை’ என அறிவித்துள்ளது.
  • இத்தகைய பெருந்தொற்றுகளை ஒரு நாடு எப்படி எதிர்கொள்ள வேண்டும்? தற்போதைய சூழ்நிலையை ஆராய்தல், வளங்களைச் சேர்த்தல், செயல் திட்டம் தயாரித்தல், நாட்டுக்கேற்ப மருத்துவ வழிமுறைகள் அறிவித்தல், பலவீனங்களைக் கண்டுகொள்ளுதல், நோய்த் தடுப்புப் பங்குதாரர்களுக்குத் தக்க பயிற்சியளித்தல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் திட்டம், நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஆகியவை ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளில் முக்கியமானவை.
  • மருத்துவரீதியில் துரிதமாக நோயைக் கண்டுபிடிக்கக்கூடிய பரிசோதனைகளைப் போதிய அளவு தயார் நிலையில் வைத்திருத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக மருத்துவம் செய்தல், தடுப்பூசி கண்டுபிடித்தல் ஆகியவை இதுபோன்ற நோய் மேலாண்மையில் செய்ய வேண்டியவை.

சீனாவின் உறுதிமிக்க போராட்டம்

  • சீனாவிலுள்ள ஹூபே மாகாணத்தின் வூகான் நகரில் டிசம்பர் 2019-ல் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
  • இன்றளவில் 500-க்கும் மேற்பட்ட இறப்புகள்; 28,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை சீனா விவேகத்துடனும் உறுதியுடனும் எதிர்கொண்டுவருகிறது. உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய தனிமைப்படுத்தும் முயற்சியாக 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட வூகான் நகரத்தை சீனா ‘சீல்’ வைத்துள்ளது. அந்த மாகாணம் மட்டுமல்லாமல் மற்ற மாகாணங்களுக்கும் இப்போது நோய் பரவியுள்ளது.

மரபணு மூலக்கூறுகள்

  • சீன மருத்துவ அறிவியலாளர்கள் இந்தப் புதிய வகை கரோனா வைரஸின் பல லட்ச மரபணு மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து, மிகக் குறுகிய காலத்தில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தியுள்ளனர். இதனால், அதற்கு மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டும் நோயாளிகளிடம் சோதனை செய்துவருகின்றனர். இந்த நோய் உருவானதாகக் கருதப்படும் கடல் உணவுச் சந்தையையும் கண்டுபிடித்துள்ளனர். சீனாவைத் தவிர, உலகில் சுமார் 20 நாடுகளுக்கு கரோனா பரவிவிட்டது. பொதுவாக, பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களைவிட இதுபோன்ற வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் குறைவாகவே உள்ளன.
  • அதற்குக் காரணம், இந்த நோய்க்கிருமிகள் மாற்றமடைவதால் நிலையான மருந்துகள் குறைவு. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது ஆகாத காரியம்.
  • ஆகவே, இதுபோன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க அரசுகளுக்குப் பொறுப்புள்ளது.

‘ஏர் இந்தியா’ ஓர் முன்னுதாரணம்

  • இந்தியாவில் கேரள மாநிலத்தில் இதுவரை இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கடந்த ஆண்டு வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் நோயை மிக ஸ்திரத்துடன் கையாண்டு, அந்த நோயைக் கட்டுப்படுத்தியது. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு பெண் செவிலியர் உயிரிழந்தார். மருத்துவர்களும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களும்தான் எப்போதுமே அதிக நோய்த்தொற்று ஆபத்தில் உள்ளனர். ஆகவே, உரிய தற்காப்பு உபகரணங்களைக் கொடுத்து அவர்களை அரசு காக்க வேண்டும். அதற்கு ‘என்95’ மாஸ்க், கவுன், கையுறை, கண்ணாடி, தலையுறை, காலணிகள் அதிக அளவில் தேவை. இதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
  • என்னதான் தற்காப்புக் கருவிகள் இருந்தாலும், அது நூறு சதவீதம் பாதுகாப்பானது அல்ல. ஆகவே, மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் நோயாளிகளைப் பார்க்கின்றனர். ‘ஏர் இந்தியா’ விமானங்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட காய்ச்சல் இல்லாத இந்தியர்கள் சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, ஹரியானாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
  • இதற்கு மட்டும் அரசு நிறுவனமான ‘ஏர் இந்தியா’ தேவைப்படுகிறது? எந்தத் தனியார் விமான நிறுவனமும் இதற்கு முன்வரவில்லை.
  • குடிமக்களைப் பாதுகாப்பது ஒரு நாட்டின் கடமை என்றாலும், இத்தாலி போன்ற பல நாடுகள் தன் குடிமக்களைக்கூட சீனாவிலிருந்து திரும்பப் பெறவில்லை. அப்படியே அவர்கள் பாதிக்கப்பட்டாலும் சீனாவிலேயே அவர்களுக்கு மருத்துவம் பார்க்கலாம்.
  • ஏனென்றால், இந்த கரோனா வைரஸ் எந்த அறிகுறியும் இல்லாமலும் ஒருவருக்குள் இருக்கலாம். இந்தியா சீனாவுக்கு நேபாளத்தின் வழியாகத் திறந்த எல்லையுடன் இருப்பதால், எல்லைக் கட்டுப்பாடின்றி நோய் உள்ளே வர வாய்ப்புள்ளது. மேலும், பல இந்தியர்கள் சீனாவில் இருப்பதால் இன்னும் பலர் இந்தியாவுக்குத் திரும்பிவர வாய்ப்புள்ளது.

மாற்று மருத்துவத்துக்கு என்ன அடிப்படை?

  • பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதில் இந்தியாவுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. அவை பெரிய பரப்பளவு, மக்கள்தொகை நெருக்கம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பாதுகாப்புக் கருவிகளின் தேவை மற்றும் அரசின் உறுதிப்பாடு என்று இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், ஹோமியோபதி மற்றும் யுனானியில் கரோனா நோய்க்கிருமிக்கு எதிராகத் தடுப்பு மருந்து உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
  • உலகமே கரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப் பாடுபட்டுவரும்போது, எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி மாற்று மருத்துவத்தை முன்னிறுத்துவது சரியல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ‘இது புரளிகளுக்கான நேரமில்லை, அறிவியலுக்கான நேரம்’ என்று சரியான நேரத்தில் இவர்களுக்காகத்தான் சொல்லியிருக்கிறார்போல.
  • தமிழகத்தைப் பொறுத்தவரையில் மருத்துவத் துறையில் நல்ல கட்டமைப்பு உள்ளது. பெரும்பாலும் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளதால், ஆங்காங்கே தனிமை வார்டுகள் அமைக்கவும் தீவிர சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக இருக்கும். கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு நமக்கு வரப்பிரசாதமாக ‘கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ என்று சென்னை கிண்டியில் ஓர் அரசு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
  • ஆனால், பெரும் தொற்றுநோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதற்கேற்ப பரிசோதனைத் திறனையும் அதிகரிக்க வேண்டும். போதுமான பாதுகாப்புக் கவசங்களை அரசு முன்கூட்டியே திட்டமிட்டு வாங்க வேண்டும். மருத்துவ அதிகாரிகளும் நிலைமையின் முக்கியத்துவம் கருதிப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
  • ஓர் அரசு மருத்துவமனையில் அதன் தலைமை மருத்துவர் குத்துவிளக்கு ஏற்றி கரோனா வைரஸ் வார்டைத் திறந்துவைக்கிறார்; மற்றொரு தலைமை மருத்துவர் தனி வார்டுக்குள் முறையான பாதுகாப்பு இல்லாமல் சுமார் முப்பது பேருடன் சென்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார். இப்படி தனிப்பட்ட விளம்பரம் தேடாமல், பாதுகாப்பாக எப்படி நோய்த்தொற்றை எதிர்கொள்வது என்பதை முயல வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்