- ‘கர்ணன் இதயம் உள்ள வாசகர்களுக்காக எழுதுகிறார். இவர் நம்மில் தொட்டு நெருடுவது, பல மரத்துப்போய்விட்ட உணர்ச்சி நரம்புகளை. சில கலைஞர்கள் இயற்கை வனப்பிலும், மற்றும் சிலர் மனித ஆளுமையின் விஸ்தாரங்களிலும், இன்னும் சிலர் மனிதனது சமுதாயத் தகுதியை ஒட்டிய போராட்டங்களிலும், இன்னும் ஒவ்வொரு கலைஞனும் வாழ்வின் ஏதோ ஒரு கூற்றில் தன் திறமைக்கும் அவாவுக்கும் ஏற்ற சவாலைக் காண்பதுபோல், கர்ணன் அவற்றின் வலியையும் முழுமையாகக் காட்டுகிறார்’ என்கிறார் ஜி.நாகராஜன்.
- ஜூலை 20 அன்று மறைந்துபோன கர்ணனின் வாழ்க்கையைப் போலவே அவருடைய கதைகளும் காருண்யம் மிக்கவை.
காருண்யத்தைக் கதைகளாக்கியவர்
- கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், வரலாறு எனப் பரந்துபட்ட பட்டறிவால் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள கர்ணனின் முதல் சிறுகதை ‘நீறு பூத்த நெருப்பு’ 1968-ல் ‘காவேரி’ மாத இதழில் வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவுப்பறவை’ சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து பிரசுர’ வெளியீடாக வந்தது.
- பள்ளிப் படிப்பானது ஆரம்பக் கல்வியோடு நின்றுவிட்டது. தன்னை எழுத உந்தி அழைத்துவந்தது கல்கியின் படைப்புகள்தான் என கர்ணன் குறிப்பிட்டாலும், கொடுந்துயரமான வாழ்வனுபவங்களே அவரைப் படைப்பிலக்கியத்தின் பக்கம் இழுத்துவந்திருக்க வேண்டும்.
- காந்தியை நேரில் சந்தித்த மூத்த தலைமுறையின் வேராகவும், ‘மணிக்கொடி’யின் விழுதாகவும் திகழ்ந்த கர்ணனின் படைப்புகள் ‘கல்கி’, ‘அமுதசுரபி’, ‘கலைமகள்’, ‘தீபம்’, ‘கண்ணதாசன்’, ‘தாமரை’, ‘தினமணிக்கதிர்’, ‘விகடன்’ உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன.
- ஜெயகாந்தனுக்கு இணையாகப் பல்வேறு முத்திரைக் கதைகளை ‘ஆனந்த விகட’னில் எழுதிவந்தவர் கர்ணன். 1968-ல் விகடனில் வெளிவந்த ‘இன்ப சோகம்’ கதைக்குக் கிடைத்த ரூ.75 சன்மானத்தைக் கொண்டே, பெற்றோர் மற்றும் எழுத்தாளர் ஜியாவுடன் பெண் பார்க்கச் சென்றிருக்கிறார். திருமணத்துக்குப் பெண் பார்க்கச் சென்ற வைபவத்தை முன்வைத்துக் கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க கதை ‘தூரப் பயணம்’.
- 1968-ல் ரஞ்சிதம் எனும் காந்தி கிராமத்துப் பெண்ணை கர்ணனுக்குத் திருமணம் செய்துவைத்தவர், நேரு மந்திரி சபையில் அமைச்சராக இருந்த டி.எஸ்.செளந்திரம் இராமச்சந்திரன்.
- ‘நம் கையைப் பிடித்து நிறுத்தி, சின்ன விஷயம்தான் எவ்வளவு துன்பங்களுக்கு வித்தாகிவிடுகிறது தெரிகிறதா என்று கேட்கும் பாணியில் கதை எழுதும் வித்தை கர்ணனுக்குக் கைகூடி வந்திருக்கிறது. இம்மாதிரி சிறுவித்துகளை வைத்து ஒரு பெரிய செடியை வளர்த்துக் காட்டும் எழுத்துத் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது’ என கர்ணனின் கதைகள் குறித்துச் சிலாகித்திருக்கிறார் பி.எஸ்.ராமையா.
- படைப்பாளி - வாசகன் என்கிற நிலையில் தொடங்கிய எங்கள் நட்புணர்வானது கடிதங்கள், அலைப்பேச்சு மூலமாகப் பத்து வருடக் காலங்கள் நீடித்துவந்திருக்கிறது.
- அலைபேசியில் அழைக்கிறபோதெல்லாம், ‘எப்படியிருக்கீங்க?’ எனும் கர்ணனின் குரலுக்குக் காருண்யத்தின் தொனி. வீட்டிலுள்ள அனைவரையும் விசாரித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்தைத் தொடர்வார். ரொம்பவும் வெளிப்படையாகவும் அனுசரணையாகவும்தான் அவரது பேச்சு இருக்கும்.
- ஊரடங்குக் காலத்தின் ஏப்ரல் இறுதியில் நிகழ்ந்த உரையாடலின்போது, வல்லிக்கண்ணனின் நூற்றாண்டையொட்டி அவர் எழுதிய 200-க்கும் மேற்பட்ட கடிதங்களைத் தனித் தொகுப்பாகக் கொண்டுவரவிருப்பதாகத் தெரிவித்தார்.
- மாற்றுத் திறனாளியாக, தையல் கலைஞராகப் பொருளியல்ரீதியாக கர்ணன் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம். வறுமையின் துரு அவரது வாழ்வின் ஆணிவேரை அசைத்திருந்தபோதும் தனது வாழ்வை முழுமையாக எழுத்தில் கரைத்துக்கொண்டவர். அவரது வாழ்வின் நிறைவுக் காலங்களில் வெளிவந்துள்ள ‘மெளனத்தின் நிழல்’ (2017), ‘நகரும் பொழுதுகள்’ (2018), ‘வெளிச்சத்தின் பிம்பங்கள்’ (2018), ‘நேற்றாகிப் போன நிஜம்’ (2019), ‘கடவுளின் நரகம் (2019)’ உள்ளிட்ட படைப்புகள் காலங்கள் கடந்தும் விஞ்சிநிற்கும்.
நன்றி: தி இந்து (16-08-2020)