TNPSC Thervupettagam

கர்நாடகம் அரங்கேற்றும் நாடகம்

July 18 , 2024 178 days 173 0
  • காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினமும் 1 டிஎம்சி தண்ணீரையாவது தமிழகத்துக்குத் திறந்துவிட உத்தரவிட்டுள்ள நிலையில், அது சாத்தியமற்றது என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது கர்நாடக அரசு.
  • தமிழகத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காவிரியின் தண்ணீர் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று கர்நாடக அரசு நடந்துகொள்வதன் சமீபத்திய சாட்சியம் இது.

உத்தரவுகளை மதிக்காத கர்நாடகம்:

  • தமிழ்நாட்டுக்கு இதுவரை நியாயமான முறையில், காவிரித் தண்ணீர் கிடைத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டியதாக இருக்கிறது. பல வருடங்கள் சட்டப் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக, காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு மதிக்கவே இல்லை.
  • தமிழ்நாட்டுக்குக் கடந்த ஆண்டு தரப்பட வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரில் பாதி தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த ஆண்டும் அதே நிலைதான். மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்துக் குறைந்துபோனது. இதனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.65 அடியாக இருந்துவருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆகவே, நீரின் இருப்பு 11.91 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து குறைந்தும், வெளியேற்றம் அதிகமாகவும் இருக்கும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு பெருமளவு சரிந்துபோய்க் கிடக்கிறது.
  • கர்நாடகத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் இயல்பாக வருகிற தண்ணீர் எவர் தடுத்திடினும் தடையைத் தாண்டி வந்துகொண்டிருக்கிறது. இருந்தபோதிலும், கிருஷ்ணராஜசாகர், கபினி உள்பட காவிரியின் குறுக்கே உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

நியாயமற்ற வாதம்:

  • அடுத்து தொடர்ச்சியாக மழைக்காலம் என்பதாலும், மழை தொடர்ந்து பெய்துவருவதாலும் இந்த அணைகளெல்லாம் முழுமையான கொள்ளளவை எட்டிவிட்டால், தமிழகத்துக்குக் கூடுதல் தண்ணீர் வந்துசேரும். உபரித் தண்ணீர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவுக்குக் காத்திருக்கப் போவதில்லை.
  • கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 8,787 கனஅடியாகவும், நீர் இருப்பு 20.19 டிஎம்சியாகவும் உள்ளது. கபினி அணையின் நீர்வரத்து 11,269 கனஅடி நீராகவும், நீரின் இருப்பு 16.25 டிஎம்சியாகவும் உள்ளது. இரண்டு அணைகளில் இருந்தும் சுமார் 2,000 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில்தான், காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் திறக்க முடியாது என்று சொல்லிவருகிறது கர்நாடக அரசு. அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், ‘எங்களுக்கே தண்ணீர் இல்லை. எனவே, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ என்று சொல்லி, கர்நாடக அரசு மனிதாபிமானமற்ற போக்கைக் கையில் எடுத்திருக்கிறது. இதனால், எந்த முடிவும் எடுக்காமல் காவிரி ஆணையக் கூட்டம் நிறைவுபெற்றது.

ஆணையத்தின் கடமை:

  • கர்நாடக அரசு இப்படித் தட்டிக்கழிப்பதை ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், தண்ணீர் இருப்பு, வருகை, வெளியேற்றம் குறித்த புள்ளிவிவரங்கள் ஆணையத்திடம் முழுமையாக உள்ளன.
  • ஆகவே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பதை கர்நாடகம் அரசியலாக்கலாமே தவிர, ஆணையத்திடமிருந்து தப்பிவிட முடியாது என்கிற நம்பிக்கை விவசாயிகளுக்கு இருக்கிறது. ஆகவேதான், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு கடைமடைப் பகுதியில் காத்திருக்கிறார்கள்.
  • கடல் போல் இருக்கும் கபினி நீரையும், கே.ஆர்.எஸ். அணையில் இருக்கும் தண்ணீரையும் சிறைப்பிடித்து வைத்திருக்கும் காவிரியைத் திறந்துவிட மறுக்கிற கர்நாடக அரசாங்கத்தின் இரட்டை வேடத்தைத் தடுக்க திமுக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீரும் நிதர்சனமும்:

  • கர்நாடக அணைகளில் சராசரியைக் காட்டிலும் சுமார் 28 சதவீதம் நீர் குறைவாக உள்ளது என்றும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரியப்படுத்தி இருக்கிறது கர்நாடகம். ஆனாலும், கபினியில் நீர்மட்டம் 65 அடியாகவும், கிருஷ்ணராஜசாகரில் 124 அடியாகவும் உள்ளது.
  • இரண்டு அணைகளிலும் 96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில்தான் தண்ணீரைத் திறக்க மறுக்கிறது கர்நாடக அரசு. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளைப் பின்பற்றப்போவதில்லை என்றே கர்நாடக அரசு உணர்த்திவருகிறது.
  • கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பதால், மேட்டூர் அணையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. ஜூன், ஜூலை மாதத்துக்கான நிலுவைத் தண்ணீரையும் இன்னும் தந்தபாடில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டிய சூழலில், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

  • காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால், இம்மாத இறுதிவரை கணக்கிட்டுப் பார்த்தால் 15 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் கிடைக்கும்.
  • அப்படியானால், இம்மாத இறுதிவரை மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான் நமக்கு வரும். உபரி நீரை மட்டும் வெளியேற்றுவதும், உபரி வடிகாலாக மட்டுமே தமிழகத்தைக் கருதுவதும், கர்நாடக அரசின் அத்துமீறிய செயலாகும்.
  • காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகம் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரச்சினை நீடித்துவருகிறது. இது தொடர்பாக தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகாவது தண்ணீர்ப் பிரச்சினை தீரும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறவில்லை.
  • காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தைப் பலவீனமாக்கும் முயற்சியைக் கர்நாடக அரசு தொடர்ந்து திட்டமிட்டு செய்துவருகிறது. காவிரி ஆணையம் எந்த உத்தரவு வழங்கினாலும் கர்நாடக அரசு அதைப் பொருட்படுத்துவதில்லை.
  • காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்க மறுப்பதால் 15 லட்சம் ஏக்கர், ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில், இனியாவது குறித்த காலத்தில் தண்ணீர் வரத்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றால், குறுவை சாகுபடியின் கடைசிக் கட்டத்தைச் சமாளித்துவிடலாம்.
  • கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்துக்கு விரோதமாகக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை ஏற்க மறுத்துத் தண்ணீர் திறக்க முடியாது என்று தெரிவித்துள்ளது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
  • இதில் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையையும் ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுப்பதோடு, இதில் உடனடியாகத் தலையிட்டு தமிழ்நாட்டுக்கான தண்ணீரை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் தர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்