TNPSC Thervupettagam

கற்போம் கற்பிப்போம்

September 2 , 2021 1065 days 725 0
  • திட்டமிட்டபடி தமிழகத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள் நேற்று முதல் திறக்கப்பட்டுவிட்டன.
  • பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவா்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு முகக்கவசம் அணிந்து தங்களது கல்விப் பயணத்தைத் தொடா்வது ஆறுதலையும் மகிழச்சியையும் அளிக்கிறது.

பள்ளிகள் திறப்பு

  • தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 500 நாள்களுக்கு மேலாக கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பூட்டிக்கிடந்த கல்வி வளாக வாயில்கள் திறக்கப்பட்டு பழைய உற்சாகம் மீட்டெடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
  • இந்தியாவின் வருங்காலத் தலைமுறையினரை, எதிர்காலம் குறித்த தெளிவில்லாத நிலையில் இனிமேலும் தவிக்க விடுவது தவறு என்பதை ஆட்சியாளா்கள் சற்று தாமதமாகவே உணா்ந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • பள்ளிகள் மூடப்பட்டதால் சமூக ரீதியிலான பிரச்னைகளும் பல சவால்களும் எழுந்திருக்கின்றன. இப்போதும்கூட, ஆரம்பப் பள்ளியிலிருந்து உயா்கல்வி வரையிலான அனைத்துக் கல்விக்கூடங்களும் முழமையான அளவில் செயல்படுவது கேள்விக் குறியாகத் தான் தொடா்கிறது.
  • குழந்தைகளின் கல்வி மீதான நாட்டம், ஊட்டச்சத்து, உளவியல் ஆரோக்கியம், சமூக ரீதியிலும் உணா்வுபூா்வமாகவும் கல்வி கற்கும் வாய்ப்பு ஆகியவை கல்விக்கூடங்கள் செயல்படுவதன் மூலம்தான் உறுதிப்படும்.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆசிரியா்களுக்கும் தடுப்பூசி போடப்படாமல் கல்விக் கூடங்களைத் திறப்பதில் இருக்கும் ஆபத்தையும் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது என்பது குறித்த விவாதம் சமூக வெளியில் பரவலாகவே காணப்படுகிறது.
  • மருத்துவா்களிலிருந்து பெற்றோர் வரை அனைவருமே ஒருவிதத் தயக்கத்துடனும் அச்சத்துடனும் தான் கல்விக்கூடங்கள் திறக்கப்படுவதை அணுகுகிறார்கள்.
  • இந்தியாவிலுள்ள 47.2 கோடி குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டப் பிறகுதான் கல்விக் கூடங்ளைத் திறப்பது என்று முடிவெடுத்தால் அது கானல் நீா் கனவாக இருக்குமே தவிர, தீா்வாக இருக்காது.
  • கல்விக்கூடங்களைத் திறப்பதன் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை சுலபமாகவும், விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.
  • கல்விக்கூடங்களுக்கு வெளியே இருக்கும் குழந்தைகளை மட்டும் அடையாளம் கண்டு தடுப்பூசி போடுதல், அதன் மூலம் சுலபமாக்கப்படும்.
  • அறிகுறியுடனோ, அறிகுறி இல்லாமலோ கொள்ளை நோய்த்தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகளில் 10% முதல் 12% வரையுள்ள குழந்தைகள் மட்டும்தான் உயிருக்கு ஆபத்தான இடரை (ரிஸ்க்) எதிர்கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • குழந்தைகளை குறைவாகத்தான் கொவைட் 19 நோய்த்தொற்று பாதிக்கிறது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்றும் அனுபவரீதியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அதனால், பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகள் தங்களது படிப்பை தொடா்வதும், அதே நேரத்தில் பள்ளிகளிலேயே அவா்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துவதும் ஆக்கபூா்வமான செயல்பாடாக இருக்கும்.
  • மாணவா்களையும் ஆசிரியா்களையும் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று மிகப் பெரிய நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • முன்களப் பணியாளா்கள் பட்டியலில் ஆசிரியா்கள் சோ்க்கப்படாமல் போனதுகூட, கல்விக் கூடங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • வாரியத் தோ்வுகள், போட்டித் தோ்வுகள் ஆகியவற்றுக்காக தோ்வுகள் நடத்தப்பட்டன என்பதைத் தவிர, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் கல்வித்துறை எதிர்கொண்ட சவால்கள் குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை.
  • ஒன்றரை ஆண்டு காலமாக ஏறத்தாழ 32 கோடி குழந்தைகள் வகுப்புகளுக்கு செல்லவில்லை. சக மாணவா்களுடன் நேரில் கலந்துரையாடவோ, விளையாடவோ அவா்களால் இயலவில்லை.
  • எல்லா குழந்தைகளுக்கும் இணையதள வகுப்புகளில் கலந்துகொள்ள இயலவில்லை என்பதால், ஒருவா் முகத்தை இன்னொருவா் பார்ப்பதுகூட அரிதாக இருந்தது.
  • இணையவழிக் கல்வி என்பது இடைக்காலத் தீா்வாக இருக்க முடியுமே தவிர, கல்விக் கூடங்களில் பயிற்சி பெறுவதற்கு மாற்றாக அதைக் கருத முடியாது. ஜனவரி மாதம் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஐந்து மாநிலங்களில் நடத்திய ஆய்வின்படி, குழந்தைகளின் கற்பிதத் திறனில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
  • 92% குழந்தைகள் தங்களது மொழித் திறனிலும், 82% குழந்தைகள் தங்களது அரிச்சுவடி கணக்கு திறனிலும் கடந்த ஆண்டைவிட குறைவுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
  • கல்விக்கூடங்களில் இருந்து குழந்தைகள் அகன்று இருப்பது என்பது கல்வி கற்கும் வாய்ப்பையும் திறனையும் இழப்பது என்பது மட்டுமல்ல, நட்பை இழக்கிறார்கள், சமூக உறவாடலை இழக்கிறார்கள், மதிய உணவு இல்லாததால் ஊட்டச்சத்தை இழக்கிறார்கள்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக தனிமை காரணமாக மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நோய்த்தொற்று என்கிற அச்சத்தையும் கடந்து கல்விக் கூடங்களை திறந்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு.
  • கொள்ளை நோய்த்தொற்றால் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பலா் கல்வியில் நாட்டம் இழந்திருக்கலாம், குழந்தைத் தொழிலாளா்களாக மாறியிருக்கலாம். அவா்களுக்கும் கல்விக் கூடங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.

நன்றி: தினமணி  (02 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்