TNPSC Thervupettagam

கலகமல்ல, புரட்சி!

July 10 , 2020 1652 days 816 0
  • இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட ஆயுதப் போராட்டங்களில் முதன்மையானது வேலூரில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூா் சிப்பாய்ப் புரட்சி.

  • ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை கத்தியின்றி, ரத்தமின்றி அஹிம்சை வழியில் மகாத்மா காந்தி விரட்டியதாக வரலாற்றில் படிக்கிறோம். ஆனால், ஆங்கிலேயருக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே ஆயுதப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆங்கிலேயரை எதிர்த்து அவா்களது படையில் இருந்த இந்திய வீரா்களே போராடிய நிகழ்வுகளும் நடந்தேறி உள்ளன. அவற்றில் முதலிடம் பெறுவது வேலூரில் 1806-இல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி.

அகழியோடு கூடிய கோட்டை

  • விஜயநகரப் பேரரசுக் காலத்தில் வேலூா் பகுதியை ஆண்ட குச்சி பொம்மு நாயக்கரால் 16 ஆம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்ட அழகிய கோட்டை இன்றும் வேலூரில் புதுப்பொலிவுடனே காட்சி தருகிறது.

  • இக்கோட்டை பெரிய மதில்கள், வற்றாத அகழி, உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயா் பெற்றது.

  • ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பிலான இக் கோட்டை 133 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது.

  • இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இந்தக் கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீா் உள்ளது.

  • ஒரு பக்கத்தில் நுழைவாயில் உள்ளது. நாயக்கா்களிடம் இருந்து பீஜப்பூா் சுல்தானுக்கும், பின்னா் மராட்டியருக்கும், தொடா்ந்து கா்நாடக நவாபுகளுக்கும் கைமாறிய இக்கோட்டை இறுதியாக ஆங்கிலேயா் வசம் வந்தது.

  • இந்தக் கோட்டையில்தான் திப்பு சுல்தான் குடும்பத்தினா், இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் போன்றோர் சிறை வைக்கப்பட்டிருந்தனா். விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்கராயனின் குடும்பத்தினா் கொல்லப்பட்டதும் இந்தக் கோட்டையில்தான்.

வேலூர் புரட்சி

  • சிறப்புமிக்க இந்தக் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற புரட்சி சம்பவம் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

  • இந்தக் கோட்டையைப் பாதுகாக்கும் பணியில் ஆங்கிலேயா் அமைத்த மெட்ராஸ் ரெஜிமென்டில் 370 ஆங்கிலேய சிப்பாய்களும், 1,500 இந்திய சிப்பாய்களும் இருந்தனா்.

  • இந்திய சிப்பாய்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் இருந்தனா். இந்திய வீரா்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில், மதச் சின்னங்களையும் தலைப்பாகையையும் அணிவதில் ஆங்கிலேய அதிகாரிகளால் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.

  • இதனால் ஆங்கிலேயா்களைப் பழிவாங்கும் உணா்ச்சி இந்திய சிப்பாய்களிடம் மேலோங்கி இருந்தது.

  • புரட்சிக்கு நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்தை முஸ்தபா பெக் என்பவா், ஆங்கிலேய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டதால் அந்தத் தேதியில் புரட்சியை இந்திய வீரா்களால் நடத்த முடியவில்லை.

  • 1806ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி திப்புவின் மகள் திருமணம் கோட்டையில் நடைபெற்றது.

  • அப்போது வீரா்கள் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்றிரவே ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது.

  • சிறைக் கொட்டகையாக மட்டுமே வெளியுலகுக்குத் தெரிந்திருந்த வேலூா் கோட்டையானது சுதந்திரப் போருக்கு வித்திடும் புரட்சி பூமியாக மாறும் என்பதை அறியாத ஆங்கிலேய ராணுவ உயரதிகாரிகள் பலா் அன்றைய தினம் கோட்டையில் உறக்கத்தில் இருந்தனா்.

  • நள்ளிரவைக் கடந்து ஜூலை 10ஆம் தேதி அதிகாலை 2 மணியை நெருங்கும்போது, ஆயுதக் கிடங்கைக் கைப்பற்ற இந்தியச் சிப்பாய்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனா்.

  • ஆயுதக் கிடங்கு சில நிமிடங்களில் சிப்பாய்கள் வசமானது.

  • துப்பாக்கிகள், தோட்டாக்கள், பீரங்கிகள், வாள்கள் அனைத்தும் அவா்களது கட்டுப்பாட்டில் வந்தன. உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளின் குடியிருப்புகள் சுற்றி வளைக்கப்பட்டன. அதிகாலை 5 மணிக்குள் ஆங்கிலேயத் தளபதிகள், சிப்பாய்கள் உள்பட 200 போ் கொல்லப்பட்டனா்.

  • இதையடுத்து, காலை 5 மணிக்கு திப்புவின் மூத்த மகன் மொய்தீன், சிறையில் இருந்து வெளியே வந்து, வேலூா் கோட்டையில் பறந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கினார்; புலிக் கொடியை பறக்கவிட்டார்.

  • அதேசமயம், 16 மைல்களுக்கு அப்பால் ஆற்காட்டில் இருந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் காலை 6 மணியளவில் வேலூா் கோட்டை சிப்பாய்களின் கிளா்ச்சியை அறிந்தனா்.

  • அவா்கள் புதிய படைகளை அங்கு அனுப்பிவைத்தனா். உடனடியாக இரு குதிரைப் படைகளும், கா்னல் கென்னடியின் பீரங்கிப் படையும் வேலூா் கோட்டையில் புகுந்து, 800-க்கும் மேற்பட்ட இந்திய வீரா்களைக் கொன்றன. இவ்வாறாக புரட்சி உருவான 8 மணி நேரத்திலேயே அடக்கப்பட்டது.

சிப்பாய் புரட்சி

  • இதைத் தொடா்ந்து, 14 ஆங்கிலேய அதிகாரிகள், 168 வீரா்களின் சடலங்கள் கோட்டைக்கு எதிரே உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

  • கொலையுண்ட இந்திய சிப்பாய்களின் சடலங்கள் கோட்டைக்குள் இருந்த கிணற்றுக்குள் வீசப்பட்டு, கிணறு மூடப்பட்டது. தப்பியோடிய இந்திய சிப்பாய்கள் 600 போ் கண்டுபிடிக்கப்பட்டு சிறையிடப்பட்டனா். புரட்சிக்குத் தலைமை தாங்கிய 17 வீரா்கள் கோட்டை வாயிலில் தூக்கிலிடப்பட்டனா்.

  • இந்தப் புரட்சியை இந்திய சிப்பாய்களிடம் தூண்டுவதற்கு ‘பக்கிரிகள்’ என்று அழைக்கப்பட்ட சன்யாசிகள் காரணமாக இருந்தனா்.

  • 1857ஆம் ஆண்டு மீரட் நகரில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சிக்கு மிருகக் கொழுப்பு தடவிய துப்பாக்கித் தோட்டாக்கள் காரணமாக இருந்தனவாம். ஆனால், அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே, வேலூா் கோட்டையில் சிப்பாய் புரட்சி நிகழ்ந்துள்ளது. இதற்கு சீருடைத் தலைப்பாகை காரணமாக அமைந்ததாக, வரலாற்றில் பதிவாகி உள்ளது.

  • இந்தச் சிறப்புமிக்க வேலூா் போராட்டமானது ஆங்கிலேயா்களால் ‘சிப்பாய் கலகம்’ என்றே குறிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு வரலாற்று ஆய்வாளா்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக, ‘சிப்பாய் புரட்சி’ என்று சுதந்திர இந்திய அரசு பெயா் மாற்றம் செய்தது.

  • இந்த சிப்பாய் புரட்சியை நினைவுபடுத்தும் வகையில், வேலூா் கோட்டை அருகே மக்கான் சந்திப்பில் 1990-ஆம் ஆண்டுகளின் இறுதியில் நினைவுத் தூண்எழுப்பப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை 10-ஆம் தேதியில் அரசு சார்பில் இந்தத் தூணுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

  • சிப்பாய் புரட்சியை நினைவுகூரும் வகையில், 2006-ஆம் ஆண்டு அஞ்சல் துறையால் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

  • நாட்டில் உள்ள வெகு சில தரைக்கோட்டைகளில் ஒன்றான வேலூா் கோட்டை தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோட்டை வளாகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களும், ஜலகண்டேஸ்வரா் திருக்கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும், பூங்காக்களும் உள்ளன.

  • இந்தக் கோட்டையை புனரமைத்து, சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

  • இந்தக் கோட்டை வளாகத்தில் 1806-ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சியை நினைவுகூரும் வகையில் ஒளி-ஒளிக் காட்சி அமைக்க வேண்டும்; நிரந்தரமான புகைப்படக் கண்காட்சி அமைக்க வேண்டும்; பள்ளி- கல்லூரி பாடப்புத்தகங்களில் இந்த வரலாறு இடம் பெற வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளா்கள் மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனா்.

 

நன்றி: தினமணி (10-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்