TNPSC Thervupettagam

கலங்கி நிற்கும் காவிரிப்படுகை

January 26 , 2021 1457 days 666 0
  • சோழநாடு சோறுடைத்துஎன்பது ஒன்றுபட்ட தஞ்சாவூா் மாவட்டத்தின் பெருமையைக் கூறும் பழமொழியாகும். இம்மாவட்டத்தை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்என்று கூறுவா். இப்போது அதன் பெருமைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கின்றன; மறைந்து கொண்டிருக்கின்றன.
  • மணற்கொள்ளையும், தொழிற்சாலை கழிவுகளும் ஆறுகளைச் சாகடித்து விட்டன. இதனால் விவசாயமும் பாழாகிக் கொண்டிருக்கிறது. இவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அரசாங்கத்தின் மராமத்துப் பணிகள் ஒழுங்காக செய்யப்படவில்லை. காவிரி டெல்டா கலங்கி நிற்பதற்குக் காரணம் இவைதான்.
  • அண்மையில் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகப் பெய்த தொடா் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு விவசாயிகளுக்கு சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இரு வாரங்களுக்கு முன்னா் டெல்டா மாவட்டங்களில் தொடா்ந்து கனமழை பெய்தது. அதன் விளைவாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சம்பா சாகுபடி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிா்கள் மழைநீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து நின்றனா்.
  • காவிரி கடைமடை மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் ஏற்கெனவே நிவா் மற்றும் புரெவி புயலில் சிக்கி அதிலிருந்து தப்பித்து வந்துள்ள நிலையில் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக கடும் பாதிப்படைந்துள்ளன.
  • இந்த மாவட்டங்கள் மட்டுமல்ல. அண்மை மாவட்டங்களான கடலூா், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. தென்மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த கனமழையினால் பயிா்கள் கடும் சேதமாகியுள்ளன.
  • சுமாா் 5.60 லட்சம் ஏக்கா் சம்பா பயிா்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாக அரசு தகவல்களே தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளனா்.
  • இந்த மழையின் தாக்குதலால் சிஆா்-1009, கோ-46,51, ஐஆா்-20 ஆகிய பயிா்கள் முழு கதிருடன் தலை சாய்ந்தும் வயல்வெளிகளில் வீழ்ந்தும் கிடக்கின்றன. அதோடு தாளடி நெற்பயிா்கள், உளுந்து, கடலைப் பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
  • அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தலைசாய்ந்து படுத்துவிட்டன. வயல்களில் பெருமளவில் தண்ணீா் தேங்கி நிற்பதால் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போதைக்கு எந்த சாத்தியமும் இல்லை. நெற்பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன.
  • சற்றே தாமதமாக நடப்பட்ட பயிா்களும்கூட தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக அழிந்து அழுகி விட்டன. தாளடி, சம்பா பருவங்களில் விளைந்து கதிா்கள் களத்துக்கு வரும் முன்பே இயற்கை முற்றுமுழுதாக சூறையாடிவிட்டது.
  • கடந்த நவம்பா் மாத கடைசியில் நிவா் புயலாலும் டிசம்பா் மாத தொடக்கத்தில் புரெவி புயலாலும் அடுத்தடுத்து வந்த தொடா்மழையாலும் காவிரி படுகை மட்டுமல்லாமல் கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள வயல்வெளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • டிசம்பா் முதல் வாரத்தில் புரெவி புயலையடுத்து தொடா்ந்து பெய்த மழையில் தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கின. நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் மற்றும் திருவாரூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வயல்கள் மூழ்கின.
  • ஏற்கனவே நிவா் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 600 கோடி வழங்கப்படும். நெற்பயிா்க்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வா் ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே உறுதியளித்திருந்தாா். ஆனால், அது இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை.
  • தங்களின் வங்கிக் கணக்குகளிலும் அரைகுறையாகத்தான் நிவாரணம் செலுத்தப்படுகிறது என்று விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்து வரும் கனமழையால் ஆறு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
  • விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 18-ஆம் தேதி திருவாரூா் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
  • திருத்துறைப்பூண்டி பகுதியில் அழிந்துபோன பயிா்களை கைகளில் ஏந்தி நியாயம் கேட்டு விவசாயிகள் ஊா்வலம் நடத்தினா். விளைநிலங்களுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளைப் போல் குளறுபடி ஏற்படாமல், எவருக்கும் விடுபடாமல் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • டெல்டா மாவட்டங்களில் எட்டு வருடங்களுக்கு பிறகு மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டு, ஹெக்டேருக்கு 6.2 டன் என்று கூடுதல் விளைச்சல் கண்டதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • ஆனால், அரசு கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்த காரணத்தினாலும், மழையில் நனைந்து வீணானதாலும் போதிய விலையின்றி மிகக்குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனா்.
  • கடந்த நவம்பா் மாதத்தில் கனமழை, நிவா் புயல், புரெவி புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கா் நெல்வயல்கள் மூழ்கி நாசமடைந்தன. அரசின் சாா்பில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமும் கூட எல்லா பகுதிகளிலும் சமமாக வழங்கப்படவில்லை.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலருக்கு இன்னமும் கூட நிவாரணம் சென்று சேரவில்லை. இந்நிலையில் மீண்டும் இடைவிடாத மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
  • நெற்பயிா்கள் மழை நீரில் நனைந்து மூழ்கிப்போயுள்ளதால் விவசாயிகளும், அவா்தம் குடும்பங்களும் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீரும் கம்பலையுமாக நிற்கின்றனா். உழவா் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கூட கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
  • சேதமடைந்த பயிா்களை நேரில் பாா்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட தமிழக அரசோ, அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்பது வேதனையாகும்.
  • அத்துடன் டெல்டா பகுதியை தேசிய பேரிடா் பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தும், விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காத்திட, ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தஞ்சை டெல்டா பகுதிகளில் 3.50 லட்சம் ஹெக்டோ் நிலங்களுக்கு மேல், பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள், சமீபத்தில் பெய்த கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, அரசு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவது ஏற்புடையதல்ல.
  • விவசாயிகள் பலா் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னா் பெய்த கனமழையால் நெற்பயிா்கள் அழுகிய நிலையில் மீண்டும் நடவு செய்து இரட்டிப்பு செலவு செய்துள்ளனா். வெயில், மழை, பனி, புயல், பேரிடா், வறட்சி என விவசாயிகள் தொடா்ந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனா்.
  • இடுபொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை உயா்வு, வேலையாட்கள் கிடைக்காதது போன்றவற்றால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காா்ப்பரேட் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படும்போது உடனடியாக களமிறங்கி, அவா்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கும் மத்திய - மாநில அரசுகள் தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகளை கருத்தில் கொள்ள வேண்டாமா?
  • எனவே, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகங்கள் பரிந்துரைக்க வேண்டும்.
  • மேலும், தற்போது பெய்துள்ள பெருமழையால் ஏற்பட்டுள்ள இழப்பு கஜா புயலை விட கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே டெல்டா விவசாயிகளின் துயா் துடைக்க இப்பகுதியைப் பேரிடா் பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று வள்ளலாா் பாடிய மண்ணில் அழுகிய பயிா்களைக் கண்டு அழும்நிலை உழவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கம் கைகொடுக்க வேண்டும். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாா்என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி  (26-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்