TNPSC Thervupettagam

கலப்பு - இணைத் தடுப்பூசிகள் கரோனாவுக்கு முடிவுகட்டுமா?

July 7 , 2021 1121 days 450 0
  • இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன. அதற்கான முன்னெடுப்பாகத் தற்போது மூன்றாம் அலை வேகமெடுத்திருக்கும் பிரிட்டனையும் ரஷ்யாவையும் அவை கூர்ந்து கவனிக்கின்றன.
  • இந்தியாவைப் போல் தடுப்பூசித் தட்டுப்பாட்டால் தடுமாறும் ரஷ்யா, மூன்றாம் அலையில் அதிக அளவில் உயிரிழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
  • அதேநேரத்தில், குழந்தைகள் உட்பட பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி செலுத்தியுள்ள பிரிட்டன், மூன்றாம் அலையில் பெருமளவில் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கிறது.
  • இந்த இரண்டு நாடுகள் உலகுக்குக் காட்டியுள்ள உண்மை ‘கரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி’ என்பதுதான்.
  • ‘2021 இறுதிக்குள் உலகில் 70% பேருக்குத் தடுப்பூசி செலுத்திவிட்டால், சமூக எதிர்ப்பாற்றல் கிடைத்துவிடும்; அப்போது கரோனாவும் விடை கொடுத்துவிடும்’ என்பது அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பு.
  • ஆனால், வளர்ந்த நாடுகள் பலவும் தடுப்பூசிகளைப் பதுக்கிக்கொண்டதும், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகளுக்கு ஒரு தவணை தடுப்பூசிகூட இன்னும் கிடைக்கவில்லை என்பதும், இந்தியா உட்பட அநேக நாடுகளில் தடுப்பூசிக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும், தடுப்பூசிச் செயல்திட்டத்தின் வெற்றிக்குத் தடை போடுகின்றன.
  • உதாரணமாக, இந்தியாவில் இதுவரை 4.6% பேர்தான் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசியில் தாமதம்

  • நாடளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுமானால், இப்போது வீரியத்துடன் பரவிவரும் டெல்டா - டெல்டா பிளஸ் வேற்றுருவங்கள் இன்னும் நிறையவே உருமாறிவிடும்.
  • அப்போது தற்போதுள்ள தடுப்பூசிகள் அவற்றுக்குச் செயல்படாமல் போகும். அடுத்தடுத்த அலைகள் வரும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகும். இப்படியான அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
  • இந்தச் சூழலில் தற்போதுள்ள தடுப்பூசிச் செயல்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியதும் வேகப்படுத்த வேண்டியதும் மக்கள்தொகை அதிகமுள்ள உலக நாடுகள் முன் நிற்கும் ஆகப் பெரிய சவால்கள்.
  • இந்தச் சவால்களை எதிர்கொள்ள, முதலில் தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளின் உற்பத்தியைப் பல மடங்கு அதிகரித்துத் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தது, சமூகத்தின் தேவையைச் சரியாகக் கணித்துத் தடுப்பூசி விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
  • இந்த இரண்டில் முதலாவதுதான் மிகவும் கடினமானது. காரணம், ஒவ்வொரு தடுப்பூசியும் வெவ்வேறு தொழில்நுட்பத்தில் உருவாகியிருப்பதால், உடனடியாக அவற்றின் உற்பத்தியை உலகத் தேவைக்குப் பெருக்க முடியவில்லை.
  • மேலும், முதல் தவணை செலுத்தப்பட்ட தடுப்பூசிதான் இரண்டாம் தவணையிலும் செலுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையும் தடுப்பூசித் தட்டுப்பாட்டுக்கு வழி வகுக்கிறது.
  • ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி நீங்கலாக மற்றவை எல்லாமே இரண்டு அல்லது மூன்று தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகள். இந்த நிறுவனங்களின் உற்பத்தி அளவு போதுமானதாக இல்லை.
  • சரியான தவணைக் கால இடைவெளியை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அவற்றின் விநியோகம் சமநிலையில் இல்லை. இந்தப் பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல… உலக அளவிலும் இருக்கிறது.

நவீன வழிமுறை

  • பெருகி வரும் தடுப்பூசித் தேவையைச் சீரமைக்கும் வகையில் நவீன வழிமுறைகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய நாடுகள், புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன.
  • அவை பின்பற்றிய அறிவியல் பின்னணி இதுதான்: ஒரு பயனாளிக்கு இரண்டு தவணைகளிலும் ஒரே வகைத் தடுப்பூசியைச் செலுத்துவதற்குப் பதிலாக, முதல் தவணை முதன்மைத் தடுப்புக்கும் இரண்டாம் அல்லது மூன்றாம் தவணை ஊக்கத் தடுப்புக்கும் வெவ்வேறு வகைத் தடுப்பூசிகளைச் செலுத்துவது (Heterologous prime – boost regimens).
  • இப்படிச் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்குக் ‘கலப்பு - இணைத் தடுப்பூசிகள்’ (Mix-and-match vaccines) என்று பெயர்.
  • பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ‘காம்-கோவ்’ (COM-COV study) ஆய்வில் முதல் தவணையாக ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைச் (இந்தியாவில் கோவிஷீல்டு) செலுத்திக்கொண்ட 800 தன்னார்வலர்களுக்கு இரண்டாம் தவணையில் பைசரின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • ஆஸ்ட்ராஜெனேகா அல்லது பைசர் தடுப்பூசியை இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்டவர்களோடு ஒப்பிடும்போது, இவர்களுடைய ரத்தத்தில் கரோனாவை மட்டுப்படுத்தும் தடுப்பணுக்கள் பல மடங்கு அதிகரித்ததோடு, நினைவாற்றல் ‘டி’ செல்களும் அதிகரித்திருந்தன.
  • இந்த இரண்டு அதிகரிப்புகளும் கரோனாவிலிருந்து பயனாளிகளுக்கு நீண்ட காலம் பாதுகாப்பு கொடுக்கும் என்பது ஏற்கெனவே அறியப்பட்ட உண்மை. இந்தக் களப்பதிவுகளை அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் நடந்த ஆராய்ச்சிகளும் உறுதி செய்துள்ளன.
  • இது ஒரு நவீன முறைமைதான் என்றாலும், புதிய முறைமையில்லை. ஏற்கெனவே எபோலா நோய்க்குத் தடுப்பூசி செலுத்தும்போது, இந்த முறைமைதான் பயன்படுத்தப் பட்டது.
  • தவிரவும், தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘பென்டாவேலன்ட்’ - ‘மோனோவேலன்ட்’ ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் கிருமிகளும் வெவ்வேறானவையே. இவற்றின் பயன்பாட்டிலும் இதுவரை தவறேதும் இல்லை. ஆகவே, கரோனாவுக்காக ‘கலப்பு - இணைத் தடுப்பூசிக’ளைப் பயன்படுத்தினாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
  • மேலும், ஜெர்மனியின் வேந்தராகப் பதவிவகிக்கும் ஏஞ்சலா மெர்கெல் (Angela Merkel) முதல் தவணையில் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியையும் இரண்டாம் தவணையில் மாடர்னா தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டு, வரலாறு படைத்த பெண் அரசியலரானார்.
  • இதைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட உலக நாடுகள், துணிச்சலுடன் ‘கலப்பு - இணைத் தடுப்பூசிக’ளை ஏற்றுக்கொண்டன. இனி, இந்தியாவும் இந்த முறைமையைப் பின்பற்றக் கூடும்.

முக்கியத்துவம் என்ன?

  • ‘கலப்பு - இணைத் தடுப்பூசிக’ளின் பயன்பாட்டைத் தடுப்பூசித் தட்டுப்பாட்டைத் தகர்க்க உதவும் புதிய ஆயுதம் எனலாம்.
  • காரணம், கரோனாவுக்கு எவரும் எந்தத் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம் எனும் எளிய வழியை இது கொடுத்திருக்கிறது. ஒரு தடுப்பூசி கிடைக்காதபோது அதற்காகக் காத்திருக்காமல், கிடைக்கும் எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • பயனாளிகள் தங்கள் வசதிக்கேற்றபடி குறைந்த விலை தடுப்பூசிகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். அயல்நாட்டுப் பயணிகள் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் தடுப்பூசி வகைகளைப் போட்டுக்கொள்ளலாம் என்பதால், ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ பெறுவதும் எளிதாகிவிடும்.
  • தடுப்பூசிக்குத் தவமிருக்கும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சமாக இது தோன்றுகிறது.
  • இதைப் பயன்படுத்தி, விரைவிலேயே பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். அப்போது கரோனா பெருந்தொற்றுக்கு முடிவுகட்டவும் முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்