- தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவருமான அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2023 செப்டம்பர் 15 அன்று, ‘கலைஞர்மகளிர் உரிமைத் திட்ட’த்தைத் தொடங்கியிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இத்திட்டத்துக்கு இப்போதைக்கு ரூ.12,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
- 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஸ்டாலின் அளித்திருந்த ஏழு முக்கியமான வாக்குறுதிகளில், வெகுமக்களை மிகவும் ஈர்த்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, அவருடைய பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- இத்திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளாக அங்கீகரிக்கப்பட்டு, இத்திட்டத்தின் பயனர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகை அல்லது அடிப்படை வருமானமான ரூ.1,000 ஒவ்வொரு மாதமும் வழங்கப் படும். ‘இந்தச் சமூகத்துக்காக வீட்டிலும் வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
- கணக்கில்கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்’ என்கிறது அரசாணை. ‘இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றப்படாமலேயே இடம்பெற்றிருக்கும்’ என்பதையும் இந்த அரசாணையில் தமிழ்நாடு அரசு அங்கீகரித்திருந்தது.
- ஆண்டுக்கு ரூ.12,000 உரிமைத்தொகை, ‘பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதற்கானது’ என்று அரசாணை சொல்கிறது. எனவேதான் இந்தத் திட்டத்துக்கு ‘மகளிருக்கான உதவித்தொகை’ என்பதற்குப் பதிலாக ‘மகளிர் உரிமைத்தொகை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பயன்பெறுவதற்கான தகுதிகள்
- தகுதிவாய்ந்தவை என்று அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 வயதை நிறைவு செய்த பெண்கள் (செப்டம்பர் 15, 2002க்கு முன்பிறந்தவர்கள்) இத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதி பெறுவார்கள். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்கண்ட மூன்று பொருளாதார அளவுகோல்களை நிறைவேற்றுவனவாக இருக்க வேண்டும்:
- 1. ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்; 2. ஐந்து ஏக்கருக்குக் குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவான மானாவரி நிலத்தைச் சொந்தமாகக் கொண்ட குடும்பங்கள்; 3. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்குக் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்குத் தனியாக வருமானச் சான்றிதழையோ நிலப் பதிவுகளையோ அளிக்கத் தேவையில்லை.
குடும்பப் பெண் தலைவர்
- குடும்ப அட்டையில் (நியாயவிலை அட்டை) இடம்பெற்றுள்ள அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் நிலையில், ‘குடும்பத் தலைவர்’ என்று பெயரிடப்பட்டுள்ள பெண், அந்தக் குடும்பத்தின் பெண் தலைவராகக் கருதப்படுவார்.குடும்ப அட்டை ஆண் ஒருவரை, குடும்பத் தலைவர் என்று குறிப்பிடும்பட்சத்தில் அவருடைய மனைவி, குடும்பத்தின் பெண் தலைவராகக் கருதப்படுவார்.
- குடும்பத்தின் ஆண் தலைவரின் மனைவியுடைய பெயர் குடும்ப அட்டையில் இல்லை என்றால், அவ்வட்டையில் உள்ள வேறொருபெண் அந்தக் குடும்பத்தின் பெண் தலைவராகக் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் 21 வயதை நிறைவுசெய்த ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கு அவர்களில் யாரேனும் ஒருவரை அந்தக் குடும்பமே தேர்ந்தெடுக்கலாம். அதோடு, திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்கள், கைம்பெண்கள், திருநர்கள் ஆகியோர் ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்தால் அவர்களே குடும்பத்தின் பெண் தலைவராகக் கருதப்படுவர்.
தொடக்கத்தில் வரையறுக்கப்பட்ட தகுதிகள்
- இத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஜூலை மாதத்தில்வெளியிடப்பட்டபோது, இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் சில பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு அரசுவிலக்கு அளித்திருந்தது.
- அவர்கள், வருமான வரி செலுத்தும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், அரசு,பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தவிர), கார், ஜீப், டிராக்டர் மற்றும் இதரகனரக வாகனங்களைச் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்திருப்போர் ஆகியோர் ஆவர்.
- அதோடு முதியோர் ஓய்வூதியம், கைம்பெண் ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதுகுத்தண்டுவடம்/ தண்டுவடம் மரத்துப் போதல் நோய், பார்கின்சன்’ஸ் நோய் பாதிப்பு, தொழுநோய், மாற்றுத் திறனாளிகளுக்கான பரா மரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பிற தகுதி அளவுகோல்களை நிறைவேற்றியிருப்பதோடு, திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி இழப்பு அளவுகோல்கள் எதன் கீழும் வராததாக இருக்க வேண்டும்.
தகுதி வரையறையில் மாற்றங்கள்
- பல்வேறு தரப்பினரிடம்இருந்து எழுந்த கோரிக்கைகளை ஏற்று மாற்றுத்திறனாளிகள் அல்லது முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சர்விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியம் ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியம் பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு கூறியது.
அரசு எதிர்கொள்ளும் விமர்சனங்கள்
- இந்த உரிமைத்தொகையைப் பெறுவதற்கு அரசு வரையறுத்துள்ள தகுதி அளவுகோல்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் அனைத்துக் குடும்பங்களின் பெண் தலைவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றுஸ்டாலின் கூறியதைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியினர், தேர்தலுக்குப் பின்பு, இந்தத் திட்டத்தில் பயன்பெற பொருளாதார நிபந்தனைகளை விதிப்பதன் மூலம்பயனர்களின் எண்ணிக்கையை அவர் குறைத்திருப்ப தாகவும் கூறுகின்றனர்.
- தற்போதைய நிலை: தற்போது மாநில அரசு ஒரு கோடியே63 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அவற்றில்ஒரு கோடியே ஆறு லட்சம் விண்ணப்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தம் சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதற்கும் தேவைப்பட்டால் இன்னொரு முறை விண்ணப்பிப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2023)