TNPSC Thervupettagam

கலையை அழித்தால் காலநிலை பிழைக்குமா

August 26 , 2023 317 days 197 0
  • கலை உலகின் சூரியக் குழந்தைஎனப் போற்றப்படும் ஓவியர் வின்சென்ட் வான்காவின் சூரிய காந்தி ஓவியங்களில் ஒன்று, லண்டன் தேசிய ஓவியக்கூடத்தில் உள்ளது. 2022 அக்டோபர் 12 அன்று பார்வையாளர்களாக அங்குவந்த இளம் பெண்கள் இரண்டு பேர், திடீரென அந்த ஓவியத்தின்மீது தக்காளி சூப்பினை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். எதிர்பாராத இந்தச் செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க, அந்தப் பெண்களில் ஒருவர் பின்வரும் கேள்விகளை உரத்து ஒலித்தார்: அதிக மதிப்புமிக்கது எது -கலையா, வாழ்க்கையா? நம்முடைய பூவுலகின், அதில் வாழும் மக்களின் பாதுகாப்பைவிட ஓர் ஓவியத்தின் பாதுகாப்பு பற்றி நீங்கள் அதிகம் கவலை கொண்டிருக்கிறீர்களா?”
  • பிரிட்டிஷ் அரசாங்கம் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதை வலிறுத்திவரும் ஓர் அமைப்பு, Just Stop Oil. காலநிலை மாற்றம் சார்ந்த வெகுமக்களின் கவனத்தைக் கோரும் பல்வேறு உத்திகளில் ஒன்றாக, புகழ்பெற்ற ஓவியங்களின்மீது சூப்பு, உருளைக்கிழங்கு மசியல் போன்றவற்றை வீசுதல், கையில் பசையுடன் ஓவியங்களில் ஒட்டிக்கொள்ளுதல் என்பது போன்ற பலவிதமான போராட்ட வடிவங்களையும் பரப்புரைகளையும் அந்த அமைப்பு கையிலெடுத்தது. அத்தகைய போராட்டங்களில் ஒன்றுதான் வான்காவின் ஓவியத்தின் மீதான அந்தத் தாக்குதல்’.

மற்ற அமைப்புகள்

  • எண்ணெய், எரிவாயு முனையங்களை முற்றுகையிடுதல், எரிபொருள் நிலைய பம்புகளை அடித்து நொறுக்குதல் என இந்த அமைப்பினர் இதற்கு முன்பு மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள் உள்ளூர்ச் செய்திகளைத் தாண்டி கவனம் பெற்றிருக்காத நிலையில், ஓவியங்களின் மீதான தாக்குதல் உலகளாவிய கவனத்தை உடனடியாக அவர்களுக்குக் கொண்டுவந்தது. Just Stop Oil அமைப்பைப் போல், Letzte Generation (‘கடைசி தலைமுறைஎன்று பொருள்) என்கிற அமைப்பும் ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய இடங்களிலிருந்து இத்தகையச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
  • அந்த வகையில் லியனார்டோ டாவின்சி, யோஹான்ஸ் வெர்மீர், பிரான்சிஸ்கோ கோயா, ஜான் கான்ஸ்டபிள், கிளாத் மோனே, குஸ்தவ் கிளிம்ட், ஆண்டி வார்ஹோல், சார்லஸ் ரே என மேற்கத்திய ஓவிய-கலை உலக ஜாம்பவான்களின் படைப்புகள்மீதும் இத்தகைய தாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது.
  • மகாகனம் பொருந்திய இந்த ஓவியங்கள், கைகளால் தொடக்கூடாத அளவுக்குப் புனிதம் ஏறியவையாகச் சமூகத்தின் கூட்டு நனவிலியில் வலுவான ஒரு பிடிப்பைக் கொண்டுள்ளன என்பதை இந்தச் செயற்பாட்டாளர்கள் உணர்ந்திருக்கின்றனர்.
  • எனவே, அவற்றின் மீது சூப்பினை வீசுவது போன்ற செயல்கள் எத்தகைய எதிர்ப்புகளைக் கொண்டு வரும் என்பதை அறிந்தே அவர்கள் இந்தத் தாக்குதல்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்புகளில் இணைந்து செயல்படுபவர்களில் பெரும்பான்மையோர் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்குக் கலையை அழிக்க வேண்டும்?  

  • முந்தைய காலங்களில், பல்வேறு காரணங்களால் அவ்வப்போது தாக்குதல் களுக்கு உள்ளாகி பல ஓவியங்கள் சேதமடைந்திருக்கின்றன. அதன் விளைவாக, உலகமெங்கும் ஓவிய-கலைக்கூடங்கள் மிகச் சிறப்பான பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டு ஓவியங்களையும் கலைப் படைப்புகளையும் பாதுகாத்துவருவதால், தற்போதைய தாக்குதல்களால் ஓவியங்கள் சேதமடையவில்லை. காலநிலை மாற்றம் சார்ந்த கவனத்தைத் தீவிரப்படுத்துவதுதான் தங்கள் நோக்கமே அன்றி ஓவியங்களைச் சேதப் படுத்துவது அல்ல என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
  • வாழ்க்கை ஒருவேளை கலையைவிட அதிக மதிப்புடையதாக இருக்கலாம்தான்; ஆனால், காலநிலை மாற்றம் சார்ந்த கவனத்தைக் கோருவதற்கு, அந்த நிகழ்வுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்காத இந்த ஓவியங்களைத் தேவையில்லாமல் சேதப்படுத்துவது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது பெரும்பான்மைக் கலை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
  • ஆனால், இத்தகையச் செயல்பாடுகளால் மக்கள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட பிறகு காலநிலை மாற்றம் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள் என்பது செயல்பாட்டாளர்களின் வாதம்.

வருத்தம் நியாயமா? 

  • லூவ்ர் அருங்காட்சியகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம், ககன்ஹைன் உள்ளிட்ட உலகின் முக்கியத்துவம் வாய்ந்த 92 பண்பாட்டு அமைப்புகளின் தலைவர்கள், ஓவியங்களின் மீதான தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் கூறினர்: நீங்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் என்றால், இயற்கைச் சூழலைப் பாதுகாக்க முயல்கிறீர்கள்; நீங்கள் ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கும்போது, மனிதகுலத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமையாகும்.
  • ஓவியங்களின் மீதான தாக்குதல்களுக்கு ஆத்திரப்படுபவர்கள், மேற்கத்திய நாடுகள், அவற்றின் பெருநிறுவனங்களால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவுகளை முதன்மையாக எதிர்கொண்டுவரும் தெற்குலக நாடுகளின் (global south) மக்கள், உயிரினங்கள், சூழலியல் அமைப்புகள் பற்றி என்றைக்காவது ஆத்திரப்பட்டிருக்கிறார்களா என்கிற வலுவான எதிர்வினையைக் காலநிலைச் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.
  • மனிதச் செயல்பாடுகள் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், புவியின் சூழலியல் அமைப்புகள்மீது செலுத்திக் கொண்டிருக்கும் தாக்கம், அவற்றின் தன்மையைத் திரித்து திரும்பிச் செல்லமுடியாத நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. தவறுதலாகவோ வேண்டுமென்றோ சேதப்படுத்தப்படும் கலைப் படைப்பு ஒன்றை அதன் நிஜத் தன்மைக்கு - எவ்வளவு மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டும் - மீட்டுருவாக்கம் செய்வது கடினம். அந்த வகையில், காலநிலை மாற்றத்தின் காலத்தில், கலைப் படைப்புகளும் சூழலியல் அமைப்புகளும் ஒருவகையில் அரூபமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை.

நிதர்சன நிலை

  • உலகளாவிய கரிம மாசுபாட்டுக்கு முதன்மை காரணிகளான புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து பிரிட்டிஷ் அருங்காட்சியகம், இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியம், ஆம்ஸ்டர்டாமில் உள்ள வான்கா அருங்காட்சியகம் போன்றவை அண்மைக் காலம்வரை நிதியுதவி பெற்று வந்தன. இத்தகைய பெரும் அருங்காட்சியகங்களும் பல நூறு கோடி மதிப்புடைய ஓவியங்களும் மட்டும் ஏன் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகின என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை மாற்றம் சார்ந்த கவனத்தைக் கோருவதற்குக் கலைப் படைப்புகள், சின்னங்கள் ஆகியவற்றின் பங்களிப்பைநாம் நாட முடியாது என்பது திண்ணம். ஏனென்றால், நாட்டின் பெரும்பான்மைக் கலைச் சின்னங்கள், அதைப் பார்வையிடும் மக்களால் ஏற்கெனவே - காரணங்களே இன்றி - சேதப்படுத்தப்பட்டுவிட்டன. சென்னை அண்ணா நகர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவில் அமைந்துள்ள கோபுரம், பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.
  • ஆனால், சில மாதங்களிலேயே அது கிறுக்கல்களால் நிறைந்து பரிதாப நிலையில் வீழ்ந்துவிட்டது. தஞ்சை பெரிய கோயில் போன்ற ஆயிரமாண்டு அதிசயங்களைக்கூட மக்கள் விட்டுவைக்கவில்லை. காலநிலை சார்ந்து மட்டுமல்ல, கலை சார்ந்த ஆழமான விழிப்புணர்வு இந்தியாவில் தேவை. அது நடந்தால், ஒருவேளை இரண்டில் ஒன்று அல்லது இரண்டுமேகூட காப்பாற்றப்படலாம்!

நன்றி : இந்து தமிழ் திசை (26 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்