TNPSC Thervupettagam

கலை வளர்த்த தேவி!

March 8 , 2021 1416 days 714 0
  • தமிழக வரலாற்றில் தஞ்சை மண் என்றென்றும் சிறப்பிற்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. மாபெரும் சோழப்பேரரசின் தலைநகராகவும் உலகின் ஒப்பற்ற கட்டிடக் கலைக்குச் சான்றான இராஜராஜன் எழுப்பிய பெரிய கோயிலையும் அதேபோன்று இன்னும் பல வரலாற்றுப்பெருமைகளையும் தன்னுள்ளே கொண்டிலங்கும் தஞ்சை மண் தனித்துவமிக்க பேராற்றல் கொண்ட பெரிய மனிதர்களை ஈன்றெடுத்த சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
  • தமிழகத்தில் திருக்கோயில்களுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த சதிர் என்ற அரிய கலைக்கு சமுதாயத்தில் தகுதியும் உயர்வும் பெற்றுத்தந்தவர். 29.02.1904-ம் நாள் தஞ்சையில் பிறந்தவர் ருக்மணிதேவி ஆவார்.
  • இவர் சிறந்த நாட்டிய மேதை. இசையிலும் தேர்ச்சி பெற்றவர். குற்றாலக் குறவஞ்சிசாகுந்தலம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை தமிழ்தெலுங்குவங்காளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி நடத்தியதோடு மட்டுமின்றி அக்கலைக்குப் புத்துயிரும் அளித்தவர் ஆவார்.
  • சென்னையில் இன்றளவும் சிறந்து விளங்கக்கூடிய கலாக்ஷேத்ராவினைத் தோற்றுவித்தவர் இவர். இம்மையம் அடையாறில் இன்றும் சிறப்புடன் செயலாற்றி வருகிறது.
  • கலாக்ஷேத்ரம் என்றால் கலைகளின் புனித இடம் என்று பெயர் ஆகும். 06.01.1936-ஆம் நாள் இவ்வம்மையாரால் தோற்றம் பெற்ற இம்மையம் உலகமொழியாக கலையின் மூலம் உண்மையான பன்னாட்டு உறவிற்கான ஒரு மையமாகவும் மக்கள் வளர்ச்சிக்குக் கலைகளே அடிப்படை என்ற உணர்வினை ஏற்படுத்துதலும் சிறந்த இளைஞர்களை உருவாக்குவதுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
  • நாட்டியத்தின் முதற்கடவுளான சிவபெருமானுக்கே இம்மையம் உரிமைப்பட்டதாகக் கருதப்படுகிறது. இம்மையத்தின் தோற்றத்தால் பரதநாட்டியக்கலை மறுமலர்ச்சி பெற்று பல ஆயிரக்கணக்கான பெண்கள் பரதம் கற்று சிறப்போடு திகழ திருமதி ருக்மணிதேவியே காரணம்.
  • இம்மையத்தில் நாட்டியம்இசைஓவியம் போன்ற நுண்கலைக் கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவ மாணவியர் இங்கு வந்து பயில்கின்றனர்.
  • மாணவர்கள் எளிய வாழ்க்கை வாழும்படி நெறிப்படுத்தப்படுகின்றனர். இம்மையமானது குருகுல முறையில் செயல்பட்டு வருகின்றது. கலை பண்பாட்டுத் துறைகளில் கலாக்ஷேத்திரத்தின் சாதனைகள் முக்கிய இடம் பெறுகின்றது.
  • இம்மையத்தைத் தோற்றுவித்த ருக்மணி தேவியின் பெற்றோர் நீலகண்ட சாஸ்திரிசேஷம்மாள் என்பவராவர். வடமொழியில் சிறந்த புலமை பெற்ற நீலகண்ட சாஸ்திரி பொறியாளராகவும் இருந்தவர்.
  • டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் மாணவரும்பிரம்மஞான சபையைச் சேர்ந்த கல்வியாளரும் ஆகிய டாக்டர் ஜி.எஸ். அருண்டேல் என்னும் ஆஸ்திரேலியரை ருக்குமணிதேவி தன் பதினாறு வயதில் மணம் புரிந்தார்.
  • ஆன்மீகக் கல்வி கற்க இந்தியாவிற்கு வந்த அருண்டேலை இவ்வம்மையார் திருமணம் செய்துகொண்டது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டது.
  • ருக்மணிதேவியும் அருண்டேலும் ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது ரஷ்யரான அன்னா பாவ்லோவா என்னும் அம்மையாரைக் கண்டனர்.
  • பாவ்லோவா ஒரு மேல்நாட்டு நடனமேதை. அந்த அம்மையாரே ருக்மணிதேவியிடம் நடனம் கற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.  கிளியோர்ஜோர்டி தலைமையில் பாவ்லோவின் பாலே நடனக்குழு செயல்பட்டு வந்தது. இக்குழுவில் இவர் சேர்ந்து பாலே நாட்டியம் பயின்றார்.
  • அதன்பின்னரே பரதநாட்டியக் கலையும் பயின்றார். உயர்சாதிப் பெண்கள் நாட்டியக் கலையில் நாட்டம் கொள்ளாத அக்காலகட்டத்தில் ருக்குமணிதேவியார் நாட்டியக்கலை பயின்று புரட்சி செய்தார்.
  • அடையாறு பிரம்மஞான சங்க நிலையத்தில் 1936-ஆம் ஆண்டு ஒரே ஒரு மாணவியுடன் கலாக்ஷேத்ரா தொடங்கப்பெற்றது. பிரம்மஞான சபை வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் நிழலில் தொடங்கப்பெற்ற இக்கலைப்பள்ளி, அந்த ஆலமரத்தின் விழுதுகளைப்போன்றே இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் கலைத்தொண்டாற்றி வருகிறது.
  • இவர் தன் நாட்டியப் பள்ளியைத் தொடங்கியபோது அப்பள்ளியின் முதல் மாணவி இவருடைய மருமகளான இராதாபர்னியர் என்பவரே. பரதநாட்டியக் கலையில் ருக்குமணிதேவியார் பல ஆய்வுகளை செய்துகாட்டி இக்கலையின் வளர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றினார்.
  • குற்றாலக்குறவஞ்சியை 1944-ஆம் ஆண்டில் நாட்டிய நாடகமாக அரங்கேற்றினார். பிறகு இராமாயணத் தொடர் நாட்டிய நாடகத்தினையும் அரங்கேற்றம் செய்தார்.
  • இவருடைய நாடகக்குழுவில் துணை இசைக்கருவியாக வீணைபுல்லாங்குழல் போன்றவை இடம்பெற்றன. இவர் நாட்டியத்தின்போது நாடக நடிகர்கள் அணிந்துகொள்ளும் ஆடை அணிகலன்களையும் புதுமைப்படுத்தினார்.
  • கலைக்குத் தொண்டாற்றிய இவரின் சிறப்பைப் பாராட்டும் விதமாக 1952-ஆம் ஆண்டில் இவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமித்து மகிழ்ந்தார் பண்டித ஜவஹர்லால் நேரு.
  • ஆறு ஆண்டுகள் அப்பதவியில இருந்த காலத்தில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதைத் தடுக்கும் சட்ட முன்வரைவினை மேலவையில் கொண்டுவர வழிவகை செய்தார்.
  • விலங்குகள் நல வாரியத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்று செயல்பட்டார். உலக சைவ உணவாளர்கள் மாநாட்டில் வரவேற்புக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • இவ்வம்மையார் உலகப்புகழ்பெற்ற மாண்டிசோரி கல்வி முறையைத் தமிழகத்தில் முதன்முறையாகப் புகுத்தியவர். மாண்டிசோரி பள்ளியையும் ஏற்படுத்தினார்.
  • மேலும் பெசன்ட் தியோசபிகல் உயர்நிலைப்பள்ளிபெசன்ட் அருண்டேல் மேல்நிலைப்பள்ளிகைவினைப் பொருட்கள் ஆராய்ச்சி மையம்நெசவுத் தொழில் மையம் போன்றவையும் தொடங்கப்பெற்று கலாக்ஷேத்ரா வளாகத்தில் செயல்படுகின்றன.
  • குறிப்பாக கைவிடப்பட்ட பெண்களுக்கும் ஊனமுற்ற பெண்களுக்கும் கைவினைப் பொருட்கள் செய்யும் கலையில் இங்கு பயிற்சியளிக்கப் பெற்று வருவது சிறப்பானதாகும்.
  • தமிழிலக்கியங்களைப் புதுப்பித்து பதிப்பித்து தமிழுக்கு புத்துயிர் வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் பெயரில் ஒரு நூலகத்தை இவ்வளாகத்தில் 1943-ஆம் ஆண்டு ஏற்படுத்தினார்.
  • இந்நூலகம் டாக்டர் உ.வே.சாமிநாதையர் சேகரித்த இலக்கியச் செல்வங்களை அழிந்துவிடாமல் காத்து அவரது படைப்புகளை நூல்களாகவும் வெளியிடச் செய்தார்.
  • இந்திய அரசு இவ்வம்மையாரின் தொண்டுகளைப் பாராட்டும் விதமாக பத்மபூஷன் விருது வழங்கிப் பாராட்டிச் சிறப்பித்தது. மத்தியப்பிரதேச மாநில அரசு 'காளிதாசர் சன்மானம்என்ற விருதினையும்ஆசியச்சங்கம் இரவீந்திரநாத் தாகூர் நூற்றாண்டு பட்டயத்தையும் வழங்கிச் சிறப்பித்தது.
  • அமெரிக்காவில் உள்ள வெயின் பல்கலைக்கழகமும் காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட மகிளா மகாவித்யாலயமும் முனைவர் பட்டங்கள் வழங்கிச்சிறப்பித்தன.
  • விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 'தேசிகோத்தமஎன்னும் விருதினை வழங்கிப் பாராட்டியது. விலங்குகளுக்குக் கொடுமை செய்வதைத் தடுக்கும் பிரிட்டானியக் கழகம் இவருக்கு விக்டோரியா அரசியார் வௌ்ளிப்பதக்கம் அளித்துப் பெருமைப்படுத்தியது.
  • இத்தனைப் பெருமைக்கும் சொந்தக்காரரான இவ்வம்மையார் கலையை இறையருள் மணம் கமழும்படி செய்த பெருமைக்குரியவர் ஆவார். இவரால் உருவாக்கப்பெற்ற கலாக்ஷேத்ரம் மேம்போக்காகப் பார்த்தால் இசைஓவியம் போன்ற நுண்கலைகளைக் கற்பிக்கும் கல்விக்கூடமாகத் தோன்றும்.
  • ஆழ்ந்து நோக்கினால் ஒவ்வொரு மாணவனிடமும் புதைந்துள்ள திறமையை வெளிக்கொண்டு வருவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை நாம் காணலாம்.
  • தன் வாழ்நாள் முழுவதும் இந்தியப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்குச் செயல்பட்ட இவ்வம்மையார் தன்னுடைய எண்பத்து இரண்டாம் வயதில் அதாவது 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் இவ்வுலக வாழ்வை விட்டு அவ்வுலகு எய்தினார்.

நன்றி: தினமணி (08 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்