TNPSC Thervupettagam

கல்லில் வாழ்வியல் கண்ட தமிழர்கள்!

August 20 , 2019 1780 days 988 0
  • ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பது வழக்கு. இந்தக் கலைகள் நிறைந்து விளங்குவதே கோயிலின் அம்சமாகும். பல கலைகளும் நிறைந்திருக்கும் கோயிலில் எந்தக் கலை முந்தியிருக்கிறது? எல்லாக் கலைகளுமே இறைத்தன்மையின் வெளிப்பாடுதான் என்றாலும், பக்திக்கும் வழிபாட்டிற்குமுரிய அடையாளமாக விளங்குவது சிற்பக் கலைதானே.
நடுகல்
  • நடுகல்லிலிருந்து தொடங்கிய உருவ வழிபாடு பிற்காலங்களில் கோயில் திருவுரு வழிபாடாக மாற, அங்கே கடவுள் கல்லில் இருந்து எழும் சிற்பக் கலையாகக் காட்சியானார்.
    தமிழகம் முழுவதும் கற்கோட்டங்கள் நிறைந்திருப்பதும் தமிழர்கள் உலகெங்கும் தாம்சென்ற தேசங்களிலெல்லாம் கடவுள்களைக் கற்சிலையாகவே தோற்றுவித்ததும் எதன் அடிப்படையில்? ஓவியம் இருந்தது.  மண்ணிலிருந்து, மரம் தொடங்கிக் கல் கடந்து  உலோகப் பயன்பாட்டில் ஐம்பொன் சிலைகள்கூட வந்துவிட்டன. ஆனபோதும் எவ்வித மாற்றமுமின்றி இன்றுவரை கல்லையே நாம் கடவுளாகக் கருதி வழிபடுவதன் நோக்கமென்ன?
  • கோயிலின் விமானம், கோயில் கதவுகள், ஏன் வாயில் படிகளில்கூடப் பொன் இழைகிறது. உற்சவ மூர்த்திகளும் ஐம்பொன்னுருக்களாகவே பொலிகின்றனர். ஆனால், மூலவர் கற்சிலையாகவே நிற்பதன் மர்மம் என்ன? சிற்பக் கலைக்குக் கிடைத்த சிறப்பு அது. கல்லுக்கும் மரத்துக்கும் கிடைத்தபெருமதிப்பு அது. காரணம் என்ன?  
    அதற்கான விடையில் தமிழர்தம் வாழ்வியற் பொருண்மை  அடங்கியிருக்கிறது. கல்லிலே கலைவண்ணத்தை மட்டுமன்றி, வாழ்வியலின் வண்ணத்தையும் கண்டு காட்டியவர்கள் தமிழர்கள்.
  • சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை. முரண்பட்ட ஓர் உருவத்திலிருந்து நெறிப்பட்ட ஓர் உருவத்தைக் கொடுப்பது.
    கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமு

கண்ட சருக்கரையும் மெழுகும்

என்றிவை பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பாவன

என்று திவாகர நிகண்டு சிற்பத்திற்கு உதவும் பொருள்களைப் பேசுகிறது.
சிற்பங்களைச் செய்யக் கற்களும், உலோகங்களும், மரமும் மண்ணும்கூடப் பயன்படுகின்றன. என்றாலும்  கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது மட்டும் சிற்பங்கள் உயர்ந்த இடத்தை அடைகின்றன.

கலைகள்
  • ஏனைய கலைகளில் படைப்பவன்-தானே தனது படைப்பை- அதாவது வேண்டியதை உருவாக்குகிறான். ஆனால், சிற்பி வேண்டாததை நீக்குகிறான். ஏனைய கலைகள் ஆக்கத்தில் தோன்றும்போது சிற்பக் கலை மட்டும் நீக்குதலிலும் நீங்குதலிலும் தோன்றுகிறது. 
  • உண்மையில் கல்லை மட்டுமே சிற்பி செதுக்குகிறான். சிற்பத்தை அவன் ஒருபோதும் தொடுவதேயில்லை. சிற்பம் தானாகவே வெளிப்பட்டு விடுகிறது. ஒரு பூரணத்தில் வேண்டாததை நீக்கி விட்டால் அது பரிபூரணம் ஆகிவிடுகிறது.
    இலக்கணத்தின்படி பார்த்தால் கல் எனில் அவர் கல்லார் (கல்லாகவே இருப்பவர்) என்றும், கல் மாறி புதுச்சொல் ஏற்கும்போது கற்றார் (கல்லாமை நீங்கியவர்) என்றும் மாறுவதும் வியப்பல்லவோ.
ஆலயம்
  • ஆன்மாவை லயப்படுத்த ஆலயத்துக்கு வரும் பக்தனுக்குக் கடவுளாய் நிற்கிற கல் உணர்த்தும் பாடம் என்ன? நம்மில் வேண்டாததை நீக்கு என்பதுதானே. நான் அப்படி நீக்கியதால்தான்- (நான் நீங்கியதால்தான்) கல்லாக இருந்த நான் கடவுளாகியிருக்கிறேன் எனக் காட்டும் திருக்காட்சிதானே தெய்வ தரிசனம். நாம் கற்பூரத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொள்வது இந்தத் தரிசனத்தைக் கண்டு கொண்ட மகிழ்ச்சியினால்தானே.
    எது மனிதனை மனிதனாக ஆக்குகிறதோ, ஆக்குவதற்கு உதவுகிறதோ அதைக் கலை என்றும், அந்தக் கலையினும் உயர்ந்து மனிதனைத் தெய்வமாக மாற்றக் கூடிய பெருமை உள்ளதோ அதை வழிபாடு எனவும் அமைத்துக் கொண்ட தமிழரின் வாழ்வியல் முறை அடிப்படை, பற்றுகளிலிருந்து நீங்குவதே. அல்லவை தேய அறம் பெருகும் அல்லாதவற்றை நீக்கினாலே நல்லவை தானே வந்து சேர்ந்து விடுகிறது என்று நீக்கத்தையே அறத்திற்கான முதலாகக்  குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.  
  • நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று முன்மொழிகிறது சங்க இலக்கியம்.
  • பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்பது நீங்குவதையே குறிக்கிறது. நீந்துதல்  கடத்தல்தானே. இறைவன் அடியைச் சேருவதற்கு இடைப்பட்ட பிறவிப் பெருங்கடலைக் கடப்பதுதானே வாழ்க்கை. இந்தப் புரிதல் இல்லாதவர்கள், தான் கல்லாய் இருக்கிறோம் என்று உணராமல், காலங்காலமாக இருக்கிறோம்-இருப்போம்என்னும் நினைவில் கருங்கல்லைப் போன்று இருந்து அழுக்கையே சுமக்கிறார்கள். அவர்கள் சிலையாவதும் இல்லை. தனக்குள் இருக்கும் கடவுளையும் உயிர்ப்பிக்க விடுவதில்லை.
    ஆக, கல்லிலே கலை வண்ணத்தை மட்டுமல்ல, கடவுள் தரிசனத்தையும் தமிழர்கள் கண்டதன்/காட்டியதன் ரகசியமும் இதுதான்.  
  • இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் கல்லிலிருந்து புறப்படுகிறது தமிழ்க் கல்வியே. கல்லுதல் என்பதே வேண்டாததை நீக்குதலாம். வேண்டாதவற்றைத் தோண்டி வெளியே எடுத்தால் வேண்டியது கிடைத்து விடுகிறது. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி தெரிகிறதா?  கசடற என்று அறுத்துச் சொல்கிறார் திருவள்ளுவர். அதையும் இளமையில் கல் என்று முன்னிறுத்திவிடுகிறார் ஒளவைப் பெருமாட்டி.
    எங்கு சுற்றினும் கல்லினுள் வந்து விடுகிறது வாழ்க்கை. கலையாகவும், உருவமாகவும், கடவுளாகவும் விளங்குவதை உணர்ந்துகொள்ள முடியாதாரைக்  கல்லார் என நீக்கி விடுகிறார் திருவள்ளுவர்.
இயற்கை
  • கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்
    என்று வியப்பு மேலிடக் கேட்கும் கேள்வியின் பின்னே வாலறிவனின் நற்றாள் கல்லாகவேதானே காட்சி தருகின்றது.
  • கல்லாய்ப் போக என்று முனிவர்கள் சபிப்பதன் உள்ளர்த்தம் இப்போது புரிகிறது. மீண்டெழுதலின் ரகசியம் போலும் அது. பெற்ற மனம் பித்தாக விளங்கும்போது, பிள்ளை மனம் கல்லாகவே இருக்கிறது. இது பெற்றவளுக்கும் பிள்ளைக்கும் இடையில் நிகழும் வாழ்க்கைப் புரிதல்.
  • பெற்றவள் என்பது கடவுளையும், கல் என்பது ஆன்மாவையும் குறிக்கும். பெற்றவள் பிள்ளைகளைப் பேதப்படுத்த மாட்டாள் என்பதன் விரிவுதான் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே என்பது வள்ளலார்  கூறும் வாழ்வியல் கூற்று. 

நன்றி: தினமணி(20-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்