- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்துசெய்யப்படும் என்பதும் ஒன்று.
- இதனைக் கேட்ட நடுத்தர மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். ஆட்சி அதிகாரத்துக்கு வந்து நூறு நாட்களைத் தற்போதுதான் கடந்திருக்கும் நிலையில், அதற்கான சாத்தியப் பாடுகள் குறித்துப் பேச முடியாது.
- அதே வேளையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி குறித்துப் பெற்றோர்களின் மத்தியில் பல்வேறு அச்சங்களும் பதற்றங்களும் எழுந்துள்ளன.
- தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய பலருக்கு வேலை போய்விட்டது. வணிக நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்களைத் தவிர, அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள். அவர்களது குழந்தைகள் உயர்கல்விப் படிப்புகளில் சேர்வதில் மிகப் பெரும் சவாலைச் சந்தித்துவருகிறார்கள்.
அலைக்கழியும் பெற்றோர்கள்
- தற்போது நோய்ப் பரவலின் தன்மைக்கேற்ப அரசு சில கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்துவருகிறது.
- அதில் ஒன்றாக கல்லூரி, பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது.
- இதனையடுத்துத் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாகக் கட்ட வேண்டும்.. இல்லையென்றால், மாணவர்களை வகுப்பில் அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்படையாகக் கேட்கத் தொடங்கி விட்டன என்று பெற்றோர்கள் தரப்பில் குமுறல் கேட்கிறது.
- கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், பொறியியல் படிப்புகளைப் படிக்க விரும்பித் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் பொதுத் துறை வங்கிகள் கல்விக் கடன்கள் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தியிருப்பதாகவும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வங்கிகளை அணுகினால் உரிய பதில் சொல்லாமல் அவர்களை அலைக்கழித்துவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- உயர் கல்விக்கான கடன் என்பது பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர் என்ற காரணத்தால், மாணவர்களின் உயர் கல்விக் கனவு கலைந்துவிடக் கூடாது, அவர்களுக்குக் கல்வி மறுக்கப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டது.
- எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது. எனவே, இந்தத் திட்டம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- “இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை வங்கிகள் தாமாக நிபந்தனைகள் விதிக்கவோ அல்லது விருப்புவெறுப்புடன் செயல்படவோ முடியாது. மொத்தத்தில், கல்விக் கடனைப் பொறுத்தவரை அதனைச் செயல்படுத்தும் வெறும் முகவர்கள்தான் அரசு வங்கிகள் என்று மத்திய அரசின் வங்கிகளுக்கான கல்விக் கடன் வழிகாட்டும் நெறிமுறையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
- இன்று செயல்படுத்தப்படும் கல்விக் கடன் திட்டம் 2001-ல் இந்தியன் வங்கிச் சம்மேளனம் கொண்டுவந்த மாதிரிக் கல்விக் கடன் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மத்திய அரசு மேலும் ஆய்வு மேற்கொண்டு, 2012 செப்டம்பரில் அதில் சில மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்து, இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் கொண்டு வரப் பட்டது.
சொத்து ஆவணங்கள் எதற்கு?
- 2012-ம் ஆண்டு சட்டத்தின்படி, கல்விக் கடன் கோரும் மாணவரிடம் எந்தச் சொத்து ஆவணங்களும் கோரக் கூடாது. அவர் பங்குத் தொகை செலுத்த முடியவில்லை என்றால், அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகையைப் பங்குத் தொகையாக ஏற்றுக்கொள்ளலாம்.
- குறிப்பாக, ரூ. 7.50 லட்சம் வரை கடனாகக் கொடுக்கும்போது, எந்தச் சொத்து ஆவணங்களையும் கோரக் கூடாது. 15 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த காலக்கெடு தர வேண்டும்.
- கடன் பெற்ற மாணவர் படிப்பு முடிந்து, பணியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கல்விக் கடன் பெறலாம். படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம், கணினி போன்றவற்றுக்கும் கடன் கோரலாம்.
- மேலும், கிளை மேலாளர் அந்தஸ்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க அதிகாரமில்லை.
- மண்டல அளவில் உள்ள அதிகாரிகளே நிராகரிக்க முடியும் என்பது உள்ளிட்ட விதிகளை அடிப்படையாகக்கொண்டு, இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுவந்த நிலையில், கடந்த கல்வியாண்டுகளில் இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டன வங்கிகள்.
- கல்விக் கடனைப் பொறுத்தவரை கலை தொடர்பான பட்டப் படிப்புகள் படிப்பவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உண்டு.
- இந்தப் படிப்புகளுக்கான வேலை அத்தனை எளிதாகக் கிடைக்காது என்ற காரணத்தால் மருத்துவம் - பொறியியல் சார்ந்த படிப்புகளுக்கு மட்டுமே கடன் வழங்கிவருவதாகச் சொல்லப்பட்டது. தற்போது பொறியியல் பட்டதாரிகள் அதிகரித்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதால், அவர்களுக்கும் கல்விக் கடன் வாய்ப்புகள் குறைந்துவருகின்றன. கரோனா காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கும்கூட கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கும் காரணம் புரியாமல் பெற்றோரும் - மாணவரும் குழப்பி நிற்கின்றனர்.
மறுக்கப்படும் கல்வி
- கடந்த ஏப்ரல் மாதம், சென்னையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த மதுரையைச் சேர்ந்த தாரணி என்ற 19 வயது மாணவி, தந்தை இல்லாத நிலையில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்துள்ளார்.
- மதுரையில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் கோரியிருந்தார். வங்கி நிர்வாகம் பங்குத் தொகையாக ரூ. 1.27 லட்சம் கேட்டுள்ளது. தாயாரின் நகைகளை அடகுவைத்துப் பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், வங்கி மேலாளர் சில தினங்கள் கழித்துக் கடன் தர மறுத்துவிட்டார்.
- இதனால் அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது. இன்னும் கவனத்துக்கு வராமலேயே போன துயரங்கள் எத்தனையோ?
- கல்விக் கடன் கோரி பிரதமரின் வித்யலெட்சுமி திட்டத்தின் வழியாக விண்ணப்பித்தாலும் பல வங்கிகள் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தொடக்க நிலையிலேயே உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறித் தவிர்த்துவிடுகின்றன.
- கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடன் கோரி வந்தால், அவர்களிடம் சொத்து ஆவணங்கள் கேட்பதும் அரசு ஊழியர்கள் யாரேனும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டும் என்று வற்புறுத்துவதும் நடக்கிறது.
- கல்விக் கடனைப் பொறுத்தவரை கிளை மேலாளர்கள் விருப்புவெறுப்பு அடிப்படையில் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகங்களும்கூட எழுகின்றன.
- கரோனா தாக்குதலால் நலிவடைந்துள்ள தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு பல்வேறு கடன்களையும் சலுகைகளையும் அறிவித்துவரும் நிலையில், மாணவர்களின் கல்விக் கடன் விவகாரத்திலும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 - 08 – 2021)