TNPSC Thervupettagam

கல்வியில் சமத்துவம் கனவாகவே தொடருமா

January 1 , 2024 377 days 235 0
  • ஏழைகளுக்கான பள்ளிகளை அரசு நடத்துகிறது, வசதியானவர்களுக்கான பள்ளிகளைத் தனியார் நடத்துகிறார்கள். கல்வி மூலமாகச் சமத்துவம் மலரும் என்பது இன்று நிராசையாகப் போய்விட்டது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உலக நாடுகளின் முதன்மைக் குறிக்கோளாகப் பேசப்படுகிறது. ஆனால், அதற்கேற்ற கல்வி அமைப்பை நாம் உருவாக்கவில்லை. 1966இல் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைத்த அருகமைப் பள்ளி முறையும் பொதுப் பள்ளி முறையும் கானல்நீராகப் போனதே இதற்குக் காரணம்.

கல்வியைத் தீர்மானிக்கும் பணம்

  • கடந்த 40 ஆண்டுகளில் வேகமெடுத்துள்ள தாராளமயம், தனியார்மயம், வணிகமயம் காரணமாக, நுகர்வுப் பண்டமாகவும் வணிகப் பண்டமாகவும் கல்வி மாறியிருக்கிறது. இதன்விளைவுகளை மேல்தட்டுப் பிரிவினர் பொருட்படுத்தவில்லை. கல்வி வணிகமயமானதால் உயர்-ஓரளவு நடுத்தரப் பிரிவினரே கல்விச் செலவு எனும் பெரிய பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால், புதிய வகையிலான பொருளாதார அநீதி உருவாகியுள்ளது.
  • பொருளாதார அநீதிகள் தொடர்வதற்கும் வளர்வதற்கும் வாய்ப்பளிக்கும் அரசியல் ஜனநாயகத்தால் அனைவருக்குமான வளர்ச்சி சாத்தியமில்லை. அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய இன்றைய உண்மை நிலை இதுதான். இன்றைய கல்வி அமைப்பு முறையில், கல்வியை விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லாத ஏழைகள்வேறு விதமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
  • கட்டணம்இல்லாமல் பெறும் இலவசக் கல்வி மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு வயதுக்குரிய அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதைத் தேசிய அடைவுத் திறன் ஆய்வு (NAS 2021) உறுதிப்படுத்துகிறது. கல்வியை வழங்குவதில் சம வாய்ப்பும் சம தரமும் இல்லாததால், குழந்தைகளிடம் அறிவாற்றல் இடைவெளி உருவாகி வருகிறது.
  • இதன் விளைவாகவே உயர்கல்விச் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. கல்விக்கான வாய்ப்புகளையும் தரத்தையும் பெற்றோர் செலவழிக்கும் பணமே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. பணம் இல்லாதவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இதுவும் சமூக ஜனநாயக வளர்ச்சியில்லாத அரசியல் ஜனநாயகத்தின் விளைவுதான்.

சமத்துவத்துக்கான இடம்

  • உண்மையில், பிள்ளைகள் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பெரியவர் களைவிட அதிகமாக நேசிக்கிறார்கள். அவரவர் சொந்த வாழ்க்கையிலிருந்தே இதற்கான உதாரணத்தைக் கூற முடியும். எளிய பிள்ளைகள் படிக்கும் ஓர் அரசு நடுநிலைப் பள்ளியில் எனது மகனும் படித்தான். எட்டாம் வகுப்பு முடித்த பிறகு எனது மகனை மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தேன்.
  • ஆனால், எனது மகனோ, அவனுடைய நண்பர்கள் சேர்ந்துள்ள வேறொரு பள்ளியில்தான் படிப்பேன் என்று நாள் முழுதும் அழுது போராடினான். வேறு வழியில்லாமல் அவனுடைய நண்பர்கள் சேர்ந்த பள்ளியிலேயே எனது மகனையும் சேர்த்தேன். சாதி, மத, வர்க்கப் பிரிவினை உணர்ச்சிகள் ஊட்டப்படாதவரை குழந்தைகள் சமத்துவ, சகோதர உணர்வு உள்ளவர்களாகவே வளர்கிறார்கள்.
  • இன்னும் பலர் வீட்டுப் பிள்ளைகள் இப்படிப்பட்ட உதாரணங்களாக இருப்பார்கள். கல்விக் கூடங்களை விட்டால் சமத்துவத்தைப் பயிற்றுவிக்க வேறு இடங்கள் இல்லை. அதனால்தான், பல்வேறு நாடுகளிலும் அருகமைப் பள்ளி முறையும் பொதுப் பள்ளி முறையும் பின்பற்றப்படுகின்றன. ஏழைப் பிள்ளைகளும் வசதியான பிள்ளைகளும் ஒன்றாய் இணைந்து படிக்கிறார்கள்.
  • ஏழைக் குழந்தையின் குடும்பப் பொருளாதார நிலையை பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை புரிந்துகொள்ள வாய்ப்பு உருவாகிறது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற மானுட நேயம் பிள்ளைப் பருவத்திலேயே வளர்கிறது. இதையெல்லாம் அரசு பரிசீலிக்க வேண்டும்.

நலிவடையும் பொதுப் பள்ளிகள்

  • கடந்த 40 ஆண்டுகளில் தனியார் சுயநிதிப் பள்ளிகளை எங்கு வேண்டுமானாலும் தொடங்க, கட்டுப்பாடின்றி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு உருவாக்கியுள்ள தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டங்கள், ஏற்கெனவே உள்ளூரில் உள்ள பள்ளிகளின் போதுமான அளவு; உள்ளூரில் தனியார் பள்ளியின் தேவை; மாணவர் எண்ணிக்கை ஆகிய காரணிகளை ஆய்வுசெய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்று கூறுகின்றன.
  • ஆனால், போதுமான குழந்தைகள் எண்ணிக்கை இல்லாத பல பகுதிகளில் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை எல்லையும் வகுக்கப்படவில்லை. சில தனியார் பள்ளிகளில் 30 முதல் 40 கி.மீ. சுற்றளவில் உள்ள குழந்தைகளுக்குக்கூடச் சேர்க்கை வழங்கப்படுகிறது. அன்றாடம் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் அதிகமாகும் அளவுக்குப் பள்ளி வாகனங்கள் பெருகியுள்ளன.
  • சராசரியாக - ஒரு தனியார் பள்ளி தொடங்கப்பட்டதன் விளைவாக 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப் பள்ளிகள் நலிவடையவும் கல்வியில் சமத்துவம் ஒழியவும் வழிவகுத்த இந்த அவலம் இனியும் தொடர்வது நியாயமற்றது.

அரசு என்ன செய்ய வேண்டும்

  • பள்ளி தொடங்கும் இடத்தின் தேவை அறிந்தே புதிய தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் இயங்கும் இடத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஒவ்வொரு பள்ளிக்கும் குழந்தைகள் சேர்க்கை எல்லையை வரையறை செய்யும் கடமையும் பொறுப்பும் கல்வித் துறைக்கு உள்ளது. அருகில் உள்ள பள்ளியில் சேரும் உரிமை குழந்தைகளுக்கு உள்ளது.
  • அருகில் உள்ள குழந்தைகளைச் சேர்க்கும் கடமை பள்ளிக்கு உள்ளது. எந்த ஒரு குழந்தையும் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள பள்ளியைக் கடந்து வேறு பள்ளியில் சேர முடியாது. இதுவே, அருகமைப்பள்ளி - பொதுப் பள்ளி முறையின் உலகளாவிய நெறியாகும். இம்முறைகளைப் பல நாடுகளும் கட்டாயமாகப் பின்பற்றுகின்றன.
  • இந்தியாவில் 1968, 1986 ஆகிய ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கைகளிலும் அருகமைப் பள்ளி - பொதுப் பள்ளி முறைமையின் அவசியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையில் உள்ள நாடுகளோடு ஒப்பிடும்போது நம்முடைய குழந்தைகளின் கல்வி - அறிவாற்றல் திறன் மிகக் குறைவாக உள்ளது.
  • இதன் விளைவாக, உலகின் மிகப்பெரிய மனித வளமுடைய நாடாக நாம் இருந்தாலும், அறிவுசார் உள்கட்டமைப்பில் குறைந்த வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளோம். .நா. வளர்ச்சித் திட்டம் (UNDP) மூலம் மதிப்பிடப்பட்ட 2023ஆம் ஆண்டின் உலக அறிவுக் குறியீட்டுத் (GKI) தரவரிசையில், 133 நாடுகளின் பட்டியலில் இந்தியா 95ஆவது இடத்தில் உள்ளது.
  • 2022ஆம் ஆண்டின் உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டுத் (HDI) தரவரிசையில், 191 நாடுகளின் பட்டியலில் நம் நாடு 132ஆவது இடத்தில் உள்ளது. கல்வியில் அனைவருக்கும் சமதரமான வாய்ப்பை உறுதிசெய்வதன் மூலமே நாம் அறிவுப் பொருளாதார வல்லரசாக வளர முடியும். கல்வியே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாக இருக்க முடியும். அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்கச் செய்வதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான அரசியல் உறுதிப்பாடு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உருவாக வேண்டும்.
  • ஏழைக் குழந்தைகளுக்கும் வசதியான குழந்தைகளுக்கும் ஒரே வகைப்பட்ட பள்ளி என்பதும் சம தரத்திலான கல்வி என்பதும் வெறும் கனவல்ல. அது ஒரு முதன்மையான ஆட்சிப் பொறுப்பு. கல்வியை வழங்குவது முற்றிலும் அரசின் கடமையாக, பொறுப்பாக மாற வேண்டும்.
  • பெற்றோர் கட்டணத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளையும் அரசின் நிதியுதவியுடன் இயங்கும் பொதுப் பள்ளிகளாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு, பொதுக் கல்விக்கான அரசின் முதலீடு அதிகப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலமே கல்வியில் சமத்துவம் சாத்தியமாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்