TNPSC Thervupettagam

கல்வியில் பெற்றோர்களின் குரல் வலுவாக வேண்டும்

October 30 , 2023 421 days 263 0
  • நாட்டின் விடுதலைக்குப் பிறகு கல்வியில் பெரும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடந்துள்ளன. குழந்தைகளின் அடிப்படை உரிமையாகக் கல்வியை அறிவித்துள்ளோம். ஆனாலும், பெற்றோர்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் நிலை நமது கல்வி அமைப்பில் முழுமையாக வளரவில்லை. எப்பாடுபட்டேனும் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட வெறும் பயனாளர்களாக மட்டுமே பெற்றோர்கள் உள்ளனர். தங்களின் எதிர்பார்ப்புகளைத் தெரிவிப்பதற்கோ, குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கோ பள்ளி நிர்வாகத்தைப் பெற்றோர்களால் எளிதில் அணுக முடிவதில்லை. பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாக முறைகள் முடியாட்சிக் கால அரச குடும்பக் கல்வி முறையை மிஞ்சிவிடும் நிலையில் இன்றும் உள்ளன என்று சொல்லலாம்.

கூட்டுப் பொறுப்பு

  • இந்த அவல நிலை கவனத்தில் கொள்ளப்படாமல் இல்லை. 2009இல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் கல்வி நிர்வாகத்தில் பெற்றோர்களும் பங்கேற்பாளர்களாக மாறுவதற்கான வழிவகை உருவாக்கப்பட்டது. பள்ளிகளின் நிர்வாகத்திலும் அன்றாடச் செயல்பாடுகளிலும் பெற்றோர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவை (School Management Committee) அமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதைக் கல்வி உரிமைச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. உண்மையில் பொதுக் கல்வி மேம்பாட்டிற்கான ஆக்கபூர்வமான வழிமுறையாக இது அமைந்துள்ளது.
  • கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த கல்வி ஆண்டில் ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்டன. மொத்தம் 20 உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் 15 பெற்றோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவின் தலைவராக, பெற்றோர் உறுப்பினர்களில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். பெற்றோர் அல்லாத ஒருவர் தலைவராக முடியாது. மேலும் இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர், பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த இரண்டு உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர் ஒருவர், மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெற்றோர் ஒருவர் இடம்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை விதிமுறைகளை வகுத்துள்ளது. 20 உறுப்பினர்களில் 10 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற சமத்துவ நீதியும் பின்பற்றப்படுகிறது. மொத்தத்தில் பள்ளி நிர்வாகம் என்பது கூட்டுப் பொறுப்பாகவும் செயல்பாடாகவும் மாற்றப்பட்டுள்ளது.
  • கல்வி நிர்வாகத்தில் அடித்தள அளவில் பெற்றோர்களும் பங்கேற்கும் வகையில் அதிகாரப் பகிர்வளிப்பதும் வெளிப்படைத்தன்மை உருவாக்குவதும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கத்தின் முக்கியமான நோக்கமாகும். பள்ளிகளின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்தல், குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த முயற்சி எடுத்தல், பள்ளிக்குத் தேவையான வசதிகள், ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசின் நிர்வாக அமைப்புகள் மூலம் நிறைவேற்றுதல், பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதிக்கான பயன்பாடுகளைக் குழுவில் ஆலோசித்து முடிவெடுத்தல் உள்ளிட்டவை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கடமைகளாகவும் பொறுப்புகளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மத்திய, மாநில, உள்ளூர் அதிகாரஅமைப்புகள் செய்ய வேண்டும் என்ற விதியும் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அரசின் கல்விக் கடமைகளும் பொறுப்புகளும் சட்டப்படி உறுதிசெய்யப்பட்டுள்ளன.

பொருத்தமற்ற கோரிக்கை

  • மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொதுப் பள்ளிகளை நிர்வகிப்பதற்கு ஜனநாயக முறைப்படியான அமைப்பு முறை கல்வி உரிமைச் சட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டது பெரும் சாதனை என்றே கூறலாம். ஆனாலும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையாகச் செயல்படுவதில் பல தடைகள் உள்ளன. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள் இன்னமும் ஆரம்ப நிலையில்தான் உள்ளன. இதனால், அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களின் குரல் முழுமையாக உயிர்பெற முடியாத நிலையே தொடர்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்களை மேம்படுத்தும் கடமையை ஆசிரியர்களே சுமையாகக் கருதும் நிலையும் உள்ளது.
  • சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் தலைமைக் கல்வி வளாகம் ஆசிரியர்களின் போராட்டக் களமாக மாறியிருந்ததை அனைவரும் பார்த்தோம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் முப்பது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதில், அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் பங்கேற்கும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களை மாதம் ஒரு முறை நடத்துவதற்குப் பதிலாக ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது. மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துவது பணிச்சுமையாக உள்ளதாகவும் அரசுப் பள்ளிப் பெற்றோர்கள் கூலி வேலைக்குச் செல்வதால் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்றும் ஆசிரியர் கூட்டமைப்பினர் தரப்பில் காரணங்கள் சொல்லப்படுகின்றன. கல்வியில் பெற்றோர்களின் குரல் ஒலிப்பதற்கான தடைகளைக் களைவதற்குப் பதிலாக, இருக்கின்ற வாய்ப்புகளையும் தடுக்கும் வகையில் இக்கோரிக்கை அமைந்துள்ளது.

ஆசிரியர்களின் கடமை

  • பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பைப் பொதுக் கல்வி முறையை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர் சமூகத்திற்கு உள்ளது. அரசுப் பள்ளிகளின் நிலையும் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வித் தரமும் தற்போதைய நிலையில் இருந்து மேம்பட வேண்டும் என்றால் பள்ளி மேலாண்மைக் குழுக்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்க கூடுதலான பொறுப்புகளையும் கடமைகளையும் ஆசிரியர் சமூகம் ஏற்க வேண்டும். இதை அவர்கள் ஏற்க மறுத்தால் அரசுப் பள்ளிகளின் மீதான மக்களின் நம்பிக்கையும் குழந்தைகளின் கல்வித் தரமும் மேலும் பாழ்படும் நிலை உருவாகும். பள்ளி மேலாண்மைக் குழுவின் கடமைகளும் பொறுப்புகளும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளதால் இதை நிறைவேற்றுவதில் எவரும் எந்த விதிவிலக்கும் கோர முடியாது. பள்ளிகளில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் குழந்தைகளின் தேவைகள், உடல்நலம், மனநலம் போன்றவையும் அன்றாடம் கவனிக்கப்பட வேண்டியவை என்பதால் பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் மாதம் ஒரு முறை கூடுவது அவசியமாகும்.
  • பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளிக்கான தேவைகளைத் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்புவதால் உடனடியாக ஒரு பயனும் ஏற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்வைக்கின்றனர். இதன் காரணமாக பெற்றோர்களிடமும் நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. எனவே, பள்ளி மேலண்மைக் குழு தீர்மானங்கள் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வைக்க பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர்வான நோக்கங்களோடு சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு தடைகள் இருந்துகொண்டே உள்ளன. கல்வி உரிமைச் சட்டமும் ஏட்டுச்சுரைக்காயாக இருக்கக் கூடாது.
  • கல்வியில் சிறந்து விளங்குகின்ற நாடுகளில் பெற்றோர் குரல்களுக்கும் குழந்தைகளின் பன்முகத் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் ஆக்கபூர்வமான மதிப்பளிக்கப்படுகிறது. ஒரு பள்ளியில் சேரும் பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுப் பின்னணிகள், நம்பிக்கைகள், மரபுகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஜனநாயக நெறிப்படியான கல்வி மற்றும் பள்ளி நிர்வாக மேம்பாடு என்ற நோக்கத்தினை அடைவதற்கான அடிப்படைத் தளமாக பெற்றோர்களின் குரல் கவனிக்கப்படுகிறது. நாமும் இதைக் கவனத்தில் வைப்போம்.
  • அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல் அரசின் நிதியுதவி பெறாமல் அரசின் அனுமதியோடு பெற்றோர் செலுத்தும் கல்விக் கட்டணத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளிலும் பெற்றோர்களின் குரல் வலுவாக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்