TNPSC Thervupettagam

கல்வியில் முந்தும் பெண்கள்

September 17 , 2023 425 days 384 0
  • அடிமைத் தளையிலிருந்து பெண்களை மீட்கும் கைவிளக்காகக் கல்வியே விளங்குகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் பெண்களின் அடிப்படைக் கல்வி உறுதிசெய்யப்பட்டபோதும் உயர் கல்வி என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பெருங் கனவாகவே இருந்துவந்தது. 2014 – 15ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 2020-21இல் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக உயர்கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பின் (AISHE) ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
  • பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்களும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் உயர்கல்வி பெறுவது அதிகரித்துள்ளது ஆரோக்கியமான மாற்றம். பெண்களின் எழுத்தறிவு விகிதமும் அதிகரித் துள்ளது. சில மாநிலங்களில் உயர்கல்வி பயிலும் ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

பொருளாதாரம் பெண்கள்வசம்

  • பொருளாதாரத் தற்சார்பு, பெண்களின் சுய மரியாதையோடு நேரடியாகத் தொடர்புடையது. 2022 நிலவரப்படி இந்தியாவில் 78.5 சதவீதப் பெண்கள் தனியாக வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு மகளிர் நலத் திட்டங்களுக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. அரசுகள் வழங்கும் உதவித்தொகை அல்லது மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவதால்தான் இது சாத்தியமானது.
  • 43 சதவீதப் பெண்கள் வீடு அல்லது நிலத்தைத் தங்கள் பெயரில் தனியாகவோ கணவருடன் சேர்ந்து கூட்டாகவோ பதிவுசெய்திருக்கிறார்கள். குடும்பங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் அவர்களின் இருப்புக்கான அடையாளம். 88.7 சதவீதப் பெண்கள் தங்கள் குடும்பங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 5 தெரிவிக்கிறது. இதுவும் முக்கியமான முன்னகர்வுதான்.

பேறுகால விடுப்பு அதிகரிப்பு

  • பெண்களின் சமூக–பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் பெண் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும். மகப்பேறும் குழந்தை வளர்ப்பும் பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் காரணிகளாக உள்ள நிலையில் அரசுப் பணியில் இருக்கும் பெண்களின் பேறுகால விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. மூன்று மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆறு மாதங்களாக உயர்த்தி 2011இல் அறிவித்தார். தற்போது அது ஒன்பது மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருக்கலைப்புச் சட்டம்

  • பெண்களின் இனப்பெருக்க நலனைக் காக்கும் வகையில் மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு 2021இல் அமல்படுத்தப் பட்டது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டுக் கருவுற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் உள்ளிட்ட சிறப்புக் கவனம் தேவைப்படுவோரின் நலனைக் காக்கும் வகையில் 24 வாரக் கருவைக் கலைக்க இந்தச் சட்டத் திருத்தம் வழிசெய்கிறது. அதேபோல் கருக்கலைப்புக்குக் கணவரின் அனுமதி தேவையில்லை எனவும் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருப்பம் இல்லாத கருவைச் சுமப்பது பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. செயற்கைக் கருவூட்டல் மையங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வாடகைத்தாய் முறையை நெறிப்படுத்தும் வகையிலும் வாடகைத்தாய் நெறிமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இருவிரல் பரிசோதனைக்குத் தடை

  • பாலியல் வல்லுறவு வழக்குகளில் ‘இருவிரல் பரிசோதனை’க்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் 2022 நவம்பர் 1 அன்று தீர்ப்பளித்தது. இருவிரல் பரிசோதனையைப் ‘பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது’ எனக் குறிப்பிட்டது. 2012 நிர்பயா சம்பவத்தையொட்டி அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழுவும் இருவிரல் பரிசோதனை குரூரமானது என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்து 2013இல் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் (2013)-இன்படி இருவிரல் பரிசோதனை சட்ட விரோதமானது என மாற்றப்பட்டது. “பாலினரீதியான வன்முறையைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ நடைமுறை குரூரமாகவும் மனிதத்தன்மையற்ற வகையிலும் இருக்கக் கூடாது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், கலிஃபுல்லா அமர்வு 2013இல் தெரிவித்ததோடு, பாலியல் வல்லுறவை உறுதிப்படுத்த முறையான மருத்துவப் பரிசோதனையைப் பரிந்துரைக்கும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

கண்ணியம் காக்கப்பட வேண்டும்

  • பிற பணிகளைப் போலவே பாலியல் தொழிலும் ஒரு பணிதான் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளோடும் சலுகைகளோடும் வாழ அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதை உணர்த்தும் வண்ணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது. பாலியல் தொழிலாளர்களைக் காவல்துறையினர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் வயது, ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்; அவர்களைக் கைதுசெய்வதும் துன்புறுத்துவதும் தவறு எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • பால்புதுமையினர் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக, தன்பால் உறவு கிரிமினல் குற்றமல்ல என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. பால் புதுமையினர் சிலர் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருப்பதும் தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு திருநங்கைக்கு விருது அறிவிப்பதும் வரவேற்கத் தகுந்த முன்னெடுப்புகள்.

பெண்களுக்கான திட்டங்கள்

  • தமிழக அளவில் பெண்கள் நலத் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வந்தாலும் தற்போதைய அரசு அறிவித்த பெண்களுக்கான ‘கட்டணமில்லாப் பேருந்து’ திட்டம் முக்கியமானது. படிக்கவும் பணிபுரியவும் பேருந்துகளை நம்பியிருக்கும் பெண்களுக்கு இந்தத் திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கிறது. பெண்கள் செய்கிற வீட்டு வேலைகளை அங்கீகரிக்கும் விதமாகத் தமிழக அரசு செயல்படுத்திய ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’மும் குறிப்பிடத்தகுந்தது. வீட்டுப் பராமரிப்பு, குழந்தை - முதியோர் பராமரிப்பு எனக் குடும்பத்துக்குள் பெண்கள் செய்யும் வேலைக்கான உரிமைத்தொகை இது. பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

முதன்முதலாக

  • இந்தியப் பெண்கள் கலை, இலக்கியம், தொழில் எனப் பல்வேறு துறைகளில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள விமானிகளில் 15 சதவீதத்தினர் பெண்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். போர் விமானங்களை இயக்குகிறார்கள். மத்திய ரிசர்வ் காவல் படை பணிக்கு முதன்முதலாகப் பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் ஜெயா வர்மா சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மொழியில் எழுதப்பட்ட நாவலுக்கான முதல் புக்கர் பரிசை கீதாஞ்சலிஸ்ரீ பெற்றார். கார்த்திகி கோன்சால்வெஸ் இயக்கிய ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படம், சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்’ திட்டத்தின்கீழ் மூன்று பெண்கள் தேர்வாகியுள்ளது முக்கியமான மைல்கல்.

விண்ணைத் தொட்ட சாதனை

  • சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய வெற்றிக்குப் பின்னால் பெண் விஞ்ஞானிகள் 54 பேரின் பங்களிப்பு இருக்கிறது. சந்திரயான் 2 திட்ட இயக்குநர் வனிதா முத்தையா, சந்திரயான் 3 திட்டத் துணை இயக்குநர் கல்பனா இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூரியனை ஆய்வுசெய்ய ஏவப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜி செயல்பட்டுவருகிறார்.

உயரும் பாலின விகிதம்

  • தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 5இன்படி இந்திய மக்கள்தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1020 பேர் என்கிற விகிதத்தில் பாலின விகிதம் அமைந்துள்ளது. குழந்தைப் பிறப்பின் அடிப்படையில் பெண்களைவிட ஆண்களே அதிகம் என்கிறபோதும் ஆண்-பெண் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துவருகிறது. 2014-15இல் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 918 பேர் என்று இருந்த பிறப்பு விகிதம், 2022-23இல் 933ஆக உயர்ந்துள்ளது. பெண் குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன.

நன்றி: தி இந்து (17 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்