TNPSC Thervupettagam

கல்வி உரிமைச் சட்டம் 2009

October 11 , 2019 1918 days 32195 0
  • இந்திய அரசியலமைப்பில் கல்வி என்பது பொதுப் பட்டியலின் அதிகார வரம்பில் இருக்கும் ஒரு துறை ஆகும்.  எனவே மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இரண்டுமே இந்த விவகாரத்தில் சட்டமியற்ற முடியும்.
  • 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் (கர்நாடக மாநிலத்திற்கு எதிரான மோகினி ஜெயின் என்பவரது வழக்கு), இந்திய அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்க்கைக்கான உரிமையில் சேர்க்கப்பட்டுள்ள கல்வி உரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • அரசியலமைப்பு (எண்பத்து ஆறாவது சட்டத் திருத்தம்) சட்டம், 2002 ஆம் ஆண்டு ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பில் 21-A சரத்து ஆனது அடிப்படை உரிமை பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • எனவே, இந்தத் திருத்தம் அரசு நெறிமுறைக் கொள்கையை (சரத்து 45) ஒரு அடிப்படை உரிமையாக மாற்றியது.
  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை  சட்டம் ஆனது ஆகஸ்ட் 4, 2009 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இது சரத்து 21-A ஐப் பிரதிபலிக்கிறது.

  • இந்தச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழந்தைக்கும் சில அத்தியாவசிய விதிமுறைகளையும் தரங்களையும் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு முறையான பள்ளியில்,  திருப்திகரமான சமமான மற்றும் தரமான முழுநேர தொடக்கக் (தொடக்கப்பள்ளி + நடுநிலைப்பள்ளி) கல்விக்கான உரிமை உண்டு.
  • இந்தச் சட்டத்தின் படி, அங்கீகாரம் இல்லாமல் ஒரு பள்ளியை நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • இந்த சட்டம் ஆனது விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு இணங்க நல்ல தரமான தொடக்கக் கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு பொருத்தமான அரசு மற்றும் உள்ளாட்சி அரசுகளின் அதிகார அமைப்புகளின் கடமைகளை வகுக்கிறது.
  • இந்தச் சட்டத்தின் படி பாடத்திட்டம் மற்றும் படிப்புகள் சரியான நேரத்தில் பரிந்துரைக்கப்படுகின்றது மேலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது.
  • சரத்து 21-A மற்றும் RTE சட்டம் ஆனது இந்தியா முழுவதும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தவிர 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் யூனியன் பிரதேசமாக மாறிய பின்னர் இப்போது அங்கும் நடைமுறைக்கு வர உள்ளது.
  • RTE சட்டத்தின் தலைப்பு ‘இலவச மற்றும் கட்டாய’ என்ற சொற்களை உள்ளடக்கியது.
  • இலவசக் கல்வி என்பது எந்தவொரு குழந்தையும் தனது ஆரம்பக் கல்வியைத் தொடரவும் முடிக்கவும் இயலாமல் தடுக்கக் கூடிய எந்தவொரு கட்டணங்களையும் அல்லது செலவுகளையும் செலுத்த அவசியமில்லை என்னும் நிலையாகும்.  
  • கட்டாயக் கல்வி என்பது 6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியைப் பெற அனுமதித்தல், அவர்களது வருகை மற்றும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வது ஆகும். இது  அரசு மற்றும் உள்ளாட்சி அரசு அதிகாரிகளின் குறிப்பிடத்தக்க கடமைகளில் ஒன்றாகும்.
  • இதன் மூலம், குழந்தைகளுக்கான  அடிப்படை உரிமையை அரசியலமைப்பின் சரத்து 21-A இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, RTE சட்டத்தின் விதிகளின் படி செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது சட்டப்பூர்வமான கடமையைக் கொண்டிருக்கும் உரிமை அடிப்படையிலான ஒரு கட்டமைப்பிற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
  • RTE சட்டம் ஆனது பள்ளியில் மாணவர் சேர்க்கை, வருகை மற்றும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் அரசாங்கத்தின் பொறுப்பை அதிகரிக்கும் வகையில் இயற்றப்பட்ட உலகின் முதல் சட்டமாகும்.
  • அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் குழந்தைகளைப்  பள்ளிகளுக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பாகும்.
  • கல்வி உரிமைச் சட்டம் ஆனது வழக்கிட்டு நிலைநாட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளது.  இது கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் விதிகளைப் பின்பற்றாததற்கு எதிராக மக்களை நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் ஒரு குறை தீர்க்கும் நடைமுறையால் ஆதரிக்கப் படுகிறது.
  • 7 மே 2014 அன்று, இந்தியாவின் உச்சநீதிமன்றம், இந்திய ஒன்றியம்  மற்றும் பிறருக்கு எதிரான பிரமதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை வழக்கில், கல்வி உரிமைச் சட்டம் ஆனது அரசு உதவி மற்றும் உதவி பெறாத தனியார் சிறுபான்மை நிறுவனங்கள் மற்றும் உறைவிடப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது.
  • உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது அரசியலமைப்பின் 30வது சரத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைந்துள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில்  இந்திய ஒன்றியத்திற்கு எதிரான ராஜஸ்தான் மாநிலத்தின் உதவி சாரா தனியார் பள்ளிகளின் சங்கம் வழக்கில் நீதிமன்றம் பரிந்துரைத்த குறிப்புக்குப் பதிலளிக்கும் விதமாக  2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது.
RTE சட்டத்தின் கூறுகள்
  • அண்மையில் உள்ள பள்ளியில் ஆரம்பக் கல்வி முடியும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியைக் குழந்தைகள் பெறும் உரிமை.

  • ‘கட்டாயக் கல்வி’ என்பது ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச தொடக்கக் கல்வியை வழங்குவதையும் கட்டாயச் சேர்க்கை, வருகை மற்றும் தொடக்கக் கல்வியை நிறைவு செய்வதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை என்று இந்தச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
  • ‘இலவசம்’ என்றால், எந்தவொரு குழந்தையும் அவர்களின் ஆரம்பக் கல்வியைத் தொடரவும் முடிக்கவும் தடுக்கக் கூடிய எந்தவொரு கட்டணத்தையும் அல்லது செலவுகளையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்னும் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.
  • இதுவரை பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தையை அதன் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்க இது ஏற்பாடு செய்கிறது.
  • இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதில் அரசாங்கங்கள், உள்ளாட்சி அரசு மற்றும் பெற்றோர் ஆகியோரது கடமைகள் மற்றும் பொறுப்புகளை இது குறிப்பிடுகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் நிதி மற்றும் பிற பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.
  • மாணவர் ஆசிரியர் விகிதங்கள், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, பள்ளி வேலை நாட்கள், ஆசிரியர் வேலை நேரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் தரங்களை இது வகுக்கிறது.
  • ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட மாணவர் ஆசிரியர் விகிதம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், இது மாநில அல்லது மாவட்டம் அல்லது வட்டாரங்களில் சராசரியாக இல்லாமல் ஆசிரியர்களை  தகுந்த எண்ணிக்கை  ரீதியாக தர வரிசைப்படுத்திப் பணியில் அமர்த்துவதற்கு இந்தச் சட்டம் உதவுகிறது. இதன் மூலம் ஆசிரியர் பதவிகளில் நகர்ப்புற-கிராமப்புற ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை இது உறுதி செய்கிறது.
  • கல்விசாரா பணிகள், பத்து வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, உள்ளூர் அதிகாரசபை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றில் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவதையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.
  • இது சரியான பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அதாவது தேவையான நுழைவு மற்றும் கல்வித் தகுதிகள் கொண்ட ஆசிரியர்களை நியமிக்க வழி வகுக்கின்றது.
  • இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு இணங்க பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழங்குகிறது.
  • இந்தச் சட்டம் ஆனது பின்வருவனவற்றை உறுதி செய்கிறது
    • குழந்தையின் முழு வளர்ச்சி,
    • குழந்தையின் அறிவை மேம்படுத்துதல்,
    • குழந்தையின் திறன் மற்றும் திறமையை வளர்த்தல் மற்றும்
    • குழந்தை மையமாகக் கொண்ட கற்றல் முறையின் மூலம் குழந்தையைப் பயம், அதிர்ச்சி மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்து விடுவித்தல்.
  • இந்தச் சட்டம் ஆனது பின்வருவனவற்றைத் தடை செய்கிறது
    • உடல் தண்டனை மற்றும் மன ரீதியிலான துன்புறுத்தல்;
    • குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக நடைபெறும் நுழைவுத் தேர்வு போன்ற நடைமுறைகள்;
    • நிர்ணயக் கட்டணம்;
    • ஆசிரியர்களின் தனிப்பட்ட வேலைநேரக் கல்வி மற்றும்
    • அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகளை நடத்துதல்.
இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? 
  • அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வியை வழங்க வேண்டும்.
  • பொதுவாக, பள்ளிகளை பள்ளி நிர்வாகக் குழுக்கள் நிர்வகிக்கும்.
  • பள்ளி நிர்வாகக் குழு ஆனது  உள்ளாட்சி அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர்களைக் கொண்டுள்ள அமைப்பு ஆகும்.
  • பள்ளி நிர்வாகக் குழுவில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மட்டும் 75% இருக்க வேண்டும்.
  • பள்ளி நிர்வாகக் குழுக்களில் பின்தங்கிய பிரிவினரைச் சேர்ந்த 50 சதவீத பெண்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களை சேர்க்க இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

  • சிறுபான்மை நிறுவனங்களைத் தவிர அனைத்துத்  தனியார் பள்ளிகளும் 25% இடங்களை இலவசக் கல்வி பெறும் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். (பொது-தனியார் கூட்டாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசால் இவர்களுக்கான கட்டணம் ஆனது திருப்பிச் செலுத்தப்படும்).
  • பொருளாதார நிலை அல்லது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஆகிய அடிப்படையில் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப் படுகிறார்கள்.
  • கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதய வித்யாலயாக்கள், சைனிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளும் இந்த சட்டத்தின் வரம்பின் கீழ் வரும்.
  • இந்த ஒதுக்கீட்டின் கீழ் எந்த இடங்களையும் காலியாக விட முடியாது.
  • இந்தச் சட்டத்தின் படி 1 முதல் 5 ஆம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு 1 கி.மீ நடை தூரத்திலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலானவர்களுக்கு 3 கி.மீ நடை தூரத்திலும் ஒரு பள்ளி இருக்க வேண்டும். இத்தகையப் பள்ளிகள் அண்மைப் பள்ளிகள் அல்லது அண்மைத் தொலைவில் உள்ள பள்ளிகள் என்று அழைக்கப் படுகின்றன.
  • பள்ளியின் இருப்பிடத்தைத் தீர்மானிக்க பள்ளியின் இருப்பிட  வரைபடத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
  • இந்தக் குழந்தைகள் பள்ளியில் உள்ள மற்ற எல்லா குழந்தைகளுடனும் சமமாக நடத்தப் படுவார்கள். தனியார் பள்ளியில் கற்றல் செயல்பாட்டுச் செலவினங்கள்  குறைவாக இல்லாவிட்டால், அரசு பள்ளிகளில் ஒரு குழந்தையின் கற்றல் செலவினத்திற்கு ஆகக் கூடிய செலவில் சராசரி என்ற விகிதத்தில்  இந்தக் குழந்தைகள் அரசால் மானியம் வழங்கப் படுவார்கள்.
  • இது அங்கீகரிக்கப்படாத அனைத்து பள்ளிகளையும் தடை செய்கிறது, மேலும் இச்சட்டத்தின் மூலம் நன்கொடை அல்லது நிர்ணயக் கட்டணங்கள் மற்றும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு குழந்தை அல்லது பெற்றோருக்கு நேர்காணல் வைத்தல் போன்றவை தடை செய்யப் படுகின்றன.
  • தொடக்கக் கல்வியைப் பெறுவதற்கு குழந்தை அல்லது பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நேரடி செலவான பள்ளிக் கட்டணம் அல்லது மறைமுக செலவுகளான பள்ளிச் சீருடைகள், பாடப்புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து போன்றவை இதில்  இல்லை.
  • நிதித் திறனைக் காட்டிலும் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் மட்டுமே இதில் ஒரே தடையாக உள்ளது.
  • தொடக்கக் கல்வி முடிவடையும் வரை எந்தவொரு குழந்தையையும் பள்ளியை விட்டுத் தடுத்து நிறுத்தவோ, வெளியேற்றவோ அல்லது வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தவோ கூடாது என்பதையும் இந்த சட்டம் கூறுகிறது.
  • வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரம்பக் கல்வியை (வகுப்பு 8) முடிக்கும் வரை குழந்தைகளுக்குத் தேர்ச்சி வழங்காமல் தடுத்து வைப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
  • பள்ளிக்குச் செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களுக்கு அதே வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இணையாக சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாட்டையும்  இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
  • வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட குழந்தை அதன் வயதுக்கு ஏற்ற வகுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகளின் கல்வி உரிமையானது ஒரு தனிச் சட்டத்தின் கீழ் “மாற்றுத்திறனாளிகள் சட்டம்”  என்ற சட்டத்தின் கீழ் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.
  • ஏப்ரல் 2010 இல், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் 65:35 என்ற விகிதத்திலும், மத்திய மற்றும் வடகிழக்கு மாநில அரசுகளுக்கு இடையில் 90:10 என்ற விகிதத்திலும் இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியைப் பகிர்ந்து கொள்ள மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
  • இருப்பினும், 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மத்திய அரசு தனது பங்கை 68% ஆக உயர்த்த ஒப்புக்கொண்டது.
  • தொடக்கக் கல்வியின் தரம் உட்பட அனைத்து அம்சங்களையும் கண்காணிக்க தேசிய தொடக்கக் கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
  • தொடக்கக் கல்வியில் சேருவதற்கான நோக்கத்திற்காக, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சட்டம் 1856 இன் படி வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் அல்லது பிற ஆவணங்களின் அடிப்படையில் ஒரு குழந்தையின் வயது தீர்மானிக்கப்படும்.
  • வயது நிரூபணம் இல்லாததால் எந்தவொரு குழந்தைக்கும் பள்ளியில் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்படாது.
  • தொடக்கக் கல்வியை முடிக்கும் குழந்தைக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.
  • ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு முப்பத்தைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும்.
  • ஆரம்பக் கட்டத்தில் ஒவ்வொரு அறுபது மாணவர்களுக்கும் இரண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வழங்கப் படுவார்கள்.
  • ஆசிரியர்களின் எண்ணிக்கை அவர்களின் தரத்தை விட மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
  • (I) அறிவியல் மற்றும் கணிதம் (ii) சமூக அறிவியல் மற்றும் (iii) மொழிப் பாடங்களைக் கற்பிப்பதற்கு தலா ஒரு சிறப்பு ஆசிரியர் இருக்க வேண்டும்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு பள்ளிக்கு முழு நேர தலைமை ஆசிரியர் பரிந்துரைக்கப் படுகிறார்.
  • I முதல் V வரையிலான வகுப்புகளுக்கு 200 வேலை நாட்கள் மற்றும் VI முதல் VIII வரையிலான வகுப்புகளுக்கு 220 வேலை நாட்கள் என்ற கணக்கில் வாரம் ஒன்றுக்கு 45 மணி நேர வேலையுடன் ஒரு கல்வியாண்டிற்கு பணித் திட்டமானது இருக்க வேண்டும்.
  • பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வகையில் வகுப்பறைகள், ஒரு அலுவலகம், ஒரு பண்டக அறை மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் அறை ஆகியவை ஒவ்வொரு பள்ளிக்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
  • மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர் வசதி, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சரியான தடுப்புடன் கூடிய தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், படிப்பதற்கு ஏற்ற புத்தகங்கள் மற்றும் கற்பிக்க உதவும் வசதிகளுடன் கூடிய நூலகம், சுகாதாரமான சமையலறை வசதி போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.
  • குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission for the Protection of Child Rights - NCPCR) ஆனது இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைக் கண்காணிக்கும் நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளுக்கான பாதுகாப்புகளை மதிப்பாய்வு செய்வதிலும், புகார்களை விசாரிப்பதிம் வழக்குகளை விசாரிப்பதிலும் NCPCR ஆனது சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.
  • மாநிலங்கள் ஏப்ரல் 1, 2010 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில ஆணையம் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வியுரிமைப் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்.

பகுப்பாய்வு

  • இருப்பினும், தொடக்கக் கல்விக்கான உரிமையை வழங்க அதிகாரிகள் தவறினால், அவர்களுக்கு குறிப்பிட்ட அபராதங்கள் எதுவும் இதில் விதிக்கப்படவில்லை.
  • இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை வழங்க வேண்டிய கடமை மாநில அரசிற்கும் உள்ளூர் அரசிற்கும் உள்ளது. ஆனால் இந்த கடமையைப் பகிர்வது என்பதால் எந்தவொரு அரசாங்கத்தையும் பொறுப்பிற்கு உள்ளாக்கப்படாமல் போகக் கூடும்.
  • இந்தச் சட்டம் பள்ளிக்கல்வி மற்றும் பள்ளி உள்கட்டமைப்புக்கான உரிமையை வழங்குகிறது, ஆனால் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு சரியான உத்தரவாதத்தை அளிப்பதில்லை.
  • அரசுப் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் அதற்கு எந்தவொரு விளைவுகளிலிருந்தும் விலக்கு அளிக்கப் படுன்றன.
  • இந்த சட்டம் பல்வேறு தரங்களின் அடிப்படையிலான கற்பித்தல் நடைமுறையை நியாயப் படுத்துகிறது.

 

கல்வி உரிமைச் சட்டம் – 2019

  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தம், 2019 ஆனது ஜனவரி 3, 2019 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
  • இது 2019 ஜனவரி 10 அன்று இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது.
  • பள்ளிகளில் அனைத்து வகுப்பிலும்  கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையை அகற்ற இந்தச் சட்டம் முயல்கிறது.
  • கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆனது  ஆரம்பக் கல்வி அதாவது 8 ஆம் வகுப்பு முடிக்கும் வரை குழந்தைகளின் தேர்ச்சியைத் தடுத்து வைப்பதைத்  தடை செய்கிறது.
  • ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளில் வழக்கமான தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடுவதற்காக 2019 சட்டமானது இந்த விதிமுறையைத் திருத்துகிறது.
  • ஒரு குழந்தை தேர்வில் தோல்வியடைந்தால், அவருக்கு கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு மறு தேர்வு நடத்தப்படும்.
  • மறு தேர்வில் ஒரு குழந்தை தோல்வியுற்றால், குழந்தையை அடுத்த வகுப்பிற்கு அனுப்பாமல் அதே வகுப்பில் தடுத்து வைக்க பள்ளிகளை அனுமதிக்க சம்பந்தப்பட்ட மத்திய அல்லது மாநில அரசு முடிவு செய்யலாம்.
  • கல்விக்கான தேசியக் கொள்கையை வகுப்பதற்கான டி.எஸ்.ஆர் சுப்பிரமணியக் குழுவும், 5-ஆம் வகுப்பிற்குப் பிறகு ‘கட்டாயத் தேர்ச்சி நிலை இல்லை’ என்றக் கொள்கையை நிறுத்த வேண்டும் என்றுப்  பரிந்துரைத்துள்ளது.

முடிவுரை 

  • சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, குழந்தைகளுக்குப்  பள்ளிக்  கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளித்தது.
  • RTE சட்டம் இப்போது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் இன்னும் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதன் மூலம் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதையும் அது உறுதிப்படுத்த வேண்டும்.
  • இந்தச் சட்டம் எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்களை அதன் அடுத்த பத்து ஆண்டுகளில் சமாளிக்க முடியும்.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்