TNPSC Thervupettagam

கல்வி, வேலைவாய்ப்பில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை

March 5 , 2019 2091 days 1160 0
  • அருணாசல பிரதேசத்தில் அம்மாநிலத்தவரல்லாத பழங்குடிகளுக்கு நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கும் முடிவுக்கு எதிராக வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, அந்நடவடிக்கையிலிருந்து பின்வாங்கியிருக்கிறது மாநில அரசு.
நிரந்தரக் குடியுரிமை
  • சாம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் வசிக்கும் தேவோரி, மிஷிங், சோனோவால், கச்சாரி உள்ளிட்ட ஆறு பழங்குடியினத்தவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு ‘இணை உயர் அதிகாரக் குழு’ உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக வெடித்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் வட கிழக்கு மாநிலங்களை அதிரவைத்தன.
  • அருணாசல பிரதேசத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ‘பிற பழங்குடிகளுக்கும்’ நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே ஆதரிக்கின்றன.
  • அருணாசல பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 26 பழங்குடிகளும் துணைப் பழங்குடிகளும் இந்த உரிமையை இப்போது அனுபவித்துவருகின்றனர். இந்நிலையில், ஆறு பழங்குடியினத்தவருக்கு நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ் கிடைப்பதன் மூலம் அவர்களுக்கு நில உரிமையும் கிடைத்துவிடும். இதை அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதன் காரணமாக, சமீபத்தில், தலைநகர் இடாநகரில் ஏற்பட்ட வன்முறைகளும் துணை முதல்வர் வீடு மீதான தாக்குதலும் மத்திய, மாநில அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கின்றன!
வட கிழக்கு மாநிலங்கள்
  • வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலத்தவர் தங்கள் பகுதிக்கு வருவதையோ வேலை செய்வதையோ சலுகைகள் பெறுவதையோ விரும்புவதில்லை.
  • ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளுமே வெவ்வேறு பழங்குடிகளுக்கு இடையேயும் இப்படி மோதல்கள் நடக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்கள், எண்ணிக்கைக் குறைவானவர்களை இரண்டாம்தரக் குடிகளாக நடத்தவிரும்புகிறார்கள். மிசோரத்தில் சக்மாக்களை ‘வெளியாட்கள்’ என்கின்றனர், மணிப்பூரிலேயே சமவெளியினருக்கும் மலைவாசிகளுக்கும் மோதல்கள் நிகழ்கின்றன. அசாமில் ‘வெளியாட்கள்’ பிரச்சினை அனேக ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த மோதல்கள் ஆயுதம் எடுத்துப் போராடும் போர்களாக மாறிவிடுவதால், இப்பிரச்சினைகளைக் கையாள்வது அரசுகளுக்குச் சவாலாகவே இருக்கிறது.
  • அருணாசல பிரதேசத்தில் எழுத்தறிவு அதிகம் என்றாலும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்பதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம். விவசாயம், தொழில் துறை வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. போக்குவரத்து வசதிகளும் குறைவு. இதுபோன்ற அதிருப்திகள் ஒன்று சேர்ந்து மக்களை அவ்வப்போது கொதிநிலைக்குக் கொண்டுசென்று விடுகின்றன. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், கல்வி வேலைவாய்ப்பில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேசமயம், உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் மிக அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்