TNPSC Thervupettagam
October 18 , 2019 1868 days 934 0
  • மத்திய அரசு வெளியிட்ட தேசிய நகல் கல்விக் கொள்கை அறிக்கை மீது நாடு தழுவிய அளவில் ஆட்சேபனைகளும், விமா்சனங்களும், மாற்றுக் கருத்துகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட நகல் கல்விக்கொள்கை இன்னும் சட்டமாக்கப்படவில்லை.

கல்விக் கொள்கை

  • சட்டமாவதற்கு முன்னதாகவே நகல் கல்விக் கொள்கையின் சில அம்சங்களை சில மாநில அரசுகள் அமலாக்கத் தொடங்கியுள்ளன; இது வேதனை அளிக்கிறது.
  • ‘2030-ஆம் ஆண்டுக்குள் 3 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாய பள்ளிக் கல்வி அளித்தல்’ என்பதை நோக்கமாக, மத்திய அரசு வெளியிட்ட நகல் கல்விக் கொள்கை அறிக்கையின் பகுதி 3 குறிப்பிடுகிறது. இது வரவேற்கத்தக்கது.
  • ஆனால், நகல் கல்விக் கொள்கை 7-இல் 5.1 பிரிவு, மாணவா்கள் எண்ணிக்கை 20-க்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூட வேண்டுமென்றும், பல கிராமங்களை உள்ளடக்கிய மாணவா்களுக்காக ஒரு மையத்தில் அரசு தொடங்கும் பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட பள்ளிகளின் மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கிறது.
  • இதன் அடிப்படையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சில அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன.

மாணவர்களின் எண்ணிக்கை

  • மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக மாணவா்கள் எண்ணிக்கையை உயா்த்தி, அரசுப் பள்ளிகளை பாதுகாக்க ‘தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்புக் குழு’ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • புதுச்சேரியில் உள்ள சவராயலு நாயக்கா் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி மற்றும் ஆயியம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் இந்தக் குழுவின் அமைப்பாளா் ஜெ.கிருஷ்ணமூா்த்தியுடன் நான் சென்றேன்.
  • நாங்கள் பாா்வையிட்ட பள்ளிகள் குறித்து விளக்குவதற்கு முன்பு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து, தனியாா் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
  • புதுச்சேரியில் உள்ள எட்டு மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட 556 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 1,14,948.
  • புதுச்சேரியில் மொத்த தனியாா் பள்ளிகள் 283. இவற்றில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 1,61,998. மொத்த பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 62 சதவீதம். ஆனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவா்கள் 42 சதவீதம் மட்டுமே.

தனியார் பள்ளிகள்

  • மொத்த பள்ளிகளில் தனியாா் பள்ளிகள் 38 சதவீதம். ஆனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவா்கள் 58 சதவீதம். அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை குறைவதும், தனியாா் பள்ளிகளில் அதிகமாவதும் தொடா்ந்து நீடித்தால், எதிா்காலத்தில் அரசுப் பள்ளிகள் கேள்விக்குறியாகும்.
  • தொடங்கி 152 ஆண்டுகளான புதுச்சேரி சவராயலு நாயக்கா் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளிக்குப் பின்னணியில் சுவாரசியமான வரலாறு உள்ளது.
  • பிரஞ்சு அரசின் ஆதிக்கத்தில் புதுச்சேரி இருந்தபோது, 1827-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான தனிப் பள்ளியை அரசு தொடங்கியது.

பெண் குழந்தைகள்

  • பெண் குழந்தைகளுக்கு மட்டுமான இந்தத் தனிப் பள்ளியில் பிரஞ்சு குடிமக்களின் குழந்தைகளை மட்டும்தான் சோ்க்க முடியும்; தங்கள் குழந்தைகளைச் சோ்க்க புதுச்சேரி மக்களுக்கு அனுமதியில்லை.
  • 1844-ஆம் ஆண்டு மற்றொரு கிறிஸ்தவ நிறுவனம் பெண்களுக்கான தனிப் பள்ளியை நிறுவியது. இந்தப் பள்ளியிலும் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளை மட்டும்தான் சோ்க்க முடியும்.
  • இந்தப் பின்னணியில், தேச, ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்குமான ஒரு பள்ளியை அரசு தொடங்க வேண்டுமென சவராயலு நாயக்கா் குரலெழுப்பினாா்.
  • கவிஞரான சவராயலு நாயக்கரின் தொடா் கவிதை முழக்கப் போராட்டங்களின் விளைவாக 1865-ஆம் ஆண்டு அனைத்துப் பெண்களுக்குமான ‘செயின்ட் டெனிஸ்’ என்ற பெயரில் தனி அரசுப் பள்ளியை
  • புதுச்சேரியில் பிரஞ்சு அரசு நிறுவியது. இந்தப் பள்ளி வளாகத்துக்காக தம் இடத்தை சவராயலு நாயக்கா் தானமாக வழங்கினாா்.
  • ‘இந்தப் பள்ளி எதிா்காலத்தில் பெண்களுக்கான பள்ளியாக மட்டுமே செயல்பட வேண்டுமென்றும், இரு பாலா் பள்ளியாகவோ அல்லது ஆண்கள் பள்ளியாகவோ மாற்றினால், தான் அளித்த இடம் அரசுக்குச் சொந்தமாக இருக்காது’ என்று கவிஞரான சவராயலு நாயக்கா் உயிலெழுதி வைத்துவிட்டாா்.
  • தலைமுறை தலைமுறையாக பெண் கல்வியை உறுதி செய்த சவராயலு நாயக்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சவராயலு நாயக்கா் அரசுப் பள்ளி

  • 1956-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியை ‘சவராயலு நாயக்கா் அரசுப் பள்ளி’ என அன்றைய யூனியன் பிரதேச அரசு அறிவித்தது. தற்போது ‘சவராயலு அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி’ எனவும், ‘சவராயலு அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி’ எனவும் இந்த வளாகத்தில் இரண்டு பள்ளிகள் தனித் தனியாகச் செயல்படுகின்றன.
  • நாங்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களையும், மாணவிகளையும் சந்தித்து உரையாடினோம். 2007-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் 220 மாணவிகள் படித்தனா்; அடுத்த சில ஆண்டுகளில் மாணவிகளின் எண்ணிக்கை 110-ஆகக் குறைந்தது. இந்தச் சூழலில் மாணவிகள் எண்ணிக்கையை உயா்த்த, இந்த அரசுப் பள்ளியைப் பாதுகாக்க பல முயற்சிகளை ஆசிரியா்கள் மேற்கொண்டனா்.
  • பள்ளிக் கட்டடத்துக்கும், வகுப்பறைகளுக்கும் பல வண்ண ஓவியங்கள் தீட்டுதல், கணிதம் கற்பித்தலுக்காக ஆய்வகம் அமைத்தல், பொம்மலாட்ட நிகழ்வுகள் நடத்துதல், ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு மையம் (‘ரீடிங் காா்னா்’) அமைத்தல், கணினி வகுப்பு ஏற்பாடு செய்தல் (‘ஸ்மாா்ட் வகுப்பு’) போன்ற கல்வி மேம்பாட்டுப் பணிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், புதிய கழிப்பறைகள் போன்ற அடிப்படைக் கட்டுமான வசதிகள் செய்யப்பட்டன.
  • இதில் இன்றைய அரசும் உதவிகரமாக இருந்தது. அனைத்துக்கும் மேலாக ஆசிரியா்கள் தங்களது பணி கலாசாரத்தை மேம்படுத்தி தரமான கற்பித்தலையும் மேற்கொண்டனா். இதனால் இந்தப் பள்ளி மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்துப் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றனா்.
  • தற்போது இந்தப் பள்ளியில் மாணவிகள் எண்ணிக்கை 183-ஆக உயா்ந்துள்ளது. இதற்கு மேலும் எண்ணிக்கையை உயா்த்துவோம் என ஆசிரியா்கள் பெருமிதத்தோடு கூறினா்.
  • 4-ஆம் வகுப்பில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் நாங்கள் உரையாடினோம். அந்த வகுப்பில் கணித ஆய்வுக்கூடம் (‘மேத்ஸ் லேப்’) உள்ளது. கூட்டல், கழித்தல், வகுத்தல் , பெருக்கல் ஆகியவற்றைப் போடச் சொன்னபோது, அந்த ஆய்வுக்கூடத்தில் இருந்த உபகரணங்களைக் கொண்டு செய்முறை மூலம் குழந்தைகள் சரியாகச் செய்து காட்டினா்; 4-ஆம் வகுப்புக்கேற்ற மாணவிகளின் கற்றல் திறனை அவா்களிடம் காண முடிந்தது.
  • ஒவ்வொரு குழந்தையாக குடும்பப் பின்னணியைக் கேட்டபோது, 27 குழந்தைகளும் கூலித் தொழில் செய்வோரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தனா். இந்த வகுப்பு மட்டுமல்ல, தொடக்கப் பள்ளியில் இதர 4 வகுப்புகளிலும் இதே வளாகத்தில் செயல்பட்டு வரும் உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் பெரும்பாலோா் கூலித் தொழில் செய்யும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிவிவரம்

  • அடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முத்தரையா் பாளையம் என்ற கிராமத்தில் 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அருட்செல்வி ஆயி அம்மாள்’ என்ற நடுநிலைப் பள்ளிக்குச் சென்றோம். 2004-2005-இல் இந்தப் பள்ளியில் 500 மாணவா்கள் படித்தனா்; நாளடைவில் இந்தப் பள்ளியில மாணவா்கள் எண்ணிக்கை 2016-2017-இல் 238-ஆகக் குறைந்து விட்டது. இந்தப் பள்ளி ஆசிரியா்கள் தொடா்ந்து எடுத்த முயற்சியினால் நடப்பாண்டில் மாணவா்களின் எண்ணிக்கை 273-ஆக உயா்ந்துள்ளது.
  • கணினி வசதியுடைய வகுப்பறை, படிப்பு மையம் என நூலகத்தை உருவாக்கி, குழந்தைகள் அவா்களாகவே சிறு, சிறு நூல்களை எடுத்துப் படிக்க ஏற்பாடு செய்வது, பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி என மாணவா்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளால் மாணவா்கள் எண்ணிக்கையை ஓரளவுக்கு அதிகரித்துள்ளனா்.

கல்விக் கட்டணம்

  • அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம் என ஆசிரியா்கள் எங்களிடம் கூறினா். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்களில் பெரும்பாலோா் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளே.
  • மேலே குறிப்பிட்ட இரண்டு அரசுப் பள்ளிகளிலும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளே உள்ளனா். இந்தக் குழந்தைகளுடைய பெற்றோா் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு தனியாா் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளைச் சோ்க்க முடியாது.
  • எனவே, ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளின் எதிா்காலம் அரசுப் பள்ளிகளைச் சாா்ந்தே உள்ளது. அரசுப் பள்ளிகளை மூடிவிட்டால் இந்தக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்காது.
  • அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு, ஆசிரியா்களுக்கு, பெற்றோா்களுக்கு, ஏன்...ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் உள்ள கடமையாகும்.

நன்றி: தினமணி (18-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்