TNPSC Thervupettagam

களவாடப்பட்ட கலைப்பொருள்கள் குறித்த தலையங்கம்

March 27 , 2022 863 days 439 0
  • நமது நாட்டின் விலைமதிப்பில்லாத பல கலைச்செல்வங்கள், கடத்தல்காரர்களால் கொண்டு செல்லப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
  • அந்த நாடு நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியாவின் சில கலைப்பொருள்களை விடுவித்திருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு திருப்பித் தந்திருக்கும் 29 அரிய கலைப்பொக்கிஷங்களில் பல 9-10 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை
  • கருங்கல், பளிங்குக் கல் சிலைகளாகவும், வெண்கலம், பஞ்சலோகம், பித்தளையில் செய்யப்பட்டவையுமான அந்தக் கலைப்பொருள்கள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து களவாடிச் செல்லப்பட்டவை.
  • நரேந்திர மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், கடந்த ஏழரை ஆண்டுகளாகக் காட்டிவரும் முனைப்பால், களவாடிச் செல்லப்பட்ட கலைப்பொருள்கள் தாயகம் திரும்புகின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • உலகில் மிகப் பழைமையான, உன்னதமான நாகரிகமாகத் திகழும் இந்தியா, இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பியர்களால் அடிமைப்படுத்தப்பட்டது முதல் தொடங்குகிறது, நமது கலைப்பொருள்களைக் கடத்தும் முனைப்பு.
  • அதற்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் படையெடுப்பாளர்கள் பல கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி, அவற்றிலிருந்த அற்புதமான சிலைகளையும், தெய்வத் திருவுருவங்களையும் அழித்து விட்டிருந்தனர். கடத்தல்காரர்களின் கண்களில் சிக்கிக் கடத்தப்படாமல் தப்பியவைதான் இப்போது நம்மிடம் இருக்கின்றன.
  • நமது பண்பாட்டு விழுமியங்களாக பல அற்புதக் கலைப்பொருள்கள், இந்தியாவுக்கு வெளியே காணப்படுகின்றன என்பதே நமக்கு மிகப் பெரிய அவமானம். நமது வழிபாட்டு விக்கிரங்கள் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருப்பதும், தனியார் நிறுவனங்களால் ஏலம் விடப்படுவதும், ஒவ்வொரு இந்தியருக்கும் தலைகுனிவு ஏற்படுத்தும் இழுக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
  • களவாடிச் செல்லப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான ஹனுமான் விக்கிரகமொன்று நியூயார்க்கிலுள்ள பிரபல கலைப்பொருள்கள் விற்பனை நிறுவனமான கிரிஸ்டியானில் சென்ற மாதம் ஏலம் விடப்பட்டது. ஆஸ்திரேலியர் ஒருவர் அதை 37,500 டாலருக்கு ஏலத்தில் எடுத்திருந்தார். நல்ல வேளையாக தமிழகக் காவல்துறையினர் கவனத்தை அது ஈர்த்ததால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த விக்கிரகம் மீட்கப்பட்டிருக்கிறது.
  • சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 248 கலைப்பொருள்களை அமெரிக்கா நம்மிடம் திருப்பி ஒப்படைத்திருக்கிறது. அவற்றில் ஒன்றான 12ஆம் நூற்றாண்டு வெண்கல நடராஜர் சிலையின் மதிப்பு ஒன்றரைக் கோடி டாலர் என்று மதிப்பிடப்படுகிறது. 
  • 2021 ஜூலை மாதம், ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்த சில கலைப்பொருள்கள் நம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. ஆசிய கலைத்தொகுப்பு என்கிற பிரிவில் காணப்பட்ட எட்டு சிலைகளும், ஆறு ஓவியங்களும் இந்தியாவிலிருந்து களவாடி கடத்தப்பட்டன என்பதை நமது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து அவற்றை மீட்டு வந்தனர்.
  • இங்கிருந்து விக்கிரங்களையும், கலைப்பொருள்களையும் காலனிய ஆட்சியில் கடத்திச் சென்றதை நம்மால் தடுத்திருக்கவோ தவிர்த்திருக்கவோ முடியாது. ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அது தொடர்ந்தது என்பதுதான் நமக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. அதுவும் இந்தியர்களே சிலைகளைக் கடத்துவதில் ஈடுபடுகிறார்கள் என்றால் என்ன சொல்வது
  • சுபாஷ் கபூர் என்கிற சிலைக் கடத்தல் மன்னன், இந்திய சிறைச்சாலையில் இருக்கிறார். 2011க்கும் 2020க்கும் இடையில் மட்டும் 14.3 கோடி டாலர் மதிப்பில் 2,500க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருள்களை இந்தியாவிலிருந்து கடத்தி, சர்வதேசச் சந்தையில் சுபாஷ் கபூர் விற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
  • இந்தியாவின் மிக முக்கியமான கலைப்பொருள்கள், இன்னும்கூட வெளிநாட்டு அருங்காட்சியகங்களில்தான் காணக்கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, சுமார் 200 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியர்களிடம்தான் பெரும்பாலானவை இருக்கின்றன. 105.6 கேரட் எடையுள்ள நமது கோஹினூர் வைரம், இப்போது பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதை அவர்கள் தந்துவிடவா போகிறார்கள்?
  • அற்புதமான அமராவதி புத்தர் சிலை லண்டனில் இருக்கிறது. திப்பு சுல்தான் தனது பொக்கிஷமாகப் பாதுகாத்த மரத்தாலான புலியை, அவரது தோல்வியைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ராணுவத்தினர் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
  • இதுபோன்ற பல இந்திய கலைப்பொருள்கள், லண்டனிலுள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உங்களைவிட நாங்கள் நன்றாகவும், பாதுகாப்பாகவும் அந்தக் கலைப்பொருள்களை வைத்திருக்கிறோம் என்கிற வாதம், நம்மை மேலும் காயப்படுத்துவதாகவும், ஏளனம் செய்வதாகவும் இருக்கிறது.
  • இன்னொரு நாட்டுக்குச் சொந்தமான, களவாடப்பட்ட கலைப்பொருள்களை அந்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 1972-ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தும் என்ன பயன்? நமது கோயில் விக்கிரகங்கள் அந்நிய நாடுகளில் கலைப்பொருள்களாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அவலம் இனியும் தொடரலாகாது!

நன்றி: தினமணி (27 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்