TNPSC Thervupettagam

கள்ளச்சாராயம்: உயிர்ப்பலி தொடரக் கூடாது

May 16 , 2023 559 days 328 0
  • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், மே 13 அன்று கள்ளச்சாராயம் அருந்திய சிலர் மயங்கி விழுந்ததால் அருகில் இருந்த அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
  • அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களில், மே 12 அன்று இரண்டு நபர்களும் மே 14 அன்று ஒரு தம்பதியும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அமரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அருகில் உள்ள புதுச்சேரியிலிருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கொண்டுவரப்படுகின்றன. கூடவே, இந்தப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துவருகிறது. இந்தக் குற்ற வலைப்பின்னலில் தொடர்புடையோர் கைது செய்யப்படும்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் சிலர், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக மரக்காணம் பகுதி காவல் துறையைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
  • இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், மரக்காணம் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்த நிலையில், அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியிருப்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.
  • கள்ளச்சாராயத்தின் ஊடுருவலைத் தடுக்கத் தவறிய அரசு, அதை அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறது. விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவது அவசியம். ஆனால், கள்ளச்சாராயத்தின் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், அதை வேண்டுமென்றே அருந்தி இறந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகையை அளிப்பது குறித்து எழுந்திருக்கும் விமர்சனங்கள் நியாயமானவை.
  • போதைப் பொருள்களை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையாக, கடந்த ஆண்டு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும் ஒன்றாக இணைத்து ‘அமலாக்கப் பணியகம் - குற்றப் புலனாய்வுத் துறை’ என்னும் தனிப் பிரிவை அரசு உருவாக்கியது. இதனால் கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
  • மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என மதுவிலக்கை அமல்படுத்த விரும்பாத அரசுகள், காலம் காலமாக முன்வைக்கும் வலுவற்ற வாதத்தை, இப்போதைய அரசும் சொல்லத் துணிந்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தும் திறமை இந்த அரசுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடும். டாஸ்மாக் மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்கவோ கள்ளச்சாராயத்தைத் தடுத்து நிறுத்தவோ திராணி இல்லாத அரசு என்ற விமர்சனத்துக்கு ஒருபோதும் இடம்கொடுத்துவிடக் கூடாது.

நன்றி: தி இந்து (16 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்