TNPSC Thervupettagam

கள ஆய்வில் கவனம் தேவை

December 1 , 2023 406 days 275 0
  • தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நகரப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசின் திட்டத்தின்படி கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்களிடம் சேகரிக்கப்படும் விவரங்கள் தொடர்பான விவகாரம் சர்ச்சையாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசு சார்பில் இதுபோன்று மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும் கிடைக்கும் தரவுகளும் திட்டம் தொய்வில்லாமல் தொடர உதவும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • தமிழ்நாட்டில் 2021இல் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது; பின்னர் ‘விடியல் பயணம்’ என்று இத்திட்டம் பெயர் மாற்றப்பட்டது. விளிம்புநிலையில் உள்ள பெண்கள் தொடங்கி தினசரி வேலைக்கு, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் வரை இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்றுவருகிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கட்டணமில்லாப் பேருந்துகளில் மகளிர் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 311.61 கோடி என்று அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்துக்காக 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.2,800 கோடியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
  • பெண்களின் சுய மேம்பாட்டுக்கு உதவும் இத்திட்டம், ஓர் ஆக்கபூர்வ முன்னெடுப்பு என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் கட்டணமில்லாப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் பெயர், சாதி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்துள்ளார்.
  • அரசின் எந்தத் திட்டமாக இருந்தாலும், அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றிகரமாகச் செயல்படுவதை அறிந்துகொள்ளவும், தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்படுத்தவும் மேலும் விரிவுப்படுத்தவும் அரசு செய்ய வேண்டிய பணிகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை குறித்து அறிந்துகொள்வதற்காகவும் நடத்தப்படும் ஆய்வுகள் அரசு நிர்வாகம் சார்ந்தவை. அரசு செயல்படுத்திய திட்டம் பயனாளிகளின் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, திட்டத்தினால்பயனாளிகளுக்கு ஏற்பட்ட அனுகூலம், குறைகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களைத் திரட்டுவது சமூகரீதியான ஆய்வு. இதில் கிடைக்கும் தரவுகள்திட்டத்தை இன்னும் செம்மைப்படுத்தவும் விரிவுப்படுத்தவும் அரசுக்கு உதவும்.
  • எனவே, கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் ஆய்வு, அரசுக்குத் தேவையான ஒன்றே. மக்கள் நலன்சார்ந்த எல்லாத் திட்டங்களிலும் மத்திய-மாநில அரசுகள் இதுபோன்று ஆய்வுகள் மேற்கொள்வது நடைமுறை. இதில் குறை காண ஏதும் இல்லை. ஆனால், சாதி,தொலைபேசி எண் போன்ற விவரங்களைப் பெண் பயணிகளிடம் பேருந்தில் கேட்கும்போதும் அது சிலருக்குத் தர்மசங்கடத்தை உண்டாக்கலாம். எனவே, கேள்விகளை முறையாகக் கேட்பதற்கான சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
  • அதேநேரத்தில், தகவல் திருட்டு இன்று அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இச்சூழலில் நடத்துநர்கள் மூலம் திரட்டப்படும் தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த கேள்விகளில் நியாயம் இருக்கிறது. குறிப்பாக, பெண்களின் விவரங்களைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும். இதற்கு அரசு தகுந்த வழிகளைக் கைகொள்ளும் என நம்புவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்