கழிப்பறையில் ஒளிந்திருக்கும் கேமரா
- நிறைய பெண்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவே பார்ப்பார்கள். அவர்களில் பலருக்குச் சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாத ஒரு பலவீனம் இருக்கும். அதைப் பெரும்பாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். என் தோழி ஒருத்தி பயணம் செய்யும்போது டயபர் உபயோகித்துக்கொள்வாள். அவளுக்குச் சிறுநீரகம் சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது எதற்காகப் பயணங்களில் டயபர் உபயோகிக்கிறாள் என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னதைக் கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
- அவள் ஒருமுறை பெட்ரோல் பங்கில் இருந்த கழிப் பறையை உபயோகித்துக் கொண்டிருக்கும்போது அங்கே மேலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாகச் சில்லுகளின் நடுவே ஒரு கேமரா தன்னைப் படம் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததாகச் சொன்னாள். உடனே, வெளியே இருந்த அவளுடைய கணவர் எட்டிப் பார்த்தபோது அங்கே அப்படி ஒரு கேமராவும் இல்லை, யாரும் இல்லை. அவளுடைய கணவரே அவள் ஏதோ மனபிரமையில் இருந்திருக்கக்கூடும் என்று இரண்டு, மூன்று தடவை சொன்னபோது அவளுடைய மனம் கனத்துப்போனது என்று என்னிடம் பகிர்ந்துகொண்டாள்.
மனதை உலுக்கிய காட்சி
- நம் சமூகத்தில் பெண்களின் கழிப்பறைகளும் அது சார்ந்த பிரச்சினைகளும் பற்றிப் பல மணி நேரம் இடைவிடாமல் பேசி கின்னஸ் சாதனைகள் படைக்க முடியும். பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு பொதுச் சபையில் சொல்வதையே மிகப்பெரிய சுதந்திரமாகக் கருதக்கூடிய மனிதர்கள் இருக்கும் இடம்தான் இது. பல அலுவலகங்களில் பெண்களின் கழிப்பறைகளில் அவர்கள் சானிட்டரி நாப்கின்களைப் போடு வதற்குகூட ஒரு குப்பைக்கூடை இருப்பதில்லை. சமீபத்தில் வெளியான ஒரு மலையாளப் படத்தில் தையலகத்தில் வேலை பார்க்கும் பெண் தன்னுடைய சிறுநீர் உந்துதலை ஒரு குடிநீர் பாட்டிலுக்குள் அடைப்பதைப் போன்ற ஒரு காட்சி வரும். அது எவ்வளவு துயரம் நிறைந்த காட்சி. அப்படியான ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ வேண்டிய நிர்ப்பந் தத்தில் இருக்கிறோம். ஒரு பெண்ணின் உடலுக்கான வெளி என்பதே இங்கே முற்றிலுமாக இல்லை. அல்லது இருப்பதுபோல் தோற்றமளிக்கிறது.
- சென்னையில் பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் இருக்கக் கூடிய பல மீனவப் பெண்கள் வீட்டில் கழிப்பறைகள் இல்லாத தால் இருட்டில் மட்டுமே தங்களு டைய இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாலைக்கு மேல்தான் சாப்பிடு கிறார்கள். ஓர் ஆவணப் படத்திற்காக நான் அவர்களை அணுகியபோது அவர்கள் மிகுந்த கூச்சத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் இது. அரசு கழிப்பறைகள் சார்ந்த பெண்களின் மனச் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் முறைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
ரகசிய கண்கள்
- இது ஒருபக்கம் இருக்க, பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுப்பது இப்போதெல்லாம் பெருகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வாரம் நான் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது இரண்டு, மூன்று இருக்கைகள் தாண்டி உட்கார்ந்திருந்த ஒரு நபர் தன்னுடைய அலைபேசியில் என் பக்கத்தில் இருந்த பெண்ணை படம் எடுப்பது எனக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
- நான் எதையுமே பார்க்காதது போல எழுந்து அவரைக் கடந்து சென்றபோது அவர் தனது மொபைல் கேமராவால் அந்தப் பெண்ணை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் இருந்து அந்த அலைபேசியைச் சட்டெனப் பறித்துக்கொண்டேன். அவர் ஏதோ நான் செல்போனைத் திருடுவது போலக் கத்த ஆரம் பித்தார். ஆனால், அவர் என்ன காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார் என்பதை நான் சொன்னேன். அங்கு இருந்த ரயில்வே கண்காணிப்பாளர் அந்தக் காட்சிகளைப் பார்த்து அவற்றை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்யச் சொன்னார். குற்றமிழைத்த நபருக்கு டெலிட் செய்வதை மீறி வேறொரு தண்டனை கிடைக்கக்கூடிய வாய்ப்பு சத்தியமாக இல்லை. ஒருவேளை நான் செல்போனைப் பறித்து விஷயத்தைச் சொல்லி யிருக்காவிட்டால் அவர் அதை ஏதாவது ஒரு போர்னோகிராபி தளத்தில் பதிவிட்டு இருக்கக்கூடிய சாத்தியம் அதிகம்.
- இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் சிறிய வயதிலேயே போர்னோகிராபி தளங்களை மிகச் சுலபமாக தங்களது செல்பேசி வழியாகக் காணக் கிடைக்கின்றன. இது எவ்வளவு பெரிய பாதிப்பை மனங்களில் ஏற்படுத்துகிறது என்பதை உளவியல் நிபுணர்களின் ஆலோசனையோடு போர்னோகிராபி தளங்களை முற்றிலுமாக ஒழிக்கும் சட்டங்களை அரசு இயற்ற வேண்டும். பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் ஆர்வம் கொண்ட ஒரு கூட்டத்தின் நடுவே ஆடைகள் புனைந்தும் என்ன பயன்? பள்ளிக் காலம் முதலே பாலியல் பேதம் பற்றிய புரிதலைக் கல்வி உருவாக்குமானால் இத்தகைய ரகசியத் தேடல்களுக்கு இடமிருக்காது.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2024)