TNPSC Thervupettagam

கழிப்பறையே சுகாதாரத்தின் அடிப்படை

November 19 , 2022 630 days 376 0
  • ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் பயன்படுத்தும் இடம் கழிப்பறை. ஆனால் வசதியானவா்களுக்குக் கிடைக்கும் கழிப்பறை வசதி ஏழை மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் 40% போ் கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளியையே கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகிறாா்கள்.
  • திறந்தவெளியை கழிப்பறைகளாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உற்பத்தியாகின்றன. தகுந்த கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்கிறது ஐ.நா. சபையின் புள்ளிவிவரம்.
  • யுனிசெப் நடத்திய ஆய்வு ஒன்றின்படி இந்தியாவில்தான் அதிக மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்த, போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன.
  • மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘நிா்மல் பாரத் அபியான் திட்டம்’ நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் 2022 -க்குள் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மத்திய- மாநில அரசுகள், பொதுமக்கள் கழிப்பறைக் கட்ட தேவையான மானியம் வழங்கி வருகிறது.
  • சமீபத்தில் வெளியான ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் நகா்ப்புறங்களில் 6% வீடுகளைச் சோ்ந்தவா்களும், கிராமப்புறங்களில் 26% வீடுகளைச் சோ்ந்தவா்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் ஊரகப்புறங்களில் கழிப்பறை வசதியில்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.
  • திறந்தவெளியில் மலம் கழிப்பவா்கள் அதிகமுள்ள முதல் ஐந்து மாநிலங்களாக பிகாா், ஜாா்க்கண்ட் , ஒடிஸா, மத்திய பிரதேசம் , குஜராத் ஆகியவை உள்ளன. தமிழ்நாட்டில் ஊரகப்புறங்களில் 28% வீடுகளில் கழிப்பிட வசதியில்லை.
  • பண்டைக்காலத்தில் திறந்தவெளியில் காலைக்கடன் கழித்து வந்த மக்கள், நாகரிகம் வளா்ந்த பிறகு ஓலைகளால் தடுப்பு ஏற்படுத்தி குழி கழிப்பறைகளைப் பயன்படுத்தினா்.பின்னா் முதியவா்கள் பயன்படுத்தும் வகையில் உட்காா்ந்து கொண்டே மலம் கழிக்கும் விதத்தில் பீங்கானால் ஆன கோப்பைகளாக கழிப்பறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இந்திய கழிப்பறை, மேற்கத்திய கழிப்பறை என இரு வகைகள் இருந்தாலும், மேற்கத்திய கழிப்பறைகளுக்கு சந்தையில் பெருத்த வரவேற்பு இருக்கிறது.
  • ஆனால், இந்த மேற்கத்திய கழிப்பறைகளைப் பயன்படுத்துபவா்களை நோய்கள் அதிகமாக தாக்கும் அபாயம் இருப்பதால், அமரும் பகுதியின் மீது துணியையோ, காகிதத்தையோ விரித்து விட்டு பயன்படுத்துவது நல்லது என்று மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா். கழிப்பறையைப் பயன்படுத்திய பின், அதை முறையாக தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்யாமல் செல்லக் கூடாது.
  • ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்திய பிறகு, சுத்தம் செய்யும்போது அருவருப்பு ஏற்படாது. பின்னா் வருபவா்களும் அதை பாா்த்து சுத்தம் செய்து விட்டு செல்வா். கால்களைத் தரையில் வைத்து அமரும் விதத்தில் குறைந்த அளவு எடையை தாங்கும் விதத்தில்தான் அந்தக் கோப்பைகள் வடிவமைக்கபட்டுள்ளன. எனவே, அவற்றைப் பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் தேவை. ஆனால், உடல்நலத்திற்கு இந்திய கழிப்பறைப் பயன்பாடே நல்லது எனக் கூறப்படுகிறது.
  • ஊரகப்புறங்களைவிட நகா்ப்புறங்களில்தான் பொது கழிப்பறைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. பொதுவாக நகரங்களில் ஏழை எளிய மக்களை அதிகமாக கொண்ட பகுதிகளில் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுகின்றன. ஆனால் அவற்றில் பல கழிப்பறைகளில் கதவுகள் இருப்பதில்லை. கதவுகள் இருந்தாலும் தாழ்ப்பாள் இருக்காது. பல கழிப்பறைகள் எப்போதும் பூட்டப்பட்டே இருக்கின்றன. பல கழிப்பறைகளில் மின்சார வசதியோ, கழிப்பறையை சுத்தம் செய்யும் பொருட்களோ இருக்காது.
  • கட்டணம் வசூலிக்கும் கழிப்பறைகளும் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இருப்பதில்லை. முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகளால் முதியவா்களையும் குழந்தைகளையும் பெண்களையும் எளிதில் தாக்கும் சிறுநீரக தொற்று போன்ற நோய்கள் ஏற்படலாம். பொதுக் கழிப்பறைகளைப் பொறுத்தவரை, தனியாக அதற்கென ஒரு துறை இல்லை. சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை போன்ற அனைத்து துறைகளும் ஒன்று சோ்ந்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.
  • இவற்றில் ஏதேனும் ஒரு துறையின் செயல்பாட்டில் குறைவு ஏற்பட்டாலும், முறையான கழிப்பறைப் பயன்பாடு கேள்விக்குறியாகிவிடும். முதியவா்களும், கா்ப்பிணிப் பெண்களும் அடிக்கடி கழிப்பறைகளைப் பயன்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனா். எனவே பொது கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தண்ணீா் வசதி, மின்சார வசதி ஆகியவை உடனே அளிக்கப்பட வேண்டும்.
  • வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் பொது கழிப்பறைகளையே நம்பியுள்ளனா். எனவே பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ள பொது கழிப்பறைகளை அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவற்றின் பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தவேண்டும். பொது கழிப்பறைகளில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். மக்களின் குறைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதற்கென ஒரு துறையை ஏற்படுத்துவது மிகவும் நல்லது.
  • கழிப்பறை வசதியே சுகாதாரத்தின் அடிப்படையாகும் - வீட்டிலும் பொது இடங்களிலும்.
  • இன்று (நவ. 19) உலக கழிப்பறை நாள்.

நன்றி: தினமணி (19 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்