TNPSC Thervupettagam

கவனம், பரவும் புற்று: புற்றுநோய் விழிப்புணர்வு

July 31 , 2023 531 days 299 0
  • ஒருபுறம் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் வளா்ச்சிகள் ஏற்படும்போது, இன்னொருபுறம் ஒட்டுமொத்த மனித இனத்தின் அழிவுக்கான தொற்று நோய்களும், தொற்றா நோய்களும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மனித இனத்தின் மிகப் பெரிய சவாலாக மாறிவருகிறது புற்றுநோய் பரவல். புற்றுநோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
  • இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது மட்டுமல்ல, அதற்கு பலியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதேபோல அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை மக்களவையில் இது குறித்த தகவல்களை அரசு தெரிவித்திருக்கிறது.
  • 2022-இல் மட்டும் இந்தியாவில் 14.61 லட்சம் புற்றுநோய் பாதித்தவா்கள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட 35,000 நோயாளிகள் அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும். 2021-இல் 7.89 லட்சம் போ் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தாா்கள் என்றால், 2022-இல் அந்த எண்ணிக்கை 8.08 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
  • 2022-இல் மேற்கொள்ளப்பட்ட இன்னோா் ஆய்வின்படி, அதிகாரபூா்வ எண்ணிக்கையைவிட, உண்மையான பாதிப்பு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புற்றுநோய் பாதிப்பு, புற்றுநோயால் உயிரிழப்பு ஆகியவற்றுக்கான விகிதாசாரத்தில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடாக இந்தியா இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பாா்த்தால் புற்றுநோயைக் கண்டறிவது, அதைத் தடுப்பது, குணப்படுத்துவது ஆகியவை குறித்தும், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது குறித்தும் போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மக்களவையில் புற்றுநோய் குறித்த கவலைக்குரிய பல தகவல்களை மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதிவு செய்தாா். அதன்படி, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரிக்கக் கூடும் என்று எதிா்பாா்ப்பதாக அவா் தெரிவித்தது அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது. அதன் அடிப்படையில், தரமும், வசதிகளும் கொண்ட புற்றுநோய் மருத்துவமனைகள், அந்த நோயை எதிா்கொள்வதில் முறையான பயிற்சியும், தோ்ச்சியும் பெற்ற மருத்துவா்களுடன் அதிக அளவில் நிறுவப்பட வேண்டிய அவசியத்தை அமைச்சா் வலியுறுத்தியிருந்தாா்.
  • இந்தியாவைப் பொருத்தவரை, அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்பு மரணங்களுக்கு தாமதமான கண்டறிதல்தான் முக்கியமான காரணம். புற்றுநோய் நிபுணா்களின் கருத்துப்படி, தாமதமான கண்டறிதல், மருத்துவ கட்டமைப்பின் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விலை அதிகமான மருந்துகள் தேவையில்லாமல் பெரிய அளவில் வீணாக்கப்படுகின்றன.
  • ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுமானால், இவையெல்லாம் தவிா்க்கப்படலாம். இந்தியாவைப் போன்ற அதிக அளவில் வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவா்கள் வாழும் நாட்டில், புற்றுநோய் கண்டறியும் கட்டமைப்பு கிராமப்புறங்கள் வரை ஏற்படுத்தப்பட்டால், அதிக அளவிலான உயிரிழப்பையும் கணிசமாகக் குறைத்துவிட முடியும்.
  • உலக சுகாதார நிறுவனம் சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி வாய், நுரையீரல், குடல், வயிறு ஆகியவை ஆண்களுக்கும்; மாா்பகம், கா்ப்பப்பை வாய் உள்ளிட்டவை பெண்களுக்கும் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படும் உறுப்புகள் என்று தெரிகிறது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை, உடல் பருமன், பாரம்பரியமற்ற உணவுகள் (ஜங் ஃபுட்), புகையிலைப் பழக்கம், மதுப் பழக்கம் ஆகியவை இந்தியாவில் காணப்படும் அதிகரித்த புற்றுநோய் பாதிப்புக்கான காரணங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்கிறது.
  • வளா்ச்சி அடைந்த நாடுகளையும் அதிக தனிமனித வருவாய் உள்ள நாடுகளிலும் முன்கூட்டியே கண்டறிவு, முறையான ஆரம்பகால சோதனைகள், மேம்பட்ட சிகிச்சை ஆகியவற்றால் 20% அளவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், ஏழை நாடுகளிலும், இந்தியாவைப் போன்ற வளா்ச்சி அடையும் நாடுகளிலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாததால் 5% அளவில்தான் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
  • இந்தியாவைப் பொருத்தவரை, புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லாதது மிகப் பெரிய பலவீனம். பெரும்பாலும் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் பெருநகரங்களில் மட்டுமே இருப்பதால், ஆரம்பகட்ட கண்டறிதல் இருப்பதில்லை. பெரும்பாலான புற்றுநோய் பாதித்தவா்கள் தரமான சிகிச்சை பெறுவதற்கான பொருளாதார வசதி இல்லாமல் இருப்பது இன்னொரு குறை.
  • எல்லாவற்றையும்விட முக்கியமானது, மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் புற்றுநோய் பரவல் குறித்த விழிப்புணா்வு இல்லாமல் இருப்பது. ஊடகங்கள் மூலம் மட்டும் அல்லாமல், பள்ளிக்கூடங்கள், வேலை பாா்க்கும் இடங்கள் என ஒன்றுவிடாமல் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடத்தப்படுவது அவசியம். ஊராட்சிகளில் தொடங்கி குறிப்பிட்ட காலவரையில் புற்றுநோய் கண்டறிவு முகாம்களை தொடா்ந்து நடத்துவதன் மூலம் பெரிய அளவில் புற்றுநோய் பரவலை தடுத்துவிட முடியும்.
  • நரேந்திர மோடி அரசு, 19 மாநில புற்றுநோய் உயா் சிகிச்சை மருத்துவமனைகளையும் 20 துணை மருத்துவ மையங்களையும் ஏற்படுத்துவதாக அறிவித்தது. அவை கால தாமதமில்லாமல் நிறுவப்பட்டு செயல்படுவது உறுதிப்பட வேண்டும். இந்தியா எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால் புற்றுநோய் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் மாற்றம் அசாத்தியம் அல்ல.

நன்றி: தினமணி (31  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்