TNPSC Thervupettagam

கவனம் பெறாத கதாநாயகர்கள்

December 1 , 2022 705 days 373 0
  • எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) 1965- ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று உருவாக்கப்பட்டு இந்தியா- பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லை என ஏழாயிரம் கிலோ மீட்டருக்கும் மேலான நமது நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வருகிறது. "இந்தியாவின் முதல்நிலை அரண்' (இண்டியாஸ் ஃபர்ஸ்ட் லைன் ஆஃப் டிஃபென்ஸ்) என்ற சிறப்பைப்பெற்ற இது உலகின் மிகப் பெரிய எல்லைக் காவல் படையாகும்.
  • தற்போது 192 படைப் பிரிவுகளை (பட்டாலியன்ஸ்) கொண்ட இது, பீரங்கிப் படைப்பிரிவு (ஆர்ட்டிலிரி ரெஜிமென்ட்), விமானப் படைப்பிரிவு (ஏர் விங்), நீர் படைப்பிரிவு (வாட்டர் விங்), ஒட்டகப் படையணி (கேமல் விங்) போன்ற சிறப்பு படைப்பிரிவுகளையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் வீரர்கள் பணிபுரியும் இப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம்.
  • எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் என்பவை, அமைதிக் காலங்களில் நமது நாட்டின் எல்லையை எதிரி நாட்டிடமிருந்து பாதுகாப்பது. எல்லையை ஒட்டி வாழும் மக்கள் மனதில் பாதுகாப்புணர்வை ஏற்படுத்துதல். எல்லையில் சட்ட விரோத செயல்கள் ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றவையாகும்.
  • போர்க் காலத்தில், ஆக்கிரமித்த நிலங்களைப் பாதுகாப்பது; ராணுவத்திற்கு எல்லையில் வழிகாட்டியாக (கெய்ட்) செயல்படுவது; எல்லையில் அந்நியர் ஊடுருவலைத் தடுப்பது. தகவல் சேகரிப்பு, தாக்குதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுதல்; போர்க் கைதிகளை பாதுகாப்பது; ராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள எதிரி நாட்டின் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது போன்றவை.
  • அரசு விதிமுறைகளின்படி தரைப்படை (ஆர்மி),கடற்படை (நேவி) விமானப் படை (ஏர் ஃபோர்ஸ்) ஆகியவற்றில் பணி புரிந்து ஓய்வு பெறும் படை வீரர்கள் மட்டுமே "முன்னாள் படை வீரர்கள்' (எக்ஸ் சர்வீஸ்மென்) என அழைக்கப்படுகிறார்கள். இதில் பி.எஸ்.எப். வராது.
  • மத்திய அரசு "டைரக்டரேட் ஜெனரல் ரீசெட்டில்மென்ட்' மூலமும், மாநில அரசு "டமில்நாடு எக்ஸ் சர்வீஸ்மென் கார்ப்பரேஷன்) மூலமும் ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு மறு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவ வசதி, குழந்தைகளின் படிப்புக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, சிஎஸ்டி கேண்டீன் வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், எல்லைப் பாதுகாப்பு படையினர் இதுநாள் வரை புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
  • கொடிநாள் நிதி, படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த நிதியானது, முப்படை என்று சொல்லப்படும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
  • நாட்டின் எல்லையில் நின்று எதிரிகளோடு நடக்கும் சண்டையின் போது உடல் ஊனமுற்ற முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கோ எல்லையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நலவாழ்வுக்கோ இந்த நிதி பயன்படாது.
  • ஆண்டிற்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே விடுமுறையில் வரும் இவர்கள் நாட்டைக் காக்க எல்லையிலேயே நின்று எதிரிகளோடு போராடுகின்றனர். ஆனால் பணி ஒய்வு பெற்ற பிறகு இவர்களுக்கு முன்னாள் படைவீரர் அந்தஸ்து, மறு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த ஒரு அங்கீகாரமும் சலுகைகளும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
  • ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு முப்படை வீரர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்குத் தீர்வு காண உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  • ஆனால் இதில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லைப் படை வீரர்களின் குறைகளை கேட்டு உடனே களைந்திருக்க வேண்டாமா? ஆனால் அப்படி நடப்பதில்லை. சட்டத்தில் பாகுபாடுகள் இருக்கலாம். நாட்டைக்காக்க இவர்கள் செய்த தியாகத்தில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதே உண்மை!
  • இதனால் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணிபுரிந்து ஓய்வு பெறும் எல்லை பாதுகாப்பு படையினர் தினக்கூலி வேலைக்கும் கட்டடக் காவலாளி வேலைக்கும் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நமது நாட்டைக் காத்த எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு இப்படி ஒரு அவல நிலை தொடர்வது மிகவும் வருத்தத்திற்குரியது.
  • இனியாவது அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்து ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படையினருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கு கீழ்கண்ட சலுகைகளை வழங்க வேண்டும்.
  • முன்னாள் படை வீரர்கள் அந்தஸ்து, கொடி நாள் நிதி, எல்லை பாதுகாப்பு படையினர் குடும்பத்தினருக்குப் பயன்பட வேண்டும. அவர்களுக்கு மறு வேலைவாய்ப்பு, பிள்ளைகளுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் குறைகளையும் கேட்டறிய வேண்டும்.
  • புகழ்பெற்ற இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களோடு கொடியிறக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி (ரீட்ரீட் செரிமொனி டிரில்) செய்யும் நமது இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையினர்தான். ஆனால், இவர்களின் பணிகளும் தியாகங்களும் சமூகத்தின் கவனத்திற்கு வராமலே உள்ளன.
  • நாம் இதுநாள் வரை கவனிக்கத்தவறிய எல்லை பாதுகாப்பு படையின் இரண்டு தலைமுறைத் தியாகங்களை, வலியை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். புறக்கணிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்காகவும் அவர்களின் நலவாழ்வுக்காகவும் மேற்கண்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான எல்லைப் பாதுகாப்பு படை குடும்பத்தாரின் ஒருமித்த கோரிக்கையாகும்.
  • இன்று (டிச. 1)  எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க நாள்.

நன்றி: தினமணி (01 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்