- தன் பெருமை உணரா எட்டயபுரக் குறுநில மன்னனுக்கும் எட்டுத் திசையிலும் உள்ள தமிழ் மக்களுக்கும், தான் ஒரு ‘கவியரசன்’ எனத் தன்னைத் தானே உரத்து அறிமுகப்படுத்திக்கொண்ட பாரதி, கால ஓட்டத்தில் ‘மகாகவி’ என்று உணரப்பட்டார்.
- மகாகவி ஸ்தானமும் எளிதில் அவருக்கு வாய்த்துவிடவில்லை. பி.ஸ்ரீ., கல்கி ஒருபுறம்; வ.ரா., கு.ப.ரா., ஜீவா, பாரதிதாசன், சிட்டி ஆகியோர் இன்னொருபுறம் என்று பலத்த விவாதங்களுக்கு இடையேதான் மகாகவி மகுடம் பாரதியை அலங்கரித்தது.
- ஆனால் அவர், தான் வாழ்ந்த காலத்திலேயே ‘கவிச்சக்கரவர்த்தி’ என்னும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.
- கவிச்சக்கரவர்த்தி எனப் பெரும் புலவர்களையும் பெருங்கவிஞர்களையும் கொண்டாடுவது தமிழ் மரபு.
- கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப் போட்டியாக ஒட்டக்கூத்தர் வந்த வரலாறும் உண்டு. கம்பனுக்கு இலக்கிய உலகம் அளித்த அந்த அங்கீகாரத்தை, பாரதிக்கும் அவர் வாழ்ந்த காலத்திலேயே இலக்கிய உலகம் வழங்கிவிட்டது.
பாஸ்கரதாஸ் தந்த பட்டம்
- பாரதி வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த, அவரைக் காட்டிலும் பரவலாக மக்களிடையே அறியப்பட்டிருந்த, தமிழர் வாழும் அயல் தேசங்களிலும் கொண்டாடப்பட்ட நாடக இசைக் கலைஞராக, கவிஞராக, இராமநாதபுரத்து அரசர் பாஸ்கர சேதுபதியால் ‘முத்தமிழ் சேத்திர மதுர பாஸ்கரதாஸ்’ என்னும் பட்டத்தைப் பெற்ற மதுரகவி பாஸ்கரதாஸ்தான் மகாகவியை முதன்முதலாகக் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றிக் கொண்டாடிப் பாடல் இசைத்தவர்.
- நமக்குக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் எண்ணிப் பார்க்கையில், மகாகவி பாரதியை முதன்முதலில் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றியவர் மதுரகவி என்னும் மக்கள் கவியே.
- மதுரகவி பாஸ்கரதாஸ் பாரதியை இரண்டு நிலைகளில் – ஒருபுறம், இந்தியா முழுதும் கொண்டாடும் தாகூருக்கு நிகராக வைத்தும், இன்னொருபுறம் கம்பனுக்குத் தமிழுலகம் வழங்கிய அடைக்கொடையாம் கவிச்சக்கரவர்த்தி என்னும் நிலையில் வைத்தும் கொண்டாடியிருக்கின்றார்.
- 1921-ல் வெளிவந்த பாஸ்கரதாஸின் ‘இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம்’ (இரண்டாம் பாகம்) நூல், இந்திய தேசத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரையும் போற்றும் இசைப் பாடல்களின் தொகுதியாகும்.
- இந்தத் தொகுதியில் காந்தி, திரு.வி.க., சத்தியமூர்த்தி, டி.எஸ்.ராஜன், சுப்ரமணிய சிவம், வ.உ.சி., பாண்டித்துரைத் தேவர், ஜார்ஜ் ஜோசப், அரவிந்தர், சத்தியபால் கிச்சலு, அன்சாரி, ஆண்ட்ரூஸ், ஹார்னிமன், தயானந்த சரஸ்வதி, சரோஜினி தேவி, சகோதரி வி.பாலம்மாள், யாழ்ப்பாணம் இராமநாதன் ஆகியோரைப் பற்றியும் இந்திய விடுதலை தொடர்பாகவும் இசைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வடக்கே தாகூர் தெற்கே பாரதி
- பாரதியாரைக் குறித்து இரண்டு பாடல்கள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
- ஒன்று, ‘ஸ்ரீமான் வரகவி சுப்ரமண்ய பாரதியார்’ என்னும் தலைப்பில் அமைந்து, ‘மாலோன் சுப்ரமண்ய பாரதியே வரகவிச் சந்ததியே’ என்ற பல்லவியோடு தொடங்குகின்றது.
- இன்னொரு பாடல்தான் ‘இந்தியாவில் இரண்டு கவிச்சக்கரவர்த்திகள்’ என்னும் தலைப்பைப் பெற்று, தாகூரைக் ‘கல்கத்தாவில் பிறந்த வடஇந்திய கவிச்சக்கரவர்த்தி’ எனவும், ‘கனம் சுப்ரமண்ய பாரதி ஒரு தென்இந்திய கவிச்சக்கரவர்த்தி’ எனவும் பாரதியின் இலக்கியப் பேரிடத்தையும் தாகூருக்கு நிகரான தகுதிப்பாட்டையும் முதன்முறையாகக் கவிதையில் முன்வைத்துள்ளது.
- பாரதி உயிரோடு இருந்தபோதே இந்தப் பாடல் எழுதப்பட்டதா அல்லது இறந்த ஓரிரு மாதங்களில் படைக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்ய இயலவில்லை.
- தாகூரையும் பாரதியையும் இணையாக வைத்தும், பாரதியைக் கவிச்சக்கரவர்த்தி என்று புகழ்ந்தும் அமைந்த இந்தப் பாடல் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடலாக மக்கள் மன்றங்களில், மேடைகளில், இசை உலகில், இலக்கிய அன்பர்களிடையில், ஆங்காங்கு தோன்றிக்கொண்டிருந்த இளம் கவிகளிடத்தில் பெருவழக்குப் பெற்றிருக்க வேண்டும். இதை ஒரு சான்று உறுதிப்படுத்துகின்றது.
- 1926-ல் வெளிவந்த ‘இந்தியா தலைவர்கள் நந்தமிழ் நவீனம்’ என்னும் நூல் தேசத் தலைவர்களையும் தேச பக்தியையும் போற்றும் இசைப் பாடல்களின் தொகுதியாகும்.
- தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, பாலகவி வித்வரத்ன என்னும் அடைமொழி கொண்ட கொ.அ.முஹம்மதிபுறாஹீம் புலவர் படைத்த இந்த நூல் ரங்கூனிலிருந்து வெளிவந்துள்ளது.
- இப்படிப்பட்ட தன்மையில் அமைந்த இசைப்பாடல் தொகுதிகள் இன்னும் சில அந்தக் காலத்தில் வெளிவந்துள்ளன.
- இந்த நூலில் இடம்பெற்ற ‘தேசபக்தி’ என்னும் தலைப்பிலான இசைப் பாடலின் மெட்டுக் குறிப்பு, ‘இந்தியாவி லிரண்டு எங்கும் புகழ்திரண்டு என்ற வர்ணமெட்டு’ என அமைந்துள்ளது.
- இந்தக் குறிப்பு தாகூரையும் பாரதியையும் போற்றும் அந்தப் பாடல் பெற்ற செல்வாக்கையும் தாக்கத்தையும் உணர்த்துகிறது.
- பாரதியாரை முகம்மதிபுறாஹீம் புலவர் ‘ஸ்ரீமான் கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமண்ய பாரதியார்’ என்னும் தலைப்பில் போற்றிப் பாடல் படைத்துள்ளது பாரதியியலில் கவனம் கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி.
- ‘சுப்ரமண்யனே பார் புகழ்ந்திடுங் காருண்யனே’ என்று தொடங்கும் அந்தப் பாடல் மிக நீண்ட பாடலாகவும் அமைந்துள்ளது.
- மதுரகவி பாஸ்கரதாஸை அடியொற்றி இந்தப் புலவரும் பாரதியைக் கவிச்சக்கரவர்த்தி என்று கொண்டாடியுள்ளார் எனக் கொள்ளலாம்.
மக்களின் அங்கீகாரம்
- பாஸ்கரதாஸ், இபுறாஹீம் புலவர் எனக் கவிஞர்கள் மரபில் மட்டுமல்லாமல் பொது நிலையில் உள்ளவர்களும் பாரதியைக் கவிச்சக்கரவர்த்தி என அவர் மறைந்த ஓரிரு ஆண்டுக்குள்ளேயே உணரவும் அழைக்கவும் தொடங்கிவிட்டனர்.
- பாரதி அடைக்கலம் புகுந்திருந்த புதுவையிலிருந்து அவர் மறைந்த ஓராண்டு இடைவெளியில் வெளிவரத் தொடங்கிய இதழ் ‘ஆத்மசக்தி’. பாரதிதாசனின் பல தொடக்க காலக் கவிதைகள் வெளிவந்த இதழ் இது.
- பாரதியுடன் பழகிய இளைஞர் தி.ந.சந்திரன் ஒரு சந்தர்ப்பத்தில் பழகிய நினைவைப் பகிர்கையில், ‘தமிழ்நாட்டுக் கவிச்சக்கரவர்த்தியான ஸி.சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரியில் வசிக்கையில்’ என்று தொடங்கிப் பதிவுசெய்திருந்தார்.
- இந்தப் பதிவு 1923 அக்டோபரில் வெளிவந்ததாகும். கவிஞர்களிடம் மட்டுமல்லாமல் இலக்கிய ஈடுபாடு, தமிழன்பு கொண்ட பொதுநிலை மனிதர்களிடமும் பாரதியைக் கவிச்சக்கரவர்த்தி என அழைக்கும், போற்றும் வழக்கம் நிலவியது என்பதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.
- இந்த வரலாற்றில் முக்கியமான பதிவொன்று: தமிழில் கவிதைக்கென்றே வெளிவந்த முதல் இதழ் “ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டலம்”. பாரதிதாசன் 1935-ல் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்திய இதழ்.
- அதில் அவர் பாரதியின் நூல் வடிவம் பெறாக் கவிதையொன்றை மீள்பிரசுரம் செய்யும் இடத்தில் “நமது கவிச்சக்கரவர்த்தி பாரதியாரின் அநேக எழுத்துக்கள் மறைந்துபோய்க் கிடந்தன” எனக் குறித்திருந்தார்.
- பாஸ்கரதாஸ் மட்டுமல்ல, பாரதிதாசனும் தம் ஆசிரியரைக் “கவிச்சக்கரவர்த்தி” எனக் கொண்டாடியிருக்கின்றார்.
- இறுதியாக, ஒரு சுவையான செய்தி. பாரதியை உ.வே.சாமிநாதையர் அங்கீகரிக்கவில்லை என்ற தொடர் முணுமுணுப்பு தமிழுலகில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாரதியை உ.வே.சா. அங்கீகரித்திருக்கிறார் என்பதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன.
- 1936-ல் உ.வே.சா. ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில், ‘எட்டயபுரம்ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரை உலகம் நன்கறியும். பாரதியென்றால் அவரேயென்று குறிப்பிடும் பெருமை வாய்ந்தவர் அவர். பெரியோர் முதல் பாலர் ஈறாக எல்லோராலும் நன்கறியப்பட்ட தகுதிவாய்ந்தவர். எனக்கு மிக்க பழக்கமுள்ளவர்’ எனத் தனக்கும் பாரதிக்குமான தொடர்பைக் குறிப்பிட்டிருக்கிறார்.
- உ.வே.சா.வின் அணிந்துரை பெற்ற அந்த நூலின் தலைப்பு ‘கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்’ என்பது.
- பாஸ்கரதாஸ் தொடங்கிவைத்த ‘கவிச்சக்கரவர்த்தி’ பட்டத்தை உ.வே.சா.வும் அங்கீகரித்திருக்கிறார். தமிழில் கம்பனுக்கு அடுத்த கவிச்சக்கரவர்த்தி பாரதிதான் என்ற உண்மை ஓங்கி ஒளிபெறட்டும்.
நன்றி: தி இந்து (11-12-2020)